நேற்றைய நாள் மறக்கப்படவே முடியாத பொன்னாள்! கோவையே குலுங்கியது! இரட்டைக் குழல் துப்பாக்கிகளான திராவிடர் கழகம் – தி.மு.க. ஆகியவற்றின் கொடிகள் எத்திசை பார்த்தாலும் பட்டொளி வீசிப் பறந்தன. கழகக் கொடிகளின் காடாய்க் காட்சி அளித்தன.
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளும், ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட சரித்திர நாயகர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தன்னிகரற்ற தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டு விழாவும் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் நடைபெற்ற இரு பெரும் விழாக்கள்தான் அவை!
மழைக்காலம் என்பதால் எங்கே நிகழ்ச்சி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் டென்சில் சீட்டால் பிரமிக்கத்தக்க கொட்டகை கலை வண்ணத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.
கோவையில் திராவிடர் கழக மாநாடோ என்று யாரும் கருதும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
‘பெரியார் அறிவுலகம்’ ரூபாய் 301 கோடியே 71 லட்சம் செலவில் கட்டுப்பட்ட பிரமாண்டமான எழில் மாளிகையாகும். கட்டுமானப் பரப்பளவு 1.98 லட்சம் சதுர அடி, நிலப்பரப்பில் 6.98 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் அல்லாமல் 7 மாடி கொண்டதாக அமைக்கப்பட்டது. நூல்களின் எண்ணிக்கை ஒரு லட்சம், மின்னணு நூல்களும் உண்டு.
தரைத்தளம் 356 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; மாற்றுத் திறனாளிகளுக்கான நூலகப் பகுதி, 90 இருக்கைகள் கொண்ட கோளரங்கம்.
யூ.பி.எஸ்.ஸி, டி.என்.பி.எஸ்.ஸி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், தமிழ்ப் புத்தகப் பிரிவு, பருவ இதழ்கள் பிரிவு, அறிவியல் மய்யம், திறந்த வெளி முற்றம், மின்னணு நூலகம், தொழில் முனைவோர் மய்யம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
450 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி; மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள்!
தந்தை பெரியார் பெயரில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தளகர்த்தர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரும் பெரும் அறிவுக் கருவூலம் இது!
மக்கள் மத்தியில் மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைகளை ஒழித்த – ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பினை அடையாளம் காட்டி, அதிலிருந்து இம்மண்ணுக்குரிய மக்களை மீட்டெடுத்த – 95 வயது வரை தொண்டு செய்து பழுத்த பழமான, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெயரில் ‘பெரியார் அறிவுலகம்’ எ்னற காலங் காலமாக நிலைத்து நிற்கும் எண்ணங்கள் மலரும் அறிவுத் தோட்டத்தை உருவாக்கிய ஒருவருக்கு வெறும் பாராட்டு நடத்துவது மட்டும் போதுமா?
எதையும் நுண்மான் நுழைபுலத்தோடு சிந்திக்கும் திராவிடர் கழகம் நன்றி பாராட்டும் வரலாற்று விழாவாக திராவிடர் கழகம் கோவையில் நடத்தியது.
அத்தகைய விழாவில் விழா நாயகராக தமிழ் மக்களின் நன்றிக்குரிய தளபதி மானமிகு மு.க. ஸ்டாலினும், 94 வயதை நெருங்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும் பங்கு கொள்கிறார்கள் என்றால் அது சாதாரணமா?
அந்தக் காணரும் காட்சியைக் காணவும், அவர்கள் அளிக்கும் கருத்து விருந்தைக் கேட்டுச் சுவைத்து அசை போடவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நன்றியுள்ள மக்கள் திரண்டிருந்தனர்!
கருத்துத் தேனீக்கள் பறந்து வந்திருந்தன.
தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவார்ந்த பாராட்டுடன் கூடிய கொள்கைப் பாச மழையைக் கொட்டினார்.
ஏற்புரை வழங்கிய தளபதி மு.க. ஸ்டாலின் நெஞ்சுருகிப் போனார்; அவர் ஏற்புரை அதனைப் பிரதிபலித்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டு என்ற அன்பு முத்தம் பொழிந்தார் என்று அவர் சொன்னபோது, ஆயிரக்கணக்காகக் கூடியிருந்த மக்களின் உணர்ச்சி மிகுந்த கரவொலி விண்ணைப் பிளந்தது (இருவரின் பேச்சும் முழுமையாக வேறு பக்கத்தில்).
கோவை மாநகரம் எத்தனை எத்தனையோ மாநாடுகளை, விழாக்களைக் கண்டுள்ளது. அந்த வரலாற்று விழாக்களில் நேற்றைய விழாவும் கைகோர்த்து விட்டது.
அதே கோவையில் செம்மொழிப் பூங்காவை முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2010 ஜூன் 23 முதல் 27 முடிய 5 நாட்கள் கோலாகலமாக நடத்தியதுண்டு.
அதுவும் பண்பாட்டு மறுமலர்ச்சித் திசையில் முக்கிய கல்வெட்டுகள்தான்.
அதே போல கோவையில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட இரு பெரு விழாக்களும் குறிப்பிடத்தக்கதாக வரலாற்றில் வைரக் கல்லாக மின்னும்.
காலை முதல் கோவையில் கருஞ்சட்டைத் தோழர்களும், தி.மு.க.வினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வாசிப்புக் குணம் கொண்டோரும், ஊடகத் துறைகளைச் சார்ந்தவர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்களும் நிரப்பி வழிந்தனர்.
விழாவில் பங்கேற்க வந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் கழக முன்னணியினரும் ‘பெரியார் அறிவுலகத்தை’ சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
ஏழு மாடிகளிலும் குறிப்பாக மாணவ, மாணவிகளும் வழிந்தனர். கோவைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டென்றாலும், இந்த அறிவுசால் பெரியார் அறிவுலகம் காலத்தை கடந்தும் நின்று நிலைத்து அறிவுச் சுடராய் ஒளியை வீசிக்கொண்டே இருக்கும்.
இந்த மாபெரும் சாதனைச் சரித்திரத்தை மேனாள் முதலமைச்சர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், அந்த அறிவு வெளிச்சத்தில் மறையாமல் புன் சிரிப்போடு காட்சி அளித்துக் கொண்டே இருப்பார்!
வாழ்க தந்தை பெரியார்!
வெல்க திராவிடம்!!
