படங்கள் அல்ல பாடங்கள்! சிலைகள் அல்ல சீலங்கள்!

4 Min Read

சென்னையில் வேலை வழிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசுகையில், “ஒரு குழந்தை நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு முயற்சி செய்தது. நாங்கள் ‘நீட் வேண்டாம்’ என்று சொல்வதற்கான காரணம் இதுதான். நான்கு ஆண்டுகள் முயற்சி செய்த பிறகும், நான்காவது ஆண்டில் கூட அந்த மாணவிக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அந்த மாணவி நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அவரிடம், ‘நீங்கள் கண்டிப்பாக சட்டப் படிப்புக்குச் செல்லுங்கள். வழக்கறிஞராகுங்கள். அதைவிட சிறந்த தொழில் வாய்ப்பு கிடைக்கும்’ என்று நான் அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

இன்று அதிக மதிப்பெண்கள் பெற்று பலர் பொறியியல் படிக்கிறார்கள். ஆனால், பொறியியல் பட்டம் முடித்த பிறகு அதற்கேற்ற தொழில்முறை மதிப்பும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் இல்லை. தற்போது திறமையான தச்சர்களுக்கே (Carpenter) அதிகத் தேவை உள்ளது. இன்று ஒரு தச்சரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்றாலும், குறைந்தது ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, எல்லா தொழில்களுக்கும் மதிப்பும் தேவையும் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலையும் ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும், ஒரு மதிப்புமிக்க தொழிலாகவும் கருத வேண்டும்” என்று பேசியுள்ளார்.

எல்லா தொழிலையும் மதிப்புமிக்க தொழிலாகக் கருதலாம் என்பதே உண்மையா?

“மலம் அள்ளுவது. சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள். அந்தப் பணியைச் செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்தமான சமூகத்திற்கும். கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்!” என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்ட தொழில்களைத் தெய்வமாகக் கருதச் சொல்லி, தனது ‘கர்ம யோக்’ புத்தகத்தின் வாயிலாக நாக்கில் தேன் தடவினார் அன்றைய குஜராத் முதலமைச்சரும், இன்றைய இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடி. அதைக் கண்டித்து, அந்தப் புத்தகத்தை எரிக்கும் போராட்டத்தை 11.12.2007-இல் நடத்தியது திராவிடர் கழகம்.

“ஏன் உன் மகனை எம்.ஏ. பி.ஏ. படிக்க வைக்கிற? உன் கிட்டதான் தொழில் இருக்கே. அதையே செய்யச் சொல்” என்று ஒரு சலவைத் தொழிலாளியிடம் தான் அறிவுரை கூறியதைப் பெருமையாக மேடையில் பேசினார் வி.ஹெச்.பி.யின் பொறுப்பாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் என்ற பார்ப்பனர். இவையெல்லாம் ஒரே சரடில் வருகின்றனவே! இதுதான் தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க.வின் கொள்கைப் பார்வையா?

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்து மக்கள், மாணவர்கள் ஏன் படிக்க வேண்டும்? ஏன் டாக்டராக வேண்டும்? ஏன் பிளம்பர் வேலை பார்க்கக் கூடாது? ஏன் எலக்ட்ரீசியன் ஆகக் கூடாது? என்னும் கேள்வியை இதே நபர்கள் பார்ப்பனர்கள் கூடியிருக்கும் அவையில் கேட்பார்களா? பார்ப்பன மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்களா? காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டு, உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவே கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், திராவிட இயக்கத்தின் பலனால் இன்று தான் கல்வி கற்று, அறிவியலாளர்களாக, பேராசிரியர்களாக, அதிகாரிகளாக வலம் வருகிறார்கள்.

அவர்களை மருத்துவத் துறைக்குள் நுழைய விடாமல் தடுக்கத் தான் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தத் தடையைத் தகர்த்து, மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் அனுப்புவதுதான் உண்மையான சமூகநீதிப் போராளிகளின் இடையறாத போராட்டமே அன்றி, “நீ ஏன் மருத்துவம் படிக்க விரும்புகிறாய்? அது மட்டும்தான் படிப்பா?” என்று கேட்பதல்ல. இது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் கருத்தா? அல்லது த.வெ.க.வின் கருத்தா? இதே போன்ற ஒரு கருத்தைக் கடந்த ஆண்டு (2025) மாணவர்களுக்குக் கல்வி விருது  வழங்கும் விழாவில் த.வெ.க. தலைவர் ச.ஜோசப் விஜய், “ஒரே ஒரு படிப்பை வைத்து மாணவர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். நீட் மட்டும் தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு” என்று தெரிவித்த போதே கடும் கண்டனங்கள் எழுந்தன. நீட் தேர்வைத் தாண்டி இந்த உலகம் பெரியது தான். ஆனால், நீட் என்னும் தடையைத் தாண்ட முடியாமல் வைத்திருப்பது யார்? அந்தத் தடையைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு யாருடையது? மாணவர்களை, இளைஞர்களை அதிகாரத்தை நோக்கி வழிநடத்தாமல், உடல் உழைப்பு வேலைகளை நோக்கி வழிநடத்துவது ஏன்?

ஒருபுறம் ‘நீட்’ எதிர்ப்புப் பயணம் மேற்கொள்ளத் தடை, இன்னொரு புறம் ‘மருத்துவம் மட்டும் தான் படிப்பா?’ என்னும் கேள்வி. இந்த அரசு எந்தத் திசையில் செல்கிறது என்பதை இத்தகைய நடவடிக்கைகள் காட்டவில்லையா?

சமூகநீதிக்காகக் கடைசி வரை போராடிய தத்துவத் தலைவர் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, மருத்துவக் கல்வியில் ராஜாஜி செய்த சூழ்ச்சியைத் தகர்த்த கல்வி வள்ளல் காமராசரும் கொள்கைத் தலைவர்கள் என்று அறிவிக்கும் ஒரு கட்சி, ஓர் ஆட்சி, கொள்கைத் தலைவர்கள் என்று வாய்மொழியில் சொல்வது மட்டும் போதாது. அவர்கள் வெறும் சிலைகள் அல்லர்; படங்கள் அல்லர்! அவர்கள் சீலங்கள்; அவர்களின் கொள்கைகளே பாடங்கள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *