அய்தராபாத், நவ. 4- இந்திய மாணவர் சங்க (எஸ்எப்அய்) ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னிச்சையாக முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இதுவரை தெளிவாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “இந்திய மாணவர்சங்கத்தின் (எஸ்எப்அய்) ஆந்திரப் பிரதேசமாநிலக் குழுவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னிச்சையாக முடக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல்களை நசுக்கும் கவலைக்குரிய போக்கை சுட்டிக்காட்டுகிறது. முடக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கையானது, கல்வி உரிமைகள், மாணவர் போராட்டங்கள் மற்றும் வளாகப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களைப் பெற ஆந்திரப் பிரதேசம் முழுவதிலும் எஸ்எப்அய் இன்ஸ்டாகிராம் தளத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் குரல்களை மவுனமாக்குகிறது. இந்த முடக்க நடவடிக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைப்பாக ஒன்றிணையும் உரிமையின் மீதான நேரடித் தாக்குதலாகும்” எனஇந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம்
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
சென்னை, நவ. 4- பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (3.11.2026) நடக்க இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடிதம் மூலம் அழைப்பு விடுத்தால்தான் கலந்துகொள்வோம் என மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அப்பகுதியில் உள்ள மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மீன்வளத்துறை சார்பில், மீனவ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று (3.11.2026) சென்னை செயலகம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. அதில், ஒவ்வொரு அமைப்பின் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் வந்து பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமான அழைப்பு வராத நிலையில் மயிலை பகுதிக்கு உட்பட்ட 14 மீனவர் கிராமங்கள் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என நேற்று கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை நாளைக்கு (5.11.2026) ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் தங்களுக்கு வரவில்லை என்றும் கடிதம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்றும் மயிலைப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் காடுகள் அழிந்தால்
தமிழ்நாட்டின் மழைபொழிவு குறையும் அபாயம்!

சென்னை, நவ. 4- மேற்குத்தொடர்ச்சி மலை கன்னியாகுமரியில் தொடக்கி, தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, கோவா, மராட்டியம், குஜராத் வரைப்பரவியுள்ளது. சுமார் 1600 கிலோ மீட்டர் நிலமும் 1.60 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட இந்த மலைத்தொடரில் உள்ள, சோலை காடுகளே பருவமழை ஆதாரங்களாக இருந்தது வருகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலையில் கருநாடகாவின் வனப் பரப்பு 34% ஆகவும், மகாராட்டிராவின் வனப்பரப்பு 25.9% ஆகவும் உள்ளது. அதை தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, குஜராத், கோவா மாநிலங்களின் வனப் பரப்பும் அமைந்துள்ளனர், இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் கனிம வளத்துக்காகயும் முக்கிய திட்டங்களுக்காகவும், வனப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால் இயற்கை வளம் அழிந்து நிலச்சரிவு போன்ற பேரிடர்களும் ஏற்பட்டு வருகின்றனர்.
காடுகளில் மரங்கள் அளிக்கப்படுவதால், பருவ மழை பொழிவிலும் பெரும் தாக்கம் ஏற்படுவதாக, மும்பை அய்அய்டி மற்றும் சிஎஸ்அய்ஆர் நிறுவனங்கள், மேற் கொண்ட ஆய்வுகள் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கெனவே தென் மாநிலங்களில் பருவமழை பொழிவுவில் ஏற்பட்டுள்ள, மாற்றத்திற்கு மராட்டிய மாநிலத்தில் 13,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும், நீர்மின் திட்டத்திற்காக மரங்கள் அளிக்கப் பட்டதும் முக்கியக் காரணமாக கண்டறிய பட்டுள்ளது. 377 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்படும், இந்த திட்டத்திற்காக சயாத்திரி வனப்பகுதியில் 31,000 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டு 1,200 மரங்கள் வெட்டப் பட்டுள்ளன.
இதனால் அங்கு காற்றின் ஈரப்பதம் குறைந்து அதன் கிழக்குப் பகுதி வரை வெளிப்பட்டிருக்கலாம் என்றும் நீர்நிலைகள் மற்றும் வளிமண்டலத்தில் இருக்கும் நீர் ஆவியாகி கீழ்த்திசை காற்றுடன், காவிரிப்படுகையை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்பதன் காரணமாக, தென் மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரிப்பதோ, குறைவதோ நிகழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மரங்கள் வெட்டபடுவதின் காரணமாக, தமிழ்நாட்டில் வெப்பநிலையில் உயர்வு இருக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
