பொதுத்தொண்டு செய்பவர் மருத்துவர் வெங்கடேஷ் முத்துக்கிருஷ்ணன்! புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு

3 Min Read
- Advertisement -

சென்னை, நவ.3 “தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று இருக்காமல் திராவிடத்தின் தேவையை உணர்ந்து பொதுத்தொண்டு செய்து வருபவர் மருத்துவர் வெங்கடேஷ் முத்துக்கிருஷ்ணன் அவர்கள்” என்று, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் புகழ் மாலை சூட்டி உரையாற்றினார்.

புதுமை இலக்கியத் தென்றலின் 1,120 ஆம் நிகழ்வாக, “பெரியாரை உலக மயமாக்குவதன் அவசியமும்! அவசரமும்!” எனும் தலைப்பில் நேற்று (2.11.2026)   மாலை 6:30 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் செ.தனராசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அவ்வமைப்பின் தலைவர், பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். இங்கிலாந்து நாட்டில் யார்க்ஸ்சயர் மாகாணத்தில், ‘முதியோர் மனநல மருத்துவ ஆலோசகராக’ பணியாற்றி வரும் மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மோகனா வீரமணி அம்மையார், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மருத்துவர் மீனாம்பாள், பிரின்சசு  பேராண்டாளு மங்கை, கிராமப்புற பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், வழக்கறிஞர் பாண்டியன், காரைக்குடி சாமி சமதர்மம், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார்.

கழகத் தலைவர் தமது உரையின் தொடக்கத்தில், “வெளியில் புயல்? பெரியார் திடலுக்குள் புதுமை இலக்கியத் தென்றல்! என்று, கவித்துவமாகக் குறிப்பிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களையும், வந்திருந்த பார்வையாளர்களையும் பாராட்டினார். ‘அடாது மழை பெய் தாலும் விடாது நாடகம் நடக்கும்’ என்று, தான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது நாடகத்திற்காக போடப்படும் துண்டறிக்கையில் குறிப்பிடப்படும் தகவலை இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, “திராவிடத்தின் அருமையை முழுமையாக உணர்ந்து கொண்ட மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் அவர்கள், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று வாழாமல் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்புவதையே ஒரு தொண்டாகக் கருதி பணிசெய்து வருபவர்” என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, படக்காட்சி களுடன் (PPT) சிறப்புரையாற்றிய, முதியோர் மனநல மருத்துவ ஆலோசகர் மருத்துவர் வெங்கடேஷ் முத்து கிருஷ்ணன் அவர்கள், உலகளவில் ஒரு சிலரின் கைகளில் பொருளாதாரத்தின் பெரும் பகுதி இருப்பதால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை தரவுகளுடன் சுட்டிக்காட்டி, இந்த பெரும் ஆபத்திலிருந்து மீள்வதற்கு, “இளம் போராளி நேஹா போரா‌, மேனாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோரின் கருத்துகளையும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘மனிதர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி?’ என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்த, அமெரிக்க உளவியல் பேராசிரியர் சோனியா லைபோமிர்க்சி (Sonia Lyubomirsky)  . எழுதிய, ‘The How of Happiness’ எனும் புத்தகத்தில் இடம் பெற்ற அரிய கருத்துகளையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார். “பிறருக்குத் தொண்டு செய்வதிலிருந்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று, இந்தப் புத்தகம் வெளி வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் இதே கருத்தைக் கூறியிருப்பதை உணர்த்தியும், ஆகவே, பெரியாரை உலகமயமாக்குவதன் அவசியமும் அவசரமும் இருப்பதை சுட்டிக்காட்டியும், தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் பொருளாளர் மு.இரா.மாணிக்கம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தோழர் வை.கலையரசன், பூவை  மகளிரணித் தோழர்கள் செல்வி, மாட்சி, பெரியார் மாணாக்கன், பெரியார் பெருந்தொண்டர் வீரபத்திரன், பெரியார் பிஞ்சு புத்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *