* சிதம்பரம் நடராஜன் கோயில்பற்றி நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஈ.மனோகரன் ஆகியோரின் தீர்ப்பு முக்கியமானது – வரவேற்கத்தக்கது!
* சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல என்று ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர், ஜஸ்டிஸ் எச்.எச்.ெஷப்பர்டு ஆகியோர் தீர்ப்பிலும் கூறியுள்ளனர்!
சிதம்பரம் நடராஜன் கோயில்பற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 30 ஆம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கோயிலை நிரந்தரமாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
30.10.2026 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் (ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் ஈ.மனோகரன்) இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிதம்பரம் நடராஜன் கோயில் பொது தீட்சதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவர்களது சட்ட மீறல்களும், சட்ட விரோதச் செயல்களும் தன்னிச்சையான, கோயில் வருமானத்தில் வசூல் கணக்கு, சொத்துப் பரிபாலனம் உள்பட, கடந்த 12 ஆண்டுகளாக பல வகைகளில் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டி, அதன் நிர்வாகத்தைப் பொது தீட்சதர்களிடமிருந்து எடுத்து, ஓய்வு பெற்ற இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் வி.பாரதிதாசனை நிர்வாகக் குழுத் தலைவராகவும், ஜஸ்டிஸ்
ஆர்.சுரேஷ்குமாரை கூட்டுத் தலைவராகவும் மற்றும் சி.ராஜேந்திரன் அய்.ஏ.எஸ். (ஓய்வு), அரசின் இந்து அறநிலையத் துறை செயலாளர் ஒரு எக்ஸ்-அஃபீசியோ குழுக்களாக நியமித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது, மிகவும் வரவேற்கத்தக்க நல்ல தீர்ப்பாகும்.
சிதம்பரம் கோயில் பொதுத் தீட்சதர்களுக்கே சொந்தம் என்று தங்களது செல்வாக்குக் காரணமாகவும், அவர்கள் ‘தானடித்த மூப்பாகவே’ நடந்து, சர்வ கொள்ளைகளுக்கு பக்தி, பாரம்பரிய கட்டுக்கதைகள் மூலமே தங்களது தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள்!
தீட்சதர்களின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போராட்டங்கள்!
தங்கள் இஷ்டம்போல் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு, சட்ட விரோத நியாய விரோத குழந்தைத் திருமணங்களை நடத்தி வருவது போன்ற ஒரு தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தி வருவது கண்டு, குமுறாத பக்தர்களும், பொதுவானவர்களும் இல்லை! முன்னாள் அமைச்சர்கள், நகராட்சித் தலைவர்கள், சிதம்பரம் பெருமக்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்!
இந்தப் பிரச்சினையில் மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், சிதம்பரம் மேனாள் நகர மன்றத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மனித உரிமைப் பாதுகாப்புப் மய்யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விருத்தாசலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.ராஜூ ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது.
குறிப்பாக இன்று 101 ஆவது ஆண்டில் உள்ள முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் அவர்கள் தலைமையில், சிதம்பரம் நகர மக்கள் குழு பல ஆண்டுகளாகத் தங்களது எதிர்ப்பை நடத்தியே வந்தது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, அறநிலையத் துறைக்கே வராமல் அக்கோயில் பொதுத் தீட்சதர்களின் ஆளுமைக்கே உரிமை என்பது எப்படி பச்சை மோசடி என்பதை சிதம்பரத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி, அம்பலப்படுத்தினோம் (எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்த காலம் அது. அவ்வுரை, ‘சிதம்பர ரகசியம்’ என்ற நூலாகவே பல பதிப்புகள் வெளியாகின).
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள், இக்கோயிலை சட்ட விரோதமாக தீட்ச தர்கள் நடத்தி வருவதுபற்றி ஒரு சிறப்பான நூலையும் எழுதியுள்ளார்.
இதை உடனடியாக செயல்படுத்த, அரசு முனையவேண்டும். சம்பந்தப்பட்ட ஆளுமைக் குழுவை செயல்படவிடாமல் செய்ய அத்தனை முயற்சிகளையும் பொது தீட்சதர்கள் கூட்டம் செய்ய முனையும். பொறுப்பை ஏற்பதற்குத் தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை இதற்கு முழு ஒத்துழைப்புத் தருவதற்குத் தயக்கம் காட்டக்கூடாது!
‘பனிப்பாறையின் முனை’தான் இப்போது தெரிகிறது; உள்ளே புகுந்து ஆளுமைக் குழு ஆராய்ந்து கடமையாற்றத் தொடங்கினால், பல அதிர்ச்சிக்குரிய செயல்களும், நடந்த சூழ்ச்சிகளும் கூட வெளிச்சத்திற்கு வரக் கூடும்!
கைக்கு எட்டினால் மட்டும் போதாது!
வாய்க்கும் எட்டவேண்டுமல்லவா?
துணிந்து நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்குப் பாராட்டுக் கூறுவர் – நியாயத் தராசை எதிர்ப்பார்க்கும் எல்லோரும்!
தீட்சதர்களின் சொத்தல்ல – சிதம்பரம் நடராஜன் கோயில்!
தீட்சதர்கள் சிதம்பரம் நடராஜன் கோயிலின் உரிமை யைக் கொண்டாடுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.டி.முத்துசாமி அய்யர், நீதிபதி எச்.எச்.ெஷப்பர்டு ஆகியோர் அளித்த தீர்ப்பு:
மேல்முறையீட்டு வழக்கு எண்கள் AS Nos.108 மற்றும் 159 of 1888 தீர்ப்பு நாள்: 17.3.1890.
தீர்ப்பின் சாரம்!
தீர்ப்பின் சாரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களின் தனிப்பட்ட சொத்து என்பதற்கு ஆதாரம் இல்லை. அது தொன்று தொட்டு பொதுமக்கள் வழிபடும் இடமாக இருந்துவந்துள்ளது.
‘ஜூனியர் விகடனின்’ படப்பிடிப்பு!
29.9.2024 நாளிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. ‘‘2000 ஏக்கர் கோயில் நிலம் விற்பனை! கடுகடுத்த நீதிமன்றம் – சிக்கலில் சிதம்பரம் தீட்சதர்கள்!’’ என்ற தலைப்பில் விரிவான தகவல்களை வெளியிட்டு இருந்தது. சிதம்பரம் தீட்சதர்கள் தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் இல்லை.
சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் (2.2.2009).
தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி ஆவார்.
2.2.2009 இரவு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
தீட்சதர்கள் கொடுத்த
வரவு – செலவு!
நீதிபதி பானுமதி வழங்கிய தீர்ப்பில் 93 ஆவது பத்தியில் ஒரு புள்ளி விவரம் காணப்படுகிறது. நீதி மன்றத்தில் தீட்சதர்கள் அளித்த கோயில் வரவு – செலவு சம்பந்தமாக அளித்த புள்ளி விவரம்:
2007 ஆம் ஆண்டு வருமானம் ரூ.37,199, ஆண்டு செலவு ரூ.37,000. கையிருப்பு ரூ.199.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்தக் கணக்கைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
முறையான கணக்கில்லையா –
நீதிபதியின் கருத்து!
நீதிபதி பானுமதி அவர்கள் இதுகுறித்து தெரிவித்த கருத்தாவது:
‘‘உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தரும் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.37,199 எனக் காட்டப்பட்டிருப்பதும், அதில் ரூ.37,000 செலவாகக் காட்டப்பட்டிருப்பதும், முறையாக கணக்கைப் பராமரிப்பது இல்லை’’ என்பதற்கான முதற்கட்ட அறிகுறியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குமேல் என்ன வேண்டும்? 2009 ஆம் ஆண்டில் நீதிபதி பானுமதி வழங்கிய தீர்ப்பும், கடந்த 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஈ.மனோகரன் ஆகிய இருவரும் பங்கு கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பும் ஒத்துப் போவது வெள்ளியிடை மலையாகவே தெரிகிறது.
கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சதர்கள்!
கோயிலின் மரபு, சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றியெல்லாம் வாய் நீளம் காட்டும் தீட்சதர்கள், கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.
அதனைப் படம் எடுத்த வி.சி.க. தொண்டரிடம் தீட்சதர்கள், ‘‘இது எங்கள் இடம்; எங்கள் அனுமதி யில்லாமல் நுழையக் கூடாது – படம் எடுக்கக் கூடாது’’ என்று கூறியதோடு நிற்காமல், கையைப் பிடித்துத் திருகி, கைப்பேசியையும் பறித்திருக்கிறார்கள். இழி வாகப் பேசி, நெஞ்சிலும் குத்தியுள்ளனர்.
இது தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. 8.6.2024 மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
கனகசபை மேடையில் தேவாரம், திருவாசகம் பாடிய வயது முதிர்ந்த ஓதுவார் ஆறுமுகசாமியை, தீட்சதர்கள் அடித்ததால், அந்தப் பெரியவரின் கை முறிந்ததுண்டு.
இதுதான் ஆன்மிகம் தவழ்ந்தோடும் சிதம்பரம் நடராஜன் கோயிலின் யோக்கியதை!
இவ்வளவுக்கும் அந்தக் கோயிலைக் கட்டும் பணி யில் ஒரு செங்கல்லையாவது எடுத்துக் கொடுத்தி ருப்பார்களா, இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள்?
இதற்குப் பிறகாவது, நீதிபதிகள் கடந்த 30 ஆம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், தொடர்ந்து கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்கள் செய்துவரும் தில்லு முல்லுகளையும், கோயில் நடைமுறையில் தானடித்த மூப்பாக அவர்கள் நடப்பதையும் கவனத்தில் கொண்டு, இந்து அறநிலையத் துறையின் நிரந்தரக் கட்டுப்பாட்டின்கீழ் சிதம்பரம் நடராஜன் கோயில் நிலை நிறுத்தப்படுவது அவசியம்! அவசியம்!!
இன்னொன்றும் முக்கியமானது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த நந்தன், நடராஜன் கோயில் தெற்கு வாசல் வழியாகக் கோயிலுக்குள் சென்றார் என்று கூறி, அந்த வாசலை நிரந்தரமாக மூடி வைத்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத குற்றமாகும்.
தீண்டாமை எந்த வகையில் கடைப்பிடிக்கப்பட்டா லும், அது தண்டனைக்குரியது என்று இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 17 ஆவது பிரிவு கூறுகிறது.
தேவைப்பட்டால் இந்தச் சட்டப் பிரிவையும் பயன்படுத்தி, மூடப்பட்டு இருக்கும் கோயில் தெற்கு வாசலை நிரந்தரமாகத் திறந்து வைப்பதிலும் தமிழ்நாடு அரசு முனைப்பாக செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.11.2026
