குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட கலால் கூடுதல் அமர்வு நீதிமன்றம், பசுவதை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா
ரூ.3 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
277 கிலோகிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கா விட்டால் “தாய் பசுக்கள் அழியும் அபாயம் ஏற்படும்” என்றும், மனுஸ்மிருதி மற்றும் வேதங்கள் போன்ற மத நூல்களை மேற்கோள் காட்டியும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஒரு நவீன, மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றம், குடிமக்களுக்கு ஆயுள் தண்டனை போன்ற கடுமையான தண்டனையை வழங்குவதற்கு ஆன்மிக மற்றும் மத நூல்களை அடிப்படையாகக் கொள்வது ஏற்க முடியாதது.
ஜனநாயக நாட்டின் மதச் சார்பற்ற அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட வேண்டும். மாறாக, மத நூல்களின் அடிப்படையில் தீர்ப்புகள் அமையும்போது, அவை ‘சட்டத்தின் நீதிமன்றங்களாக’ செயல்படுவதை விடுத்து ‘மத நம்பிக்கையின் நீதிமன்றங்களாக’ மாறும் அபாயம் ஏற்படுகிறது.
‘மத நிந்தனைச் சட்டங்கள்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் குறிப்பிட்ட மத நம்பிக்கை களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் வளைக்கப்படுவதும், அதற்கு மத நூல்கள் சான்றாகக் காட்டப்படுவதும் பிற்போக்குத்தனமான நிலையையே காட்டுகிறது. தீவிரவாத அல்லது மத அடிப்படைவாத அமைப்புகளை விமர்சிக்கும் அதே வேளையில், சொந்த நாட்டின் நீதியமைப்பில் மதக் கருத்துகள் மேலோங் குவதைக் கொண்டாடுவது இரட்டை நிலையின் உச்சமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை என்பது மதக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் களமாக இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும் அரணாக மட்டுமே விளங்க வேண்டும். மத நம்பிக்கைகளின் அடிப்படையில் சட்டங்கள் இயங்கத் தொடங்கினால், அது மக்களாட்சிக்கு பேராபத்தாக முடியும்.
மனுதர்மம் மற்றும் மத நூல்கள் கூறியவற்றின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கிய நிலை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது சர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code – IPC 1860), 1860இல் இயற்றப்பட்டு, 1862இல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த இந்திய தண்டனைச் சட்டம் மூலம் ஜாதி, வர்ணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனைகள் வழங்குவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, ‘சட்டத் தின் முன் அனைவரும் சமம்’ என்ற நோக்கில் ஒரே மாதிரியான குற்றவியல் சட்டம் (Uniform Criminal Law) நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உண்மை இவ்வாறு இருக்க, குஜராத்தில் காந்திநகர் மாவட்ட கலால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதும் – மனுதர்மத்தைச் சான்றாக நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார் என்பதும் மிகவும் அதிர்ச்சிக்குரியதாகும்.
மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்!
பிஜேபி அதிகார பீடத்தில் நீடிக்கும்வரை இன்னும் என்னென்ன ஆரிய தர்பார் நடக்குமோ என்று தெரியவில்லை.
ஆம், வடக்கே ஒரு பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தேவைப்படுகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
