ஆந்திராவில் தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல் விசாகப்பட்டினத்தில் நாளை கரையைக் கடக்கும் தமிழ்நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

2 Min Read
- Advertisement -

அமராவதி, அக்.27-  மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று (26.10.2026) அதிகாலை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவானது. இதற்கு ‘அர்னாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து சுமார் 690 கி.மீ. தொலைவிலும் இருந்தது. இந்தப் புயல் நாளை (அக் 28-ஆம் தேதி) காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, யானம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘ரெட் அலர்ட்’ – புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திர முதலமச்சர் சந்திரபாபு நாயுடு உரிய மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புயல் காரணமாக காக்கிநாடா, கோனசீமா, ஏலூரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதுடன், பல பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதையடுத்து பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

இதனால் இணையச் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆந்திராவுக்கு 7 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், 8 மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

‘அர்னாப்’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான பாதிப்பு நீங்கி உள்ளது. ஏற்கெனவே இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என வானிலை மய்யம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. ஊட்டி, கொடைக்கானலில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இன்று முதல் வரும் 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *