சென்னை, ஜூன் 11 சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
சிறப்பு வாகனங்கள்
ஏற்ெகனவே செயல்பாட்டிலுள்ள ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மய்யம் நீங்கலாக, 70 மின்தடை நீக்க மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அவற்றுடன் கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மய்யங்கள் உருவாக்கப்பட்டு, உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மின்தடைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 எம்.ஆர்.டி. (MRT) சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயரழுத்த மின் புதைவட கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய 7 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் மூலம் போதிய அளவு மின்சாரம் தங்குதடையின்றிக் கிடைத்து வருகிறது. எனினும், புதைவட கேபிள் பழுது, மின்மாற்றி கோளாறு, மின்பாதை துண்டிப்பு, மழை-காற்று போன்ற பருவநிலை காரணங்களால் சில நேரங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் அமைச்சர் தலைமையில் கடந்த 9-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தின் வழிகாட்டுதல்களின்படியே இந்த 10 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு குழுக்களின்
முக்கியப் பணிகள்
முக்கியப் பணிகள்
இந்த 10 உயர்மட்ட சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள், சென்னையில் ஏற்படும் முக்கிய மின் தடைகள் மற்றும் பழுதுகளை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்கும். மேலும், பெரிய அளவிலான மின் பழுதுகள் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெற்று, அவற்றை விரைந்து சரிசெய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
