மதுரை, ஆக.13- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை துரைராணி என்பவர் ஓர் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தார்.
இந்த நிலத்தை முறைகேடாக தனிநபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அடமானப் பத்திரம் பதிவு செய்தது தொடர்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் மத்திய குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் அரசன், நிலத்துக்கு பட்டா பெற்ற இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமார், சார்பதிவாளர்கள் அனந்தராமன், பிரசாந்த், சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா, முன்னாள் வட்டாட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான அன்பழகன் ஆகிய 3 பேரை குற்றப் பிரிவு காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சேர்ந்த காளிக்குமார், வடமதுரை சாா்பதிவாளர் அலுவலகத்தில் இந்த நிலத்தை அடமானப் பத்திரம் பதிந்து மோசடி செய்தார். இதையடுத்து, காளிக்குமாரை மதுரை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில மோசடி வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, துணை ஆட்சியர் தகுதியுடைய அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

