மோடியைக் கேட்டுதான் நீதிபதிகள் நியமனங்கள் ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கூறுகிறார்

5 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.26 இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதிய “வித்தவுட் ஃபியர் ஆர் ஃபேவர்” (Without Fear or  Favour) என்ற நூல் நீதிபதிகள் நியமன நடைமுறைகள் மற்றும் கொலீஜியம் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தையும் மற்றும் வெளிப்படைத் தன்மையையும் குறித்து நாட்டில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதி ஒருவரே இத்தகைய கருத்துகளைத் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலீஜியம் கூட்டங்கள் மற்றும் நீதிபதிகள் நியமனத்தில் எழுந்த கேள்விகளும், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது நூலில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களும் வருமாறு:

முன்கூட்டியே அரசின்
ஒப்புதல் பெற முயற்சி

கொலீஜியம் கூட்டங்கள் அதி காரப் பூர்வமாக நடைபெறுவதற்கு முன்பாகவே, பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளின் பெயர்கள் குறித்து ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜாதி குறித்த கேள்விகள்: தாழ்த்தப் பட்டச் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் பெயர் கொலீஜியம் பரிசீ லனைக்கு வந்தபோது, அவரது ஜாதி குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன என்று தமது நூலில் அவர் தெரிவித் துள்ளார்.

இது குறித்து, நூலாசிரியரும், மேனாள் உச்சநிதிமன்றம் நீதிபதியுமான சஞ்சய் கிஷன் கவுலிடம் ‘தி வயர்’ ஏட்டுக்காக பிரபல ஊடகவியலாளர் கரன் தப்பார் நேர்காணல் செய்துள்ளார். அவரது கேள்விகளுக்கு சஞ்சய் கிஷன் கவுல் அளித்துள்ள பதில்கள் மேலும் பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளிக் கொண்டுவந்துள்ளன.

கொலீஜியம் முடிவெடுத்தற்குப் பிறகு ஒன்றிய அரசுடன் விவாதிப்பது வேறு, கொலீஜியம் இது குறித்து கலந்தாலோசிப்பதற்கு முன்பே, ஒன்றிய அரசுடன் விவாதித்து, அவர்களது முன் ஒப்புதலைப் பெறுவது என்பது ஏற்கத்தக்கதல்ல என்று அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் தான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அய்ந்து நீதிபதிகளின் பெயர்களைக் கொலீஜியம் முன்மொழிந்த போது, ஆறாவதாக ஒரு பெயரை சந்திரசூட் இணைக்க விரும்பியதாகவும், அதை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதாகவும், ஆனால், நீதிபதி கவுல் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்கள் அதனை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது போல் கொலீஜியம் முடிவெடுக்கும் முன்பே ஒன்றிய அரசின் விவாதிக்கும் வழக்கும் சந்திரசூட்டுக்கு முன்பும், பின்பும் தொடர்வதாகவும், அதுவே தன்னைப் போன்றோருக்குப் பிரச்சினையாகத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதித் துறையின் சுதந்திரம், நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசின் தலையீடு ஆகியவை தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகிவரும் நிலையில், நீதிபதி சஞ்சய் கவுலின் புத்தகம் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: இதுவரை பலர் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விஷயங்களை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இப்போது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.

நீதிபதிகள் நியமனத்துக்கு முன் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்ததை முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அரசின் தலையீட்டை முன்னாள் தலைமை நீதிபதியே ஒப்புக்கொள்ளும்போது, நீதித்துறையின் சுதந்திரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலை மேலும் ஆழமாக எழுகிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, முந்தைய தீர்ப்பின் சில பகுதிகளை மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனக் குறிப்பிட்டது.

அதன் பிறகு, நீதிபதி கவுலின் ஆலோசனையைப் பெறாமலேயே அந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதாக அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளிலேயே ஒன்றிய அரசு எந்த அளவுக்குத் தலையிடுகிறது என்பதற்கு இதுவே சான்று. அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பு, அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தத்துக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி
டி.ஒய். சந்திரசூட் மீதான சர்ச்சைகள்

முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கொலீஜியத்தின் தலைவராக நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பார் என்று பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், அவரது பதவிக்காலத்தில் சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் இடம்பெற்றன:

பிரதமருடன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு (செப்டம்பர் 2024): டில்லியில் உள்ள தனது அரசு இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது, அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஆரத்தி எடுத்தது பெரும் விவாதத்தை உருவாக்கியது.

‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ அதிகாரம்: வழக்குகளை அமர்வுகளுக்குப் பிரித்து அளிக்கும் அதிகாரத்தை அவர் கையாண்ட விதம் கேள்விகளுக்கு உள்ளானது. பதவியேற்ற முதல் ஆண்டில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை ஜூனியர் நீதிபதியான பேலா எம். திரிவேதி அமர்வுக்கு அவர் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. பேலா எம் திரிவேதி குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது அவருக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிட்த்தக்கது

முக்கிய வழக்குகள் மற்றும் தீர்ப்புகள்

தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோத மானவை என 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து, விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட உத்தரவிட்டது. இருப்பினும், விவரங்கள் வெளியான பின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவைக் “காலம் தாழ்த்தப்பட்டது” எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

அயோத்தி வழக்கு (2019): பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் ராமன் சிலை வைக்கப்பட்டதும் சட்டவிரோதம் என ஒப்புக்கொண்ட போதிலும், சர்ச்சைக் குரிய நிலம் முழுவதையும் ராமர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பை எழுதிய நீதிபதிகளின் பெயர்கள் குறிப்பிடப் படாவிட்டாலும், அதன் நடை மற்றும் மொழி சந்திரசூட்டைக் குறிப்பதாக முன்னாள் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமூகச் செயல்பாட்டாளர்களின் பிணை மனுக்கள்: பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதம் நாவலாகா, சோமா சென் உள்ளிட்டோரின் பிணை மனுக்கள் மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டன. வழக்கு நீதிபதி பேலா திரிவேதி அமர்வுக்குச் சென்றதால், குற்றம் சாட்டப்பட்ட ஹனி பாபு மே 2024-இல் தனது மனுவைத் திரும்பப் பெற்றார்.

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் (ஜனவரி 2024): அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அல்லது சிபிஅய் (CBI) விசாரணைக்கு உத்தரவிட நீதிபதி சந்திரசூட் மறுத்து விட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *