டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* முன்னாள் நீதிபதி – கொலிஜியம் விவகாரம்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் விமர்சித்துள்ளார். நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
* கார்கே – எஸ்,அய்.ஆர். எதிர்ப்புப் போராட்டம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிரான போராட்டத்தை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, ஜனநாயகத்தையும் வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் இலவச ரேஷன் அரிசி விற்பனை குறித்து உதயநிதி குற்றச்சாட்டு: இலவச ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து, உயர்தர பொன்னி அரிசி எனக் கூறி கிலோ ₹30-க்கு விற்பனை செய்வதாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், 250 கடைகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுவதையும், ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி இந்து:
* இந்திய வரலாறு குறித்த ஹிந்துத்துவ பார்வை ஒரே கோணத்தில் நிலையானது, ரொமிலா தாப்பர்: ஹிந்துத்துவப் பார்வையில் இந்திய வரலாறு ஒரே கோணத்தில் விளக்கப்படுவதாகவும், ஹிந்து மதத்திற்குள் உள்ள பன்முகத்தன்மை கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால நிகழ்வுகளை விளக்குவதற்கு பதிலாக, சமகால அரசியல் கருத்துகளை உருவாக்கவே இந்த வரலாற்று விளக்கம் பயன்படுகிறது என்றும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மறுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
* “நாம் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறோமா?” – மம்தா குற்றச்சாட்டு: மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக பணத்தையும் மிரட்டலையும் பயன்படுத்துவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மக்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உச்சநீதிமன்றத்தின் கிரீமிலேயர் வழக்கு, சிவில் சர்வீஸ் 2025 தேர்வர்களின் பணி மூப்பைப் பாதிக்காது: கிரீமிலேயர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், CSE-2025 தேர்வர்களின் பணி மூப்பு மற்றும் பிற பணிச் சலுகைகள் பாதிக்கப்படாது என ஒன்றியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வர்களுக்கு பணிகளை விரைவாக ஒதுக்கி, அடிப்படைப் பயிற்சியை விரைவில் தொடங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
– குடந்தை கருணா
