வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியில் சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? பதில் தர தேர்தல் ஆணையம் மறுப்பு!

3 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 26- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்அய்ஆர்) பணியின் போது, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை கண்டறியப் பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் உள்ளிட்ட ஆர்டிஅய் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் தர மறுத்து விட்டது. வணிக ரீதியான ரகசியத்தை வெளியிட முடியாது என கூறி உள்ளது. இந்த தகவலை வெளியிட்டால், குட்டு வெளியாகி விடுமென்பதாலேயே தகவலை தர தேர்தல் ஆணையம் மறுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணியில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பாஜ அரசுக்கு ஆதரவாக தன்னிச்சையாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

மேலும், வாக்காளர் பட்டியலை நிர்வகிக்க பயன்படுத்தும் இசிஅய்நெட் இணையதளத்திலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக, 2 தேர்தல் ஆணை யர்கள் அளித்த புகாருக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ஒன்றிய அமைச்சரவை செயலகம் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டதாக அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தரப்பட்ட பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்அய்ஆர் பணியின் போது வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், போலிப் பதிவுகள் மற்றும் இரட்டை பதிவுகளை கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருள் குறித்த விரிவான தொழில்நுட்ப தகவல்களை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை கண்டறிய தேர்தல் ஆணையம் என்ன மாதிரியான மென்பொருளைப் பயன்படுத்தியது, செயற்கை நுண்ணறிவு அல்லது இயந்திரக் கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டதா என்பது குறித்து ஆர்டிஅய்யின் கீழ் கேள்வி கேட்கப் பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மென்பொருள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் வணிக ரீதியான ரகசியங்கள் என்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பானவை என்றும் கூறி, ஆர்டிஅய்யின் கீழ் இவற்றை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் ஏஅய் பயன்பாடு தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், பயன்படுத்தப்பட்ட மென்பொருள் சரிபார்ப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகிறது என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவது அல்லது சேர்ப்பது போன்ற அதிகாரப்பூர்வ முடிவுகளை அந்தந்தத் தொகுதி தேர்தல் பதிவு அலுவலர்களே கள ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை யின்மையை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இதுதொடர்பான ஊடகச் செய்தியை காங்கிரஸ் பொதுச் செயாலளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பகிர்ந்து பதிவிட்டுள்ளதாவது:

எஸ்அய்ஆர் சர்ச்சையின் மய்யப்புள்ளியாக இருக்கும் இசிஅய் வலை மென்பொருள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறைத்து வருகிறது. ஆர்டிஅய்யில் கேட்கப்பட்ட கேள்விக்கும் பதில் தரப்படவில்லை. பலவீனமான காரணங்களைக் கூறி, மென்பொருளின் பெயரை சொல்லவோ, அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) பயன் படுத்தப்படுகிறதா என்பதையும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதையும் உறுதிப்படுத்தவோ தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இசிஅய்நெட் மென்பொருள் மற்றும் ஏஅய் பயன்பாடு குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமை, மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையையே சிதைத்துள்ளது. இந்த தகவல்களை வழங்கினால், மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகிவிடும் என்பதால் தான், தேர்தல் ஆணையம் தொடர்ந்து தகவல்களை தர மறுக்கிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *