புதுடில்லி, அக். 24- வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு எதிராக டில்லியில் நேற்று (23.10.2026) போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், அங்கு செல்வதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்அய்ஆர்) எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி எஸ்அய்ஆருக்கு எதிரான மக்கள் ஒருங்கிணைப்புக் குழு எனும் அமைப்பு சார்பில் டில்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.
டில்லியின் காலிபாரி மார்க் மற்றும் பாய் வீர் சிங் மார்க் சந்தில் உள்ள கோல் டாக் கானா அருகே தொடங்கிய இந்த பேரணிக்கு, கிராந்திகாரி யுவ சங்கதன் (கேஒய்எஸ்), இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்அஸ்) உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. டில்லி, அரியானா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியை முன்னிட்டு டில்லியில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பங்களா சாகிப் குருத்வாரா அருகே டில்லி காவல் துறை மற்றும் விரைவு அதிரடிப் படை வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அசோகா சாலையில் பேரணியாக வந்த போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், சாலையிலேயே அமர்ந்து ‘மக்கள் நாடாளுமன்றம்’ என்ற நிகழ்வை நடத்தினர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாய மாக கைது செய்து வாக னங்களில் ஏற்றிச் சென்றனர்.
