பழங்குடி மக்களை மோசடி செய்து சுரங்கம் அமைக்கும் கார்ப்பரேட்டுகள்

3 Min Read
- Advertisement -

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினருக்குச் சொந்தமான பாரம்பரிய காட்டுப் பகுதிகளை அதானி குழுமத்தின் சுரங்கத் திட்டத்திற்காகக் கையகப்படுத்துவதற்காகப் போலி கையெழுத்துகளும், இறந்தவர்களின் கைரேகைகளும், முறைகேடான கிராமசபைத் தீர்மானங்களும் பயன்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அல்ஜசீரா நடத்திய புலனாய்வு, இதன் பின்னணியை வெளிக் கொண்டுவந்துள்ளது.

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பால்டா, பன்னூர் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் வனப் பகுதிகளில், பாக்சைட் கனிமங்களின் சுரங்கம் தோண்டுவதற்காக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கலிங்கா அலுமினா லிமிடெட் முனைந்து வருகிறது. இத் திட்டத்தின் மதிப்பு சுமார் 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 230 கோடியாகும்.

பழங்குடியினரின் வனப் பகுதிகளில் புதிய கட்டுமானங்களோ, சுரங்கங்களோ, தொழிற்சாலைகளோ அமைக்கப்பட வேண்டுமானால், அங்குள்ள கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். அதனைப் பெற்றுவிட்டதாக அதானி குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.  2025 அக்டோபர் 9 அன்று நடைபெற்றதாகக் கூறப்படும் கிராமசபைக் கூட்டங்களில், சுமார் 600 பழங்குடி மக்கள், சுரங்கத் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், பலர் தாங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், தங்களது கையெழுத்துகளும் கைரேகைகளும் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு ஆவணங்களில் பால்டா கிராமத்தைச் சேர்ந்த 360 பேரும், பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த 227 பேரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கிராம மக்கள் எடுத்த ஒளிப்படங்களின்படி இரு கூட்டங்களிலும் மொத்தம் சுமார் 108 பேர் மட்டுமே இருந்தது உறுதியாகிறது. கிராமசபைத் தலைவர்களும், அவர்கள் குறிப்பிடும் கூட்டங்கள் செல்லத்தக்கவை அல்ல என மறுத்துள்ளனர்.

இதைவிடக் கொடுமை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவர்களின் பெயர்களும் கைரேகைகளும் ஒப்புதல் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசவும் நகரவும் இயலாத ஒருவரின் பெயரும் ஆவணத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவரது கைரேகை ஒப்புதல் அளித்தவர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. நில உரிமைப் பதிவுகளைத் தயாரிப்பதற்காகப் பெறப்பட்ட பெயர்களும், கைரேகைகளும், சுரங்கத் திட்டத்திற்கான ஒப்புதல் ஆவணத்தில் சேர்க்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒப்புதலைச் சேகரித்த ஒப்பந்தப் பணியாளரும், நில ஆவணங்களுக்காகவே கையெழுத்துகளைப் பெற்றதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். 2023 பிப்ரவரியில் அதானி நிறுவனம் இத் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டது. 2025 மார்ச் 6 அன்று நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகச் செய்தி கூறுகிறது. எனினும், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுவிட்டன.

தாங்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், தங்களது கையெழுத்துகள் அல்லது கைரேகைகள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் பிரமாணப் பத்திரங்கள் அளித்துள்ளனர். காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

2026 மார்ச் மாதத்தில் பால்டா மலைப்பகுதியைச் சுற்றியுள்ள பத்து கிராமங்கள் கூட்டங்களை நடத்தி, முந்தைய ஒப்புதல் தீர்மானங்களை நிராகரித்ததுடன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பையும் மீண்டும் தெரிவித்தன. இருப்பினும், மே 7, 2026 அன்று திட்டத்திற்குத் தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு, 50 ஆண்டுக் குத்தகைக்கு காட்டு நிலம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதே போல, ஒடிசாவின் சிஜிமாலி பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டத்திலும், கிராம மக்களின் ஒப்புதல் போலியாகக் காட்டப்பட்டதாக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதானி, வேதாந்தா, அம்பானி உள்ளிட்ட பெரும் பெரும் நிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும், சூறையாடவும் கடந்த பல ஆண்டுகளாக அரசுகள் பெரும் செயல்திட்டங்களைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைத் தீவிரவாதிகளாக அரசு சித்திரிக்கிறது. அவர்களை ஒடுக்க, உயர்ஜாதியினர் மூலம் ரவுடிப் படைகளை உருவாக்கி, அம் மக்களின் மீது தாக்குதலைத் தொடுக்கவும் அரசுகள் உதவுகின்றன. இயற்கை வளங்களும், மண்ணின் உரிமையும் ஏகபோக முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல என்னும் குரல் எழுந்துகொண்டிருக்கும் அதே வேளையில், வெளிப்படையாக, இத்தனை வசதிகள் நிறைந்த காலத்திலும் ஊரையே ஏமாற்றும் மோசடிகளைத் தெரிந்தே அரங்கேற்றுகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா? இதற்காகவும்தானே அதிகாரத்தைத் தக்க வைக்க தேர்தல் வரை முறைகேடுகள் நடைபெறுகின்றன. பெரு முதலாளிகளும், அவர்தம் ஊடகங்களும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன.

வெகுதொலைவு இல்லை – ‘இந்த நாடு முதலாளிகளின் வேட்டைக்காடு அல்ல’ என்று மக்கள் தீர்ப்பெழுதுவார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *