“பெரியார் பேருரையாளர்” பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாளில் பிறந்தார். திரு. வெங்கடசாமி வேலம்மாள் ஆகியோர் இவரின் பெற்றோர் ஆவர்.
உடுமலையில் பள்ளிக் கல்வியும் பெங்களூரில் சட்டக் கல்வியும் பயின்றார். இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யியல் ஆகிய நான்கு துறைகளில் முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்று கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
இவருக்கு மனைவி சாரதாமணி, மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோராவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன்வாய்ந்த இவர் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமையகச் செயலாளராகவும் இருந்தார்.
உலக விடுதலை இயக்கங்களின் வரலாற்று மாநாட்டைப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கோவையில் நடத்திய பெருமைக்குரியவர் ஆசான்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகளில் பேரீடுபாடு கொண்டிருந்தார். “பாவேந்தர் பாசறை” என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார்.
கோவையில் இவர் உருவாக்கிய சிந்தனைப் பேரவை, அறிஞர் உலகின் சிந்தனைத் தளத்தில் விரிவான மலர்ச்சியை உருவாக்கியது. பல்துறை அறிஞர்களும், பல்வகைப்பட்ட சிந்தனையாளரகளும் நேச உணர்வுடன் கூடிப் பேசி, வழக்கிட்டுக் கருத்துக்களைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் களமாகச் சிந்தனைப் பேரவை விளங்கி வந்தது.
ஆசானின் “கல்வி அகம்” அறிஞர்களின் சிந்தனைக் கூடம். இங்கே கூடாத கூட்டம் இல்லை. பேசாத பொருளில்லை. பலதுறை அறிஞர்களும் கூடிக் கருத்துரையாற்றக் களம் ஏற்படுத்தியவர் ஆசான். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியார் அவர்களையும் அழைத்துச் சிறப்புரை ஆற்ற செய்தார்.
“இங்கும் அங்கும்”, “ஊரும் உலகும்” என்ற பெயர்களில் மாத இதழ்களை நடத்தி வந்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைப் படுகொலைக்குப் பின், ‘மாலை முரசு’ இதழில் ஈழத் தமிழர் வரலாற்றுக் கட்டுரைத் தொடரை எழுதி மக்களுக்கு அறிவுத் தெளிவூட்டினார்.
இவர் எழுதிய “மொழி உரிமை” என்னும் நூல், தமிழர் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய கருத்துக் கருவூலம் ஆகும்.
மலையாள மாக்கவி குமாரன் ஆசான், வருண சாதி உருவாக்கம், பாரதியார் – பெரியார், பாரதியும் – பாவேந்தர் – பெரியார், சாகு மகராஜ், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, Gora’s positive Atheism and Free Will, Thiruvalluvar on learning Knowledge and Wisdom, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழர் வரலாற்றில் தந்தை பெரியார் உள்ளிட்ட பல தலைப்புகளில் எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர் “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” என்ற தலைப்பில் ரிச்சர்ட் டாக்கின்சின் “The God Delusion” நூலைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய ‘குமரன் ஆசான்’ நூல் பல பதிப்புகள் கண்டது.
“விடுதலை” நாளிதழ், “தி மாடர்ன் ரேசனலிஸ்ட்” ஆங்கில மாத இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்களுக்கு சிறப்பாக வகுப்புகளை நடத்தக் கூடியவர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் பாடத் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
பெரியாரியத்தைப் பற்றிய கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகப் “பெரியார் பேருரையாளர்” என்ற விருதும் பெற்றார். தமிழ், தமிழர் உரிமை, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றிற்காக பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு, தடுப்புக் கைதுக்கும் ஆளானவர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர், திராவிடர் கழகத்தின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியுள்ளார். பகுத்தறிவாளர் கழகப் பணிகளையும் செய்து வந்தார். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கற்று அதன்படி வாழ்ந்தார்.
“தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர், சீரிய பகுத்தறிவாளர், பெரியார் தம் கலங்கரை விளக்க ஒளிச் சுழற்றலால் சிறப்புப் பெரும் செம்மல் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான். அவர்தம் நூலறிவையும், நுண்மான் நுழைபுலத்தையும் பகுத்தறிவுடன் கூடிய சிறப்பான செயலாக்கத்திற்கு பயன்படுத்தும் வித்தகர்”. என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாளில் தமது 75 ஆவது வயதில் மறைவுற்றார். இந்நினைவு நாளில் அவருடைய புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்!
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
