குருகிராம், அக் 19- டில்லி மாநகருக்குள், ‘பாரத் ஸ்டேஜ் –4’ மற்றும் அதற்கும் குறைவான தர நிலைகளைக் கொண்ட சரக்கு வாகனங்கள், நவம்பர் 1ம் தேதி முதல் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரியானா மாநிலம், குரு கிராம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ மற்றும் அதற்கும் குறைவான தரநிலைகளைக் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் சரக்கு வாகனங்கள், நவம்பர் 1ஆம் தேதி முதல் டில்லி மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காஸ் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
அகில இந்திய சுற்றுலா அனுமதி மற்றும் பிற சேவை ஏற்பாடுகளின் கீழ் இயங்கும் வாகனங்களுக்கும் இந்த தடை பொருந்தும். அதேநேரத்தில், டில்லியில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். டில்லிக்குள் நுழைவதற்கு முன்பாக, போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்கள் வாகனங்களின் புகை உமிழ்வு தரநிலை மற்றும் பதிவு விபரங்களை சரிபார்த்து, நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
