டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திப்கே, நேஹா விடுவிப்பு; டில்லி காவல்துறையின் அடக்குமுறை தொடர்கிறது: மகளிர் அமைப்பு தலைவி நேஹா, மாணவர் அமைப்பின் தலைவர் டிப்கே ஆகியோர் விடுவிக்கப்பட்டாலும், போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தவும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் மூலம் போராட்டங்களை ஒடுக்கவும் அரசு முயல்வதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.
* தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக கடும் தாக்கு: வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான புகார்களை விசாரிக்கவும் குடியரசுத் தலைவரை அணுகப் போவதாக திமுக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவியிலிருந்து நீக்க கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுக, விஜய் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் போராட்டத்துக்கு அனுமதி: எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் ஜனநாயகத் தையும், வாக்குரிமையையும் பாதுகாக்க வலியுறுத்தி, நவம்பர் 1-ஆம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடத்த காங்கிரசுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது; போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ரோஜ்கார் மேளா? ஆர்.எஸ்.எஸ். – பாஜக தொண்டர்களுக்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டமா?: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்து, கணக்கெடுப்பு பணிக்கு அரசு உதவி பெறும் அல்லது பெறாத தனியார் அமைப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் பிற நபர்களையும் நியமிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, வேலைவாய்ப்புத் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. தொண்டர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி இந்து:
* தவெக கட்சி ‘BREAKING BAD’ கட்சியாக மாறி வருகிறது – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு! தவெக நிர்வாகி பூபாலன், 135 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பை மய்யமாகக் கொண்ட, எம்மி விருது பெற்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரைக் குறிப்பிடும் வகையில், “BREAKING BAD” கட்சி என்று விமர்சனம்.
தி டெலிகிராப்:
* கருத்துச் சுதந்திரத்தை மோடி அரசு நசுக்குகிறது; போராட்டம் ஒரு குற்றம் ஆக்கப்பட்டுள்ளது – கபில் சிபல் குற்றச்சாட்டு! வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பொதுத்துறை முதலீடு சரிவு ஆகியவற்றால் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும், அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் அவர் எச்சரித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வாக்களிக்கும் உரிமையும், போராடும் உரிமையும் பறிப்பு: ஆட்சி மாற்றம் கோரிக்கைக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு! மக்களின் வாக்குரிமையையும் போராடும் உரிமையையும் பறிக்கும் அரசை மாற்ற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்; டில்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை கிழித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
– குடந்தை கருணா
