டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேகதாது விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக அறிவிக்கை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கருநாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக அறிவிக்கை அளித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கை (ADJOURNMENT MOTION NOTICE) அளித்துள்ளார்.
* சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவ மனையில் அனுமதி: காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கினார் அபிஜித் தீப்கே. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக காலவரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உத்தவ் தாக்கரே சேனா கட்சியில் இருந்து 6 எம்.பி.க்கள் ஷிண்டே சேனா அணிக்கு தாவினர். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தாவிய எம்.பி.க்களுக்கு தனி இருக்கை ஒதுக்கியுள்ளார்.
* ‘சிதைக்கப்படும் ஜனநாயகம்’ – சோனம் வாங்சுக் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். டில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் ஜனநாயகம் பலவந்தமாக சிதைக்கப்படுவதாகவும் அவை விமர்சித்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, விக்ஸித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா மீதான கூட்டுக் குழுவின் கூட்டம் ரத்து: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை வரைவு சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்துவதால், உயர்கல்வி மசோதா மீதான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் ரத்து.
* தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யாவிட்டால், பிரதமர் மோடியும் பொறுப்புதான்’: சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தாக்கு. அமைதியான இயக்கத்தை ஒன்றிய அரசு ஒடுக்குவதாகவும், வாங்சுக் “சட்ட விரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராமன் கோயில் நிதி மோசடி குறித்து ‘நியாயமான விசாரணை’ கோரும் மனுக்களை ஜூலை 20 அன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான நான்கு தனித்தனி மனுக்கள், தலைமை நீதிபதி சூரிய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளன.
தி இந்து:
* ‘தொகுதி மறுவரையறை மசோதா என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம்’. அரசியலமைப்புச் சட்டத்தின் 131ஆவது திருத்த மசோதா என்பது காங்கிரஸ் அல்லது ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் பிரச்சினை மட்டுமல்ல; இது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்போடு தொடர்புடையது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.வேணுகோபால் பேட்டி.
தி டெலிகிராப்:
* ஜந்தர் மந்தரில் இரவெங்கும் போராட்டம்: டில்லி ஜந்தர் மந்தரில் 500-க்கும் மேற்பட்டோர் இரவெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 21 நாள் பட்டினிப் போராட்டம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. காவல்துறை நடவடிக்கை அச்சத்தால் போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மருத்துவக் கல்லூரி ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு அதிகாரம் கல்லூரிகளுக்கே: ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை இனி மருத்துவக் கல்லூரிகளே எடுக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. விதிவிலக்கான மற்றும் தெளிவற்ற வழக்குகள் மட்டும் ₹25,000 + ஜிஎஸ்டி கட்டணத்துடன் ஆணையத்தின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
– குடந்தை கருணா
