‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவுக்குக் கழகத் தலைவர் இரங்கல்!
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் தமது 76-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற வருந்தத்தக்க செய்தி அறிந்தோம். சென்னையில் எளிய குடும்பத்தில் பிறந்து, தம்முடைய உழைப்பால் உயர்ந்து, தனித்த சாதனையாளராகத் திகழ்ந்தவர். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றவர் என்றாலும் அடக்கமே உருவானவர். பொது இடங்களில் சந்திக்கும்போது நம்மிடம் பெரு மதிப்புடன் பழகக் கூடியவர்.
அவரது தம்பிகள் சபேஷ், முரளி, மகன் சிறீகாந்த் தேவா ஆகியோரும் இசைத்துறையில் சிறந்தோர் ஆவர். சென்னை உழைக்கும் மக்களின் இசையான கானா பாடல்களுக்குப் பெரும் அங்கீகாரத்தையும், வெகுமக்களின் கவனத்தையும் பெற்றுக் கொடுத்தது அவரது இசைத் துறைச் சாதனைகளுள் ஒன்றாகும்.
கவிப்பேரரசு எழுதி, தேவா அவர்கள் இசையமைத்த ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து..’ என்ற பாடல் மறைந்த சிங்கப்பூர் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். தன்னுடைய இறுதிநிகழ்வு நடக்கும்போது இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்ற அவரது விருப்பத்தை 2016-ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு, சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது என்பது தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்குச் சிறப்புச் சேர்க்கும் வரலாற்றுத் தகவலாகும்.
அவரது மறைவுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர், இசைத் துறையினர் ஆகியோருக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
17.10.2026
சென்னை
