சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக டி.லிங்கேஷ்வரன், பி.கார்த்திகேயன் பதவியேற்பு! நீதிபதிகளின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!

- Advertisement -

சென்னை, அக். 17- உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய டி.லிங்கேஷ்வரன் மற்றும் பி.கார்த்திகேயன் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி டி.லிங்கேஷ்வரன்:

பிறப்பு: 1974-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முதுமொத்தன்மொழி கிராமத்தில் பிறந்தார். பணிப்பாதை: 2013இல் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட இவர், பல மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி, பெரம்பலூரில் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

நீதிபதி பி.கார்த்திகேயன்:

1996-இல் சட்டப்படிப்பை நிறைவு செய்து, 2000 முதல் 2005 வரை விஜயா வங்கியின் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

2005-இல் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

பதவியேற்பு விழாவில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பார் கவுன்சில் தலைவர் கதிரவன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன், பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவி ரேவதி மற்றும் லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் ஆகியோர் புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினர்.

இவ்விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் துணைத் தலைவர் இ.பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.அமல்ராஜ், மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் புதிய நீதிபதிகள் தங்கள் ஏற்புரையை வழங்கினர். இந்த இரு புதிய நீதிபதிகளின் நியமனத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *