ஆசிரியர் விடையளிக்கிறார்

5 Min Read
- Advertisement -

கேள்வி 1: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்அய்ஆர்) எதிராகவும் டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கூட பெரும் கிளர்ச்சியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த இரு பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட தி.மு.க. இதில் கண்டன அறிக்கை, எதிர்ப்புக்குத் தார்மீக ஆதரவு என்பதோடு நிற்கிறதே! கிளர்ச்சி, எழுச்சி, புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தலாம் அல்லவா?

பதில் 1: இந்தியாவையே – அதன் அடிநாதமான – ஜனநாயகத்தையே சூறையாடியதற்கு நல்ல செயற்கருவியாகப் பயன்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஏற்படுத்தியுள்ள பிரச்சினைக்குத் தீர்வு ஓரிரு நாளில் மட்டும் நடந்து முடியும் போராட்டங்கள் அல்ல.

  1. தி.மு.க. தலைமைக்கு இல்லாத ஆர்வமா? முதன்முதலில் இதனைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளை – த.வெ.க. உள்பட அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய கட்சி தி.மு.க.
  2. எஸ்.அய்.ஆர். பற்றி ‘இந்து’ பத்திரிகை தன் குழுமத்தைச் சார்ந்த ‘பிசினஸ் லைன்’ மூலம் ஓர் அரசியல் அதிர்ச்சித் தகவலை சிறந்த விளக்கத்தோடு அதில் தந்தது. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை – அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலியவர்களைக் குறிவைத்துள்ளதைத் தெளிவாகப் புள்ளிவிவர விளக்கங்கள் வெளிவந்துள்ளது. (கொளத்தூரில் கவனத்தோடு, திட்டமிட்டுத் தோற்கடித்ததுபோலவே). இதனை த.வெ.க. தலைமையில் (தமிழ்நாடு) உள்ள கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் திட்டவட்டடமாகக் கூறிய நிலையில் தி.மு.க. இதில் அலட்சியமாகவா இருக்கும்? ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என்ற அடிப்படையில் செயல்திட்டம் பெரும் அளவில் உருவாகும் என்பது உறுதி! எப்போதும் களம் காணத் தயங்காத இயக்கம் தி.மு.க!!

கேள்வி 2: “தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு த.வெ.க.வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து அய்ந்து தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டு, இன்று ‘ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக வரவேண்டும்’ என்ற நமது முதல் இலக்கில் வெற்றி பெற்று விட்டோம். ‘இந்தியப் பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும்’ என்ற நமது இரண்டாவது இலக்கில் வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளாரே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 2: அவரது கனவு நனவாக அங்கே வாய்ப்புள்ளதா என்பது போகப்போக புரியும். அப்போது தெரியும். “பறப்பதைப் பிடித்து இருப்பதைவிட்டு இழந்த நிலை”. காலம் கணிக்கும் விரைவில்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 3: நாட்டில் தலை விரித்தாடும் ஜாதியப் பிரச்சினைகள், ஆணவக் கொலைகள், கொடூர மதவாதச் சிந்தனைகள், பெண் அடிமைத்தனங்கள் போன்ற பல்வேறு சமூகக் கேடானப் பிரச்சினைகள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றிக் கிடக்கும் போது, அதைப் பற்றிச் சிந்திக்காமல், சில தமிழறிந்த பண்டிதர்கள் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் கருத்துகளுக்கே இன்னமும் முக்கியத்துவம் கொடுத்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களே ஏன்?

– குடந்தை க.குருசாமி

பதில் 3: போலிப் பாராட்டுக்குப் பலியாகி வரும் வேதனை நிலை கூலிப் பெருமையால் நீடிப்பு. பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழ் மானத்தை “தாரை வார்த்து” தம்மை வளர்த்துக்கொள்ள நினைக்கும் புல்லுருவிகள்!

கேள்வி 4: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்படுவதையும், படகுகள் சேதப்படுத்தப்படுவதையும், இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதையும் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டி தீர்வு காணும் வகையில் பிரதமருக்குக் கடிதம் எழுதிவந்தார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போதெல்லாம் அதுபற்றி ஆராய்ந்து பேசாமல், கடிதம் எழுதியதைக் கிண்டல் செய்து தன் விருப்பத்திற்குக் குறை கூறினார் ஜோசப் விஜய். தற்போது முதலமைச்சரான பிறகு இவரும் கடிதம்தானே எழுதுகிறார்?

– சாமிநாதன், சிசம்பட்டி

பதில் 4: “அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே” என மீனவச் சகோதரர்கள் வேதனையில் வெந்து கருகும் நிலை! இதில் பட்டினப்பாக்கத்தில் ஜோதிடர் ஆலோசனைப்படி புதிய சட்டமன்றக் கட்டடத்தைக் கட்டுவோம் என்னும் ஆட்சி மீனவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆட்சியா? காட்சியா? என்று வாக்குப் போட்டவர்களும் வருந்தும் பலவற்றில் இதுவும் ஒன்று!

கேள்வி 5: கேரளாவில் போக்குவரத்தைச் சரிசெய்ய ரோபோக்களைப் பயன்படுத்தப்படப் போவதாக அக்டோபர் 2026இல் சைபர் பாதுகாப்பு மாநாட்டில் கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதே? நடைமுறையில் அது சாத்தியமா?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 5: அறிவியலில் வளர்ந்தும், கட்டுப்பாட்டுக்குப் பழகிய மக்களும் இருக்கும் மேலை நாடுகளில் அமல்படுத்தப்படாத இந்த முறை நம் நாட்டில் சரிப்பட்டு வருமா என்பது மிகப் பெரியதொருக் கேள்வியே!

கேள்வி 6: தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளதே?

– குமரன், மதுரை

பதில் 6: முதலமைச்சர் நிலை? கேள்விக்குறி. உயர்நீதிமன்றமே ஆளுமைக்குக் கொடுத்துள்ள சான்றிதழ் – அது! ‘ஜனநாயகன்’ ஆட்சியில்.

கேள்வி 7: பீகாரில் – சிலேபூர் கோயில் திருவிழா முடிந்து திரும்பியபோது கங்கை ஆற்றில் பாரம் தாங்காமல் படகு  கவிழ்ந்து 13 சிறார்கள் உயிரிழந்தனர். கோயில் திருவிழா என்று மக்கள் ஏராளமாகக் கூடுவதால் ஏற்படும் இத்தகைய விபத்துகளைத் தடுப்பது எப்படி?

– க.வெங்கடேசன், சென்னை – 82

பதில் 7: பட்டும் புத்தி வரவில்லையே; காரணம் பக்தி போதையே! கோயில் விழாக்களில் பலியாகும் உயிர்கள் ஏராளம். பக்தி போதை எதிர்ப்புப் பரப்புரைதான் ஒரே தீர்வு.

கேள்வி 8: தமிழ்நாட்டில் சென்னை ‘மாநகரப் பேருந்துகளில்’ வண்ணங்களை மாற்றி த.வெ.க. கட்சிக் கொடியின் வண்ணத்தில் இயக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

– மா.மணிமாறன், அம்பத்தூர்

பதில் 8: கட்சி வேறு – ஆட்சி வேறு. இதைத் திட்டமிட்டே புறக்கணிக்கிறது ஆளும் கட்சி. இது பொது மக்களால் வெறுக்கப்படுகிறது என்பதைக் கூட புரிந்துகொள்ளும் சக்தி ஆளுவோருக்கு இல்லை. ஏடுகளும், ஊடகங்களும் கடமை தவறுகின்றனவே!

கேள்வி 9: ஒரு இலட்சம் கோடி நிதிச்சுமை ஏற்படும் நிலையில், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள் முதல் செய்வதில் தமிழ்நாடு த.வெ.க. ஆட்சி உறுதியாக உள்ளது. அனைவரின் கண்டனங்களைப் பொருட்படுத்த வில்லையே- ஏன்?

– க.நெடுமணி, உக்கடம்

பதில் 9: அது ஜனநாயகம் அல்ல! புதுப் பெயர் பூண்ட ‘ஜனநாயகன்’ எதையும் இதுவரைப் பொருட்படுத்தவே இல்லை. வீட்டுப் பயன்பாட்டுக்குரிய அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பல பொருள்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. மின்சார விநியோகம் பற்றிய திட்டமிடல் எதுவும் தெரியாமல் ஏதோ எப்படியோ நடக்கிறது. மக்கள் வரிப்பணம்தான் இதற்குத் தேவை. 90 கோடிக்கு மேல் கடன்தானே வாங்குகிறார்கள். வெள்ளை அறிக்கை வெளியிட்டவர் விளக்கம் தரவேண்டும்?

கேள்வி 10: அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பதவி விலகலை சட்டப் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி சரியானதே என்கிறதே நீதிமன்றம் – சரியான ஒன்றாகுமா?

– க.இளவரசன், திருச்சி

பதில் 10: பொது ஒழுக்கச் சிதைவு பற்றிக் கவலைப்படாத சமூக விரோத தீர்ப்பு இது. பொதுவாக நீதிமன்றங்களும் பொது ஒழுக்கம், நியாயம் இவைகளைக் காப்பாற்ற வேண்டும். தந்தை பெரியார் சொன்னது, “இங்கே உள்ளது நீதிமன்றச் சட்டக் கோட்பாடுகளே தவிர, நியாயக் கோட்பாடுகள் அல்ல!” நினைவுக்கு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *