மும்பை, அக்.14 மகாராஷ் டிராவில் நடைபெற்றுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் தொழில் நுட்பப் பணிகள் மற்றும் மய்யப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை முறைகள் மீது கடுமையான விமர் சனங்கள் எழுந்துள்ளன. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளி யிட்டுள்ள இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மகாராட்டிராவின் வரைவு வாக்காளர் பட்டியலில் 2,70,313 வாக்காளர்களின் பிறந்த ஆண்டு 1,900 எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் பலரின் வயது 126 எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் 88 சதவீத வாக்காளர்கள் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வன் (ST), சந்தவாட் மற்றும் தியோலாலி (SC) ஆகிய மூன்று தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குளறுபடிகள் நீடித்த வேளையில், மகாராட்டிராவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9.79 கோடியிலிருந்து 7.72 கோடியாகக் குறைந்துள்ளது.
மகாராட்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி இந்தத் தரவுத் பிழைகளைச் சரிபார்க்கக் கோரி டில்லியிலுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பத் (IT) துறைக்குத் தொடர் கடிதங்களை எழுதினார்:
செப்டம்பர் 2: முதன்முதலில் தரவுகள் கோரப்பட்டன. செப்டம்பர் 8: இரண்டாவது முறையாகக் கோரிக்கை விடுக்கப் பட்டது. செப்டம்பர் 17: “இனி தாமதிக்காமல் தரவுகளை வழங்குமாறு” மூத்த துணைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும் எந்தப் பதிலும் அளிக்கப்பட வில்லை. அக்டோபர் 6: சுட்டிக் காட்டப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், பிழை சரிசெய்யப்பட்டது.
ஒரு மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியே தனது சொந்த மாநிலத்தின் வாக்காளர் தரவுகளைத் திருத்த டில்லியின் அனுமதியையோ அல்லது தலையீட்டையோ எதிர்நோக்க வேண்டியுள்ளமை நிர்வாக மய்யப்படுத்தலின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி இதைக் குறிப்பிடும்போது, “வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மய்யமயமாக்கப்படுதல்” என்று தெரிவித்தார். ஒரு சாதாரணக் குடிமகன் அல்லது ஒரு மாநில அதிகாரியே ஒரு மாதத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழலில், ஊடகங்களின் தலையீட்டிற்குப் பிறகு ஒரே நாளில் இந்தப் பிரச்சினைகள் சரிசெய்யப்படுவது ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் தொழில்நுட்ப முறைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
