சென்னை, அக். 12- மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தை கொண்டுவர முந்தைய தமிழ்நாடு அரசும், புதிய அரசும், தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த புதிய திட்டம் மக்களின் போக்குவரத்துக்கு பேருதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மதுரை, கோவை மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். மெட்ரோ ரயில் கொள்கையான குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை, 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரையில் மெட்ரோ திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் ஆக்ரா, போபால், பாட்னாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு அனுமதி மறுத்திருப்பது, ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கையே காட்டுகிறது.
தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய எதிர்மறை போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
