கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

2 Min Read

மதுரை, அக். 12– திருப்பத்தூர் நீர்நிலை வழக்கில் அரசு கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.

சிவகங்கை பர்மா காலனியை சேர்ந்த பாஸ்கரன், அம்மாப்பட்டி சந்தோஷ் கண்ணன், நாகப்பன்பட்டி ராஜேந்திரன், முத்துசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பத்தூர் தாலுகாவில் அம்மாப்பட்டி, நாகப்பன்பட்டி கிராமங்களில் நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சின்னக் கொசவன் கண்மாய், பெரிய கொசவன் கண்மாய் மற்றும் பொட்ட கண்மாய்க்கு தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் சீராகநடைபெற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், ‘தனியார் நிறுவனம் 65 ஏக்கர் நிலத்தில் சூரிய மின் நிலையம் அமைத்துள்ளது. இந்த நிலையத்துக்குச் செல்வதற்காக நீர்ப்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்து மண்பாதை அமைத்துள்ளனர்.

இப்பாதையின் அடியில் சிமென்ட் குழாய்களைப் பதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகளிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மனுதாரர்களை காவல் துறையினர் குற்ற வழக்கில் கைது செய்தனர். எனவே, நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சூரிய சக்தி மின் நிலையம் அமைத்துள்ள நிறுவனம் அரசிடம் அனுமதி பெறாமல் கண்மாய் கரையில் குழாய்களைப் பதித்துள்ளது. இதனால் அரசு நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்க மக்கள் முறையிட்டனர். நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்களே அவற்றை அகற்றி யுள்ளனர். இந்தச் செயலை நியாயப்படுத்த முடியாததுதான், ஆனால், மக்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்? அரசு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.

அதிகார இயந்திரம் தோல்வியடைந்து மக்கள் தாங்களாகவே செயல்படும் போது எப்படி குறைகூற முடியும்? கைது செய்யப்பட்ட இருவரையும் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது. சட்டத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்திருக்கலாம். ஆனால், சட்ட விரோதமாக நிறுவப்பட்டதைத்தான் சேதப் படுத்தினர் என்பதை மறுக்கக் கூடாது.

எனவே, சிவகங்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் செப். 12ஆம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சிறப்பு அமர்வு நடத்தி நடராஜன், சேவியர் கென்னடி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்து தீர்வுகாண வேண்டும். இந்த மனு அன்றைய தினம் மாலை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *