வாசிங்டன், அக். 9– இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை உள்ளே நுழையவிடாமல் முகேஷ் அம்பானிதான் தடுத்து நிறுத்துவதாக எலான் மஸ்க் வெளிப்படையாகப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணையதள சேவை வழங்கப்படுவதை சில செல்வந்தர்கள் தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், குடிமக்களின் நலன்களைவிட, தன்னுடைய கூட்டாளி முதலாளிகளின் நலன் களைப் பாதுகாப்பதில்தான் அரசு அதிக கவனம் செலுத்துவதாக எக்ஸ் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு பதில் கூறி மறுபதிவிட்ட எலான் மஸ்க், “165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறு வனம் உரிமம் பெற்றதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு விதி முறையையும் சட்டத்தையும் பின்பற்றி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் வாய்ப்புக்கேடாக இந்திய மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில செல்வந்தர்கள் எங்களைத் தடுத்து வருகின்றனர். உங்களுக்கே தெரியும் அவர்கள் யாரென்று… இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்றும் எலான் மஸ்க் 7.10.2026 அன்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாத ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கமளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
