செ.நு. என்ற சொல் அல்லது அதன் தாக்கம் உங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது? செ.நு. செயலிகள் மூலம் அழகழகாக உங்கள் ஒளிப்படங்களை உருவாக்கிய போதா? இல்லை, சேட்ஜிபிடி உடன் உரையாடிய போதா?
இவை எல்லாம் நமக்கு அறிமுகமாகி, ஏறக் குறைய மூன்று ஆண்டுகள் ஆகியிருக்குமா? முதன்முதலாக இந்த வசதிகளைப் பயன்படுத்திய போது, உங்களுக்கு எப்படி இருந்தது? என்ன உணர்ந்தீர்கள்? கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த உணர்வு மாறியுள்ளதா? கூடியுள்ளதா?
சேட்ஜிபிடி தாண்டி புதிதாக வேறு எந்த வகையிலாவது செ.நு. கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளீர்களா? செ.நு. உங்கள் வாழ்க்கையை ஏதாவது ஒரு வகையில் மேம்படுத்தியுள்ளதா? இலகுவாக்கியுள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை நானும் எண்ணிப் பார்க்கிறேன்.
முதன்முதலில் செ.நு. கருவிகளை நான் பயன்படுத்தத் தொடங்கிய போது, எனக்கு இருந்த உணர்வு வியப்பும் மகிழ்ச்சியும் மட்டுமே! அதே உணர்வு இன்றளவும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக செ.நு. கருவிகள் வருகின்றன. அதன் திறன்கள் மேம்பட்டு வருகின்றன.
இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு, என்னுடைய அன்றாட பணிகளில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று விளையாடிப் பார்ப்பதே ஒரு தனி இன்பமாகத்தான் இருக்கிறது.
புதிதாக ஒருவருடன் பழகும்போது, தொடக்க நாட்களில் அவரைப் பற்றி நமக்கு என்ன உணர்வு இருந்ததோ, அதுதான் என்றும் நீடிக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். செ.நு. என்னும் புதிய நுட்பத்துடனான நமது உறவு கூட அதே போன்றே அமையலாம்.
ஆகவே, அச்சம், கவலை, குழப்பம் ஆகியவற்றைத் தள்ளிவைத்து விட்டு ஒரு திறந்த மனதுடனும் குழந்தைகள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதைப் போன்ற ஆர்வத்துடன்ன் அதை அணுகுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எப்படி மாட்டு வண்டியில் பயணித்த மனிதன், மகிழுந்து, விமானம் என்று புதிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி பல நகரங்களையும், உலக நாடுகளையும் சுற்றி வருகிறானோ, அது போலவே நாமும் செ.நு. கொண்டு இத்தனை நாள் நமக்குக் கைவசமாகாத திறன்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நம்முடைய தேவைக்கு விமானத்தில் பயணிக்கிறோமே தவிர, நாம் விமானியாக முயல்வதும் இல்லை; விமானத்தை வடிவமைக்கும் வேலைக்கும் செல்லப் போவதில்லை. அது தேவையும் இல்லை. ஒருவேளை, உங்களுக்கு விமானி ஆவது போல, விமானத்தை வடிவமைப்பது போல் செ.நு. குறித்து அக்குவேறு ஆணிவேறாக அனைத்தையும் தெரிந்து கொள்வது தான் நோக்கம் என்றால், அவை அனைத்தையும் ஒரு தொடரில் யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. அவை அனைத்தும் எனக்குமே தெரியாது.
ஆனால், இந்த ஊருக்குப் போனால் அங்கிருந்து இந்த விமானத்தைப் பிடித்து இன்னொரு நிலையத்திற்குச் செல்ல முடியும், இப்படிச் சென்றால் விலை குறையும், அந்த விமான சேவை நிறுவனம் பாதுகாப்பானது என்பது போன்று என்னுடைய அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்ட விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பெரும்பாலான பயணிகளுக்கு, குறிப்பாக முதல்முறை பயணிப்பவர்களுக்குத் தேவைப்படும் தகவலும் இதுவே.
என் நண்பர் ஒரு முறை சேட்ஜுபிடியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். நீ வேண்டுமானால் Claudeஇல் முயன்று பாரேன் என்றேன். அது என்ன கிளாட் எனக் கேட்டார். அதுவும் சேட்ஜிபிடி போலத் தான் என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். இரண்டையும் பயன்படுத்தி அவற்றின் விடைகளை ஒப்பிட்டு பார்த்து, ஒரு தெளிவுக்கு வந்தார்.
அவருடைய அடுத்த கேள்வி கிளாட் மாதிரி வேற ஏதாச்சும் இருக்கா சொல்லிக் கொடு என்றார்.
“நோட்புக்எல்எம் தெரியுமா?” – தெரியாதே!
“சரி வா, இந்த வாரம் கத்துக்குவோம்” என்றிருக்கிறேன். நோட்புக்எல்எம் என்பது கூகுள் இலவசமாக வழங்கும் ஒரு சேவை.
அண்ணாமலை எப்படி 20,000 புத்தகங்கள் படித்தார் என்று தெரியவில்லை. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் நான்கைந்து புத்தகங்களையாவது இந்தக் கருவியின் வழி மேய்ந்து விடுகிறேன். அந்த மேய்ச்சல் சுவையாக இருந்தால் முழுப் புத்தகத்தையும் படிக்கத் தொடங்கி விடுகிறேன்.
போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள், புத்தகப் பிரியர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலருக்கும் உதவக் கூடிய ஒரு கருவி.
(பேசுவோம்…)
