ஆசிரியருக்குக் கடிதம் திண்ணைப் பிரச்சாரம் போல பேருந்தில் கொள்கைப் பிரச்சாரம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ராசிபுரம் அருகே ராசி மகாலில் நடைபெற்ற மிகச் சிறந்த பண்பாளரும், நான் திராவிடர் கழகத்தில் இருக்கும் காரணத்தால் என்னை அறிந்து நட்பு பாராட்டி வரும் ஒருவரின் இல்ல மணவிழாவிற்கு சென்று விட்டு இரவுப் பேருந்தில் வரும்போது, எனது அருகில் இருந்த ஒருவர், ‘‘இந்தக் காலத்தில் எந்த உறவுக்காரரையும் நம்பக்கூடாது.நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி என்னை பார்த்து, ‘‘என்னங்க நான் சொல்லுவது சரிதானே?’’ அய்யா என்றார். அதற்கு நான், ‘‘நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான்!’’ என்று சொல்லி விட்டு, ‘‘நீங்கள் என்னிடம் கருத்து கேட்ட காரணத்தால் உரிமையுடன் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாமா? என்று சொல்லி விட்டு, ‘‘ நீங்கள் நிலம், வண்டி வாகனங்கள் வாங்கும் போதும், உங்கள் குழந்தைகளை பள்ளியிலும், கல்லூரியிலும் சேர்க்கும் போது ஜாதகம் பார்த்து முடிவு எடுக்கிறீர்களா?’’ என்று கேட்டதற்கு ‘‘இல்லை அய்யா, எது நன்றாக இருக்கும்’’ என்று விசாரித்துத்தான் வாங்குவோம்’’ என்று சொன்னார்.

‘‘அது சரிதான் அய்யா…  ஆனால் உங்கள் மகன், மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யும் போது மட்டும் நீங்கள் யாரிடமும் பெண் வீட்டார் பற்றியோ, பையன் வீட்டார் பற்றியோ விசாரித்து முடிவு எடுக்காமல், அந்த குடும்பத்தினரைப் பற்றி தெரியாத, அறியாத எங்கோ இருக்கும் ஒரு ஜோதிடக்காரரிடம் போய் அவர் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு அவர் சொல்லுவதை வைத்து முடிவு எடுக்கிறீர்களே! அது சரியா?’’ என்று கேட்டவுடன்…

‘‘நீங்கள் பெரியார் கட்சியா?’’ என்று கேட்டார்.

அதற்கு, ‘‘கட்சி ஆராய்ச்சியெல்லாம் விடுங்கள், நான் சொன்னது சரியா? தப்பா? சொல்லுங்கள்’’ என்று சொன்னவுடன், ‘‘நீங்கள் சொல்லுவது சரிதான் அய்யா’’ என்று சொன்னார்கள்.

பிறகு நான் இருப்பது “உண்மை” கட்சி – மூட நம்பிக்கையில் இருந்து “விடுதலை” பெற வைத்த கட்சி யான திராவிடர் கழகத்துக்காரன்’’ என்று சொன்னேன்.

‘‘நான் கறி எடுப்பது என்றால் வெள்ளிக்கிழமை அமாவாசை ஆகிய நாட்களில்தான் எடுப்பேன்; அப்போதுதான் கழுத்துக் கறி, முன்னங்கால் தொடைக் கறி, நெஞ்சுக் கறி, ஈரல், செவுரொட்டி என்று கலந்து கலவையாக கொடுப்பார் கடைக்காரர்; அதை குழம்பு வைத்தால் நல்ல சுவையாக இருக்கும்’’ என்று சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்; சிந்திக்கவும் செய்தார்கள்.

‘‘ நீங்கள் ஆண்டு தவறாமல் பிரபலமான கோயிலுக்கு செல்லுவது போல் நாங்கள் ஆண்டிற்கு ஒருமுறை நல்ல பிரபலமான மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்து கொள்வோம்.அதுவும் அந்த மருத்துவரை முடிந்தவரை 10 டோக்கனுக்குள் சென்று பார்த்து விடுவோம், ஏன் என்றால் அப்போதுதான் அவர்களைப்பற்றி நாம் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியாக, சளைக்காமல், சலிப்பின்றி பதில் சொல்வார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பேருந்து நடத்துநர் ‘‘ஓமலூர் இறங்குபவர்கள் எல்லாம் எழுந்திருங்கள்’’ என்று சொன்னதும் அவர்களிடம் விடை பெற்றபோது, ‘‘நாளை மறுநாள் செப்டம்பர் 17 எங்கள் பெரியார் அய்யா பிறந்தநாள். ஆதலால்தான், அவர் மூலம் நாங்கள் அறிந்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேனே தவிர, வேறல்ல’’ என்று சொல்லி விட்டு ‘‘உறவுக்காரர்களிடம் மட்டுமல்ல;  பல விசயங்களில் பல பேரிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவே இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டேன்’’ என்று சொல்லி விடை பெற்றேன்.

அப்போது அவர்கள் ‘‘நீங்கள் நாங்கள் இறங்கும் காமனேரி என்ற ஊர் வரை வந்திருந்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்’’ என்று சொன்னதைக் கேட்டு பெருமிதம் அடைந்தேன். அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் எங்களின் உரையாடலை ரசித்துக் கேட்டிருக்கிறார்கள் என்று அவர்களின் புன்னகையுடன் கூடிய சிறிய சிரிப்பின் மூலம் அறிந்து கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்று இரவு பத்து மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தேன் மனநிறைவுடன்!

– ஓமலூர் பெ.சவுந்திரராசன்

பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *