திருப்பூர், அக். 06- திருப்பூர் சாய, சலவை ஆலைகள், நேற்று (5.10.2026) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 16.80 கோடி ரூபாய் மதிப்பிலான பிராசசிங் பணிகள் பாதிக்கப்பட்டன.
அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து, ரசாயனம் மற்றும் சாயங்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாய, சலவை ஆலைகள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன் கூறுகையில், ”வேலைநிறுத்தத்தால் 2,800 டன் பின்னலாடை துணிகள் தேக்கமடைந்துள்ளன. 16.80 கோடி ரூபாய் மதிப்பிலான சாயமிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மூலப்பொருட்களின் விலை உயர்வு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு, அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தேவையெனில் தற்காலிக தடையும் விதித்து, சாயத்தொழிலை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
