புதுடில்லி, அக். 05- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, தங்களுக்கு டில்லி காவல் துறையினர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து 3.10.2026 அன்று நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் புகாரைப் பதிவு செய்ய டெல்லி காவல் துறை தயக்கம் காட்டிய நிலையில், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, புகாரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் நியாயமாக விசாரிக்க ஒப்படைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, “ஜந்தர் மந்தர் போராட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தேன். போராட்டக்காரர்களைக் கைது செய்யும்போது அங்கு பெண் காவலர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து டில்லி காவல் துறை உதவி ஆணையர் விவேக் பகத்திடம் கேள்வி எழுப்பியபோது, அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னோக்கித் தள்ளினார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் நிகழ்வுக்கு இந்திய பத்திரிகை கவுன்சில், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டில்லி காவல் துறை துணை ஆணையர் நேஹா யாதவ் கூறும்போது, “மூன்று பெண்கள் அளித்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் விசாரணைக்காக இவ்வழக்கு டில்லி காவல் துறையின் குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்தப் பிரச்சினையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் திப்கே, அகில இந்திய மாணவர் சங்கத்தின் நேஹா போரா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் டில்லி காவல் துறையைக் கடுமையாகச் சாடி உள்ளனர்.
