டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன!
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன!
புதுடில்லி, செப்.28 தலைநகர் டில்லியில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர், கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்ப வத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிமன்றம், 2012 இல் நடந்த நிர்பயா சம்பவத்தைப் போல இது இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது.
இந்தியத் தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இது சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கியமான கேள்விகளை எழுப்பி வருகிறது.
ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்முறை
இதற்கிடையே டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்கு களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. குறிப்பாக ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இந்த சம்பவங்கள் 2012 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா வழக்குடன் ஒற்றுமைகளைக் கொண்டி ருப்பதாக குறிப்பிட்டது.
2012 ஆம் ஆண்டு டில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பின்னர் அவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்ப தற்கான சட்டங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
பாலியல் வன்கொடுமை
இந்த சூழலில் தான் டில்லியில் சமீ பத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு, இந்த சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கு அமைப்புகளின் உள்ள குறைபாடுகளை வெளிப்படையாக காட்டுவதாக தெரி வித்தது. பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் பேருந்துகள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பது, கண்காணிப்புக் குறைபாடு இருப்பதாகவும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அவை அதிக ஆபத்துள்ள பகுதிகளாக மாறுவதை அனு மதிக்க முடியாது என்று நீதிபதி ஜே.பி. பர்தி வாலா தெரிவித்தார்.
பாதுகாப்பான சூழல்
பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என வும், அதை உருவாக்காமல் போவதும் இது போன்ற சம்பவங்களுக்குக் காரண மாக அமையக்கூடாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும் போது, அதற்கு அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது என்றும், இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் என்றும் நீதிபதி கூறினார்.
அப்போது தான் நீதிபதிகள், ‘‘இது போன்ற சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு நடந்த நிர்பயா சம்பவத்தை போலவே நடப்பவைகள் உள்ளன. இரண்டு வழக்குகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது’’ என்றனர். அதாவது நிர்பயா சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், எதுவுமே மாறவில்லை.
நிர்பயா சம்பவம்
2012 ஆம் ஆண்டு நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் பெண்க ளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. பாலியல் குற்றங்களின் வரையறை விரிவுபடுத்தப்பட்டதுடன், இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டன.
நிர்பயா வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறார் என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி சிறையில் உயிரிழந்தார். மீதமிருந்த 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, டில்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
இதற்குப் பின்னரும் பாலியல் வன்கொடுமைகள் பட்டப் பகலிலேயே தொடர்வது – நாகரிக சமுதாயத்தில்தான் நாம் இருக்கிறோமா? அரசும், சட்டங்களும் செயல்படுகின்றனவா என்ற கேள்விகள்தான் எழுகின்றன.
