பெரியாரின் கொள்கைவழி நடந்து, பாரதிதாசன் பாட்டுப் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராகப் பரிணமித்தவர் கவிஞர் கருணானந்தம். மூட நம்பிக்கை எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு எனப் பல்வேறு பாடுபொருள்களில் கவிதைகளை இயற்றியவர்.
இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கம், குடந்தை அரசினர் கல்லூரி உள்ளிட்டக் கல்விக்கூடங்களில் பயின்றார். தமிழாசிரியராகவேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கிய , இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆனால் இவரின் தந்தை இவரை அரசு அதிகாரியாக்கவேண்டும் என்று விரும்பியதால் 1946 இல் ஒன்றிய அரசுப் பணியில் இணைந்தார். 1969 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணியைத் துறந்து, தமிழ்நாடு அரசுச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பரப்புரை அலுவரலாக நியமிக்கப்பட்டு துறை இயக்குநராக உயர்ந்தார்.
இளம் வயதிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1943 இல் குடந்தையில் தவமணியர சனுடன் இணைந்து திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தார். கருஞ்சட்டைப் படையின் அமைப்பாளராக பெரியார் இவரை நியமித்தார். அறிஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கியபோது அதில் இணைந்தார். முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரோடு நெருங்கிப் பழகியவர்.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதி வெளியிட்டவர் ஆவார்.
1989, செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மறைவுற்றார்.
