தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து சுமார் 45% முதுகலை இடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் உள்ள 24,659 இடங்களில் இதுவரை 13,560 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; இவ்வாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களில் 9,526 பெண்களும், 4,022 ஆண்களும், 12 திருநங்கைகள்/திருநம்பிகளும் அடங்குவர். (பெண்கள் விகிதம் அதிகம் இருப்பது மகிழ்ச்சியே!)
கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் 16 நிலவரப்படி சேர்க்கை விகிதம் 54.99% மட்டுமே உள்ளது; இது முந்தைய மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெரும் சரிவாகும். 2023-2024ஆம் ஆண்டில் பதிவான 66.19% சேர்க்கை விகிதத்தை விட தற்போதைய விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 1.30 லட்சம் இளங்கலை இடங்கள் உள்ளன. அதற்கு அதிகப் போட்டி நிலவுகிறது. ஆனால், முதுகலை இடங்களுக்கான வரவேற்பு அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. முதுகலை சேர்க்கை இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால், சேர்க்கை விகிதம் அதிகபட்சம் 2% முதல் 3% வரை மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முதுகலைப் படிப்புகள் மீதான ஆர்வம் குறைவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பலர் வழமையான முதுகலை பட்டங்களைப் பெறுவதற்குப் பதிலாக, உடனடியாக வேலைக்குச் செல்வதையோ அல்லது தொழில்முறைப் படிப்புகளில் சேருவதையோ விரும்புகின்றனர்.
ஆய்வுப் படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்பிற்கான காலதாமதம் போன்றவையும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
சமூக ஊடகங்களின் வளர்ச்சி, கவனச் சிதறல்கள், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் பரவலான பயன்பாடு ஆகியவை வாசிப்புப் பழக்கங்களை மாற்றியுள்ளன. விரிவான வாசிப்பும், ஆழ்ந்த புரிதலும் நிறைந்த பதில்களுக்குப் பதிலாக, விரைவான பதில்களைத் தேடிப் படிக்கும் வகையில் அவர்களைப் பழக்கியுள்ளன.
படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு லைெசன்சாக மட்டும் இருக்கக் கூடாது என்பார் தந்தை பெரியார். மிகப் பெரிய மனித வளம் மிக்க ஒரு நாட்டில் எல்லாத் துறைகளுக்குமான தேவைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. திறமையான மாணவர்களை உருவாக்கவும், தேவையான துறைகளை நோக்கி அவர்களை வழிகாட்டுவதும் அவசியம். வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்ப வசதிகளையும், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் பயன்பாட்டையும் எல்லா துறைப் பாடங்களிலும் கொண்டு வருவதை நோக்கிப் பல்கலைக்கழகங்கள் சிந்திக்க வேண்டும். கலைப் பிரிவு மாணவர்கள் அரசுப் பணிகளைப் பெரிதாக எதிர்பார்த்து வந்த சூழலில், முழு நேர நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தற்காலிகப் பணியாளர்கள் பெருமளவில் நிரப்பப்படுவதும், கலை – அறிவியல் கல்லூரிகளில் படித்து, பின்னர் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்ற கனவைத் தகர்க்கிறது.
அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் பயில்வோர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்களே! அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்குவதும், அவர்களின் அறிவுத் திறனையும், போட்டித் திறனையும் வளர்த்தெடுத்துப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இந்தத் தொடர்ச்சியான சரிவு குறித்து, அரசு உயர்கல்வித் துறை ஆய்வு செய்ய வேண்டும்
கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்பது உலகளாவிய பிரச்சினை தான் என்றாலும், இந்த அளவு வீழ்ச்சி எங்குமில்லை. தமிழ்நாட்டில் அண்மைக் காலத்திலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தக் கடும் வீழ்ச்சி இல்லை.
இன்றும்கூட, இந்தியாவின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் மானுடவியல் துறைகள் (Humanities) எனப்படும் மேற்கண்ட துறைகளுக்கு நல்ல முக்கியத்துவமும், சிறந்த வாய்ப்புகளும் இருக்கின்றன. குறிப்பாக மத்தியப் பல்கலைக்கழகங்களில் இத் துறைகள் சிறந்து விளங்குகின்றன. எனவே தகவல் தொழில்நுட்பம் – அறிவியல் துறைகளில் தமிழ்நாடு காட்டிய ஆர்வத்தை, மானுடவியல் துறைகள் எனப்படும் கலைப் பிரிவு களிலும் காட்ட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே கல்வியாளர்கள் தமிழ்நாட்டு அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சி இதற்கான முன்னெடுப்புகளை எடுத்து, மேற்படிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும் ஊக்குவித்தது. தற்போது அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வலதுசாரிகள் எப்போதும், மானுடவியல் துறைகளைப் பற்றிய எதிர்க்கருத்தை உருவாக்கி, மட்டம் தட்டும் வகையில், அவற்றை “கருத்துத் திணிப்புத் தொழிற்சாலைகள்” என்றே முத்திரை குத்தித் தாக்குகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்றோரின் கருத்தை உற்று நோக்கினால் இது உறுதிப்படும். தனியார் துறையை நோக்கிக் கல்வித் துறையை நகர்த்தும்போது, உடனடி வருமானம், அதிகச் சம்பளம் பெற்றுத் தராத இந்தப் படிப்புகளை நடத்தினால், அவற்றில் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் தயங்குவார்கள் என்பதால், தனியார் பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் இவற்றுக்கு முக்கியத்துவம் தராததுடன், இவற்றைப் பற்றிய எதிர்க்கருத்துகளையும் பரப்பி வருகின்றனர்.
அறிவியலும், தொழில்நுட்பமும் வெறும் அறிவியல் – தொழில்நுட்பத்துக்காக மட்டுமே இல்லை. பொருளாதாரம், புவியியல், உளவியல், தத்துவம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூகப் பணி, இலக்கியம், மானுடவியல், மொழிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை எளிமைப்படுத்தவும், இத் துறைகளின் தேவைகளை நிறைவுசெய்யவுமே பெரும்பாலான அறிவியல் – தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டால், இவை இரண்டு பெரும் துறைகளிலுமே சமமாக, அறிவு எப்படி வளர வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மனித குலத்தின் மேம்பாடு என்பது, மானுடவியல் துறைகளைச் செழுமைப்படுத்துவதிலும் அடங்கியிருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் வழங்கி மாணவர்களை, முதுநிலைப் படிப்புகளில் ஊக்குவிப்பதும், அதற்குத் தேவையான உதவிகளை, கட்டமைப்பை உருவாக்குவதும் அரசின் அவசியக் கடமையாகும்.
