(பதிலடிப் பக்கம்) வந்துவிட்டார் பாடகர் டி.எம்.கிருஷ்ணா!

4 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

ஒன்றிய அரசின் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் என்ற சுற்றறிக்கை, சட்டத் திருத்தங்களை எதிர்த்து, கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒன்றிய அரசு, வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இதையும், தேசியச் சின்னங்கள் மற்றும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து வந்தே மாதரத்திற்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கியிருப்பதையும் எதிர்த்து இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

“வந்தே மாதரம் பாடலின் கடைசி நான்கு சரணங்கள் வெளிப்படையாகவே இந்துத் தெய்வ வழிபாட்டை உணர்த்துகின்றன. இவற்றை அனைவரும் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 25 மற்றும் 26 வழங்கும் மதச் சுதந்திரத்திற்கும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது.

தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தையும், பாதுகாப்பையும் வந்தே மாதரத்திற்கு வழங்கியிருப்பது தன்னிச்சையான நடவடிக்கை.

இத்தகைய சுற்றறிக்கைகளும், சட்டத் திருத்தங் களும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, பெரும் பான்மை மதவாதக் கருத்துக்களை முன்னெடுப்பதாக அமைகின்றன.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவுகள் தனிநபர் உரிமைகளுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளுக்கும் எதிராக உள்ளதால், இவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று டி.எம். கிருஷ்ணா தனது மனுவில் கோரியுள்ளார்.

யார் இந்த டி.எம்.கிருஷ்ணா?

டி.எம். கிருஷ்ணா இசைப் பாடகர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்; 2016இல் ரமோன் மாக்சேசே விருது பெற்றவர். அவரது இசைத் திறமை பரவலாக பாராட்டப்பட்டாலும், ஜாதி, பாகுபாடுகளுக்கு எதிராகவும், சமூக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் அவர் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துக்களால் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை அமைப்பில் பார்ப்பன ஆதிக்கம், ஊழல் மலிந்து இருப்பதாகத் தொடர்ந்து  குற்றம் சாட்டி வருகிறார். இசை “மறைந்துவிட்டது” என்றும், சபாக்கள் சிலரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கூறி மார்கழி சீசனில் பங்கேற்க மறுத்தார். அதற்குப் பதிலாக 2016 பிப்ரவரியில் ஊரூர்-ஆல்காட் குப்பம் மீனவர் கிராமத்தில் இசை விழா நடத்தினார். இது ‘பாரம்பரிய’ இசை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2017இல் அய்தராபாத்தில் நடந்த நிகழ்விலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது தேவதாசி பின்னணியி லிருந்து விலகி “சிறந்த பார்ப்பனப் பெண்” என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டதாக டி.எம்.கிருஷ்ணா விமர்சித்தார்.

பாடகர் ஓ.எஸ்.அருண் கிறிஸ்தவ நிகழ்வில் பாட மறுத்த சர்ச்சையைத் தொடர்ந்து, கிருஷ்ணா “ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லா பற்றிய கர்நாடகப் பாடல்களை வெளியிடுவேன்” என அறிவித்தார். இது இசையின் ஆன்மீகத் தன்மையை சீர்குலைப்பதாகச் சிலர் அலறினர்.

தியாகராஜர் போன்றோரின் வேதாந்தப் பாடல்களில் ஜாதியும், பாலினப் பாகுபாடும் உள்ளதாகக் குறிப்பிட்டார். செபாஸ்டியன் மகன் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் மிருதங்கம் தயாரிப்பில் உள்ள ஜாதி வேறுபாடுகளைப் பேசினார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவால் பாடப் பெற்று 2023 மார்ச் 30 அன்று முதன்முதலாக இணையத்தில் வெளியிடப்பட்டது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி இப்பாடல் வெளியிடப்பட்டது. பிலஹரி இராகத்தில் அமைக்கப்பட்ட இப்பாடல் பார்ப்பனர் வட்டாரத்தில் குறிப்பாக அவாளின் ஊடகங்களில் ஒரு சுனாமியைக் கிளப்பி விட்டது.

மார்ச் 2024இல் சென்னை மியூசிக் அகாடமி 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை கிருஷ்ணாவுக்கு அறிவித்தது.  கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள், பார்ப்பனக் கதாகாலட்சேபகர்களான துஷ்யந்த் சிறீதர், விசாகா ஹரி உள்ளிட்டோர் மியூசிக் அகாடமியைப் புறக்கணிப்பதாகக் கூறினர்.

கிருஷ்ணா “இசை உலகிற்குப் பெரும் சேதம் விளைவித்தார்”, “தியாகராஜர் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியை அவமதித்தார்”, “பெரியாரைப் புகழ்ந்தார்” எனக் குற்றம் சாட்டினர்.

விருதுடன் இணைக்கப்பட்ட “சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது” (தி இந்து குழுமம் வழங்கும் பண விருது) குறித்து சுப்புலட்சுமியின் பேரன் வி. சிறீனிவாசன் வழக்குத் தொடர்ந்தார். நவம்பர் 2024இல் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

டிசம்பர் 2024இல் மேல்முறையீட்டில் தடை நீக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

எனினும் உச்சநீதிமன்றம் இடைக்காலமாக கிருஷ்ணாவை “எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பெற்றவர்” என அடையாளப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

கிருஷ்ணா பல ஆண்டுகளுக்குப் பிறகு (2024 டிசம்பர்) மியூசிக் அகாடமி மேடையில் கச்சேரி செய்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது, ஆனால் பார்ப்பனர்களின் புறக்கணிப்பும் இருந்தது என்பதே உண்மை.

டி.எம்.கிருஷ்ணா பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். ஜாதிப் பாகுபாட்டை எதிர்த்து, இசையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு செல்ல முயன்றார். பெருமாள் முருகன் கவிதைகள், சுற்றுச்சூழல், உரிமைகள் போன்ற தலைப்புகளிலும் பணியாற்றினார். பிஜேபியையும் சங்பரிவாரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஆதரவாளர்கள் அவரை முற்போக்குச் சீர்திருத்தவாதி என்கின்றனர்; எதிர்ப்பாளர்கள் பாரம்பரியம், பக்தி மற்றும் ஆன்மீகத்தைச் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னைப் பெரியார் திடலிலும் திராவிடர் திருநாளில்  – பொங்கல் விழாவில் (15.1.2025) இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நேரில் வருகை தந்து பாடினார் என்பது அடிக் கோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.

அண்மையில் (2026) வந்தே மாதரம் தொடர்பான வழக்கும் அவரது செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது.

‘பார்ப்பனர்கள் எவ்வளவோ மாறிவிட்டனர்! இன்னும் அவர்கள் மீது குற்றம் சுமத்தலாமா? துவேஷிக்கலாமா?’ என்று பார்ப்பனர்களும், துதிபாடிகளும் துள்ளிக் குதிக்கின்றனரே – அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி!

உண்மையாகவே முற்போக்கு எண்ணங்களுடன் ஒருவர் முன் வந்தால் அவரை வரவேற்க பெரியார் தொண்டர்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இருப்பது ‘பார்ப்பன துவேஷம்’ அல்ல. அதற்கு சின்னக் குத்தூசி, கிருஷ்ணா உள்பட பல உதாரணங்கள் உண்டு. ஆனால், அத்தி பூத்தது போல ஒரே ஒரு கிருஷ்ணா அக்கிரகாரத்திலிருந்து, சிந்திக்கச் சொன்ன பெரியாரைப் பற்றிச் சிலாகித்துப் பாடியதால் சீறி விழுகிறார்களே, அந்தப் பார்ப்பனர்களுக்கு இருப்பது தானே பச்சைத் துவேஷம்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *