“நெருப்பாற்றில் நீந்திய காலம்” – கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

11 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இரும்பு மனிதராகவும் இருப்பார், கரும்பு மனிதராகவும் இருப்பார் தளபதி மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. வெறும் பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் இல்லை; கொள்கைக்காக, கொள்கையைச் செயல்படுத்துவதற்காக ஆட்சிக்கு வந்தவர்கள்!

சென்னை, செப்.25  இரும்பு மனிதராகவும் இருப்பார், கரும்பு மனிதராகவும் இருப்பார் தளபதி மு.க.ஸ்டாலின்! தி.மு.க. வெறும் பதவிக்காகவும், ஆட்சிக்காகவும் இல்லை; கொள்கைக்காக, கொள்கையைச் செயல்ப டுத்துவதற்காக ஆட்சிக்கு வந்தவர்கள் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

“நெருப்பாற்றில் நீந்திய காலம்” கருத்தரங்கம்!

்கடந்த 18.9.2026 அன்று மாலை 6.30 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற “நெருப்பாற்றில் நீந்திய காலம்” எனும் தலைப்பில் மிசாக் காலக் கொடுமைகளை விளக்கும் மாபெரும் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

தந்தை பெரியார் திடலிலே நடைபெறும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறவர் தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட  ஆற்றல்மிகு செயலாளர் சேகர்பாபு அவர்கள். அவர் எதைச் செய்தாலும் விரைவாகவும், வேகமாகவும் செய்வார். அவருக்கு உறுதுணையாக இந்த மேடையிலே இருப்பவர்கள் பலர் உண்டு.

15 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தியாகு!

இங்கு ‘மிசா’ வரலாற்றிலிருந்து சிலவற்றை எழுச்சியுடன் எடுத்துச் சொன்னவர் அருமைத் தோழர் தியாகு அவர்கள். அவர் ஒரு ‘சிறைப் பறவை’. பறவைகூட கொஞ்சம் கூட்டுக்கு வெளியே போகும். ஆனால், இந்தப் பறவை கூட்டுக்குள் இருந்தவர் அல்ல, கூண்டுக்குள் இருந்தவர். கூண்டு வேறு, கூடு வேறு. தானே கட்டிக்கொண்டு சுதந்திரமாக வாழ்வதற்குப் பெயர் கூடு; ஆனால், கூண்டு என்பது அடைக்கப்படுவது. ஆனால் அதெல்லாம் சாதாரணம் என்று, 15 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தியாகு அவர்கள்! அவர் பெயரிலேயே ‘தியாகம்’ இருக்கிறது; அப்படிப்பட்டவர் அருமையான உரையாற்றியிருக்கிறார்.

அகில இந்திய அளவிலே ஒரு பெயர் அறியப்பட்டிருக்கிறது!

அதுபோல, ‘‘மிசா’வில்,  ஓர்  எளிய மாணவனாக, இளைஞனாகத்தான் நான் கலந்து கொண்டேன். ஆனால், இவ்வளவு அடக்குமுறைக்குப் பிறகும் இந்த இயக்கம் அழிந்துவிடவில்லை; அகில இந்திய அளவிலே ஒரு பெயர் அறியப்பட்டிருக்கிறது’’ என்று சொன்னார், திருச்சி சிவா அவர்கள்.  ‘சிவா’ என்பதும் இரண்டெழுத்துதான், ‘மிசா’ என்பதும் இரண்டெழுத்துதான். ஆனால், அதற்குப் பிறகு அவர் வளர்ந்திருக்கிறார்; மிசாவுக்குப் பிறகு தி.மு.க. வளர்ந்ததைப் போல! திராவிட இயக்கம் வளர்ந்ததைப் போல! எனவே, மேடையில் இருக்கிற அப்படிப்பட்ட அனைத்து அருமைத் தோழர்களுக்கும் என்னுடைய உளப்பூர்வமான வணக்கம்.

எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறபோது விந்தையோடு எனக்குச் சில உணர்வுகளும், நினைவு களும் வந்தன. ஏனென்றால் தாய்மார்கள், சகோதரிகள், 50 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடியவர்கள், பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது விசித்திரமாக இருக்கும்.

திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

1976 ஜனவரி 30 ஆம் தேதி திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம். அன்னை மணி யம்மையார் அவர்களும், நானும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகள், கலைஞரின் செயல்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது முடிந்த உடனே எங்களுக்கு ஒரு துண்டுச் சீட்டு வந்தது.

அதில், ‘‘சென்னை ‘விடுதலை’ அலுவலகத்திலிருந்து தொலைப்பேசியில் உங்களுக்குச் சொல்லச் சொல்லி ஒரு தகவல் வந்திருக்கிறது. அம்மா அவர்களுக்கும், உங்களுக்கும் இதைப் பகிர்ந்துகொள்கிறோம்.   தி.மு.க. ஆட்சி மாலை 6 மணிக்கெல்லாம் கலைக்கப்பட்டு விட்டது’’ என்று அந்தச் சீட்டில் தோழர்கள் எழுதிக் கொடுத்தார்கள்.

மிசாவுக்கு முன் கலைஞர் அவர்களுடைய கடைசி உரையாக, இங்கே பக்கத்தில் இருக்கிற செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கூடத்தில்தான் உரையாற்றுகிறார். அதில் அழகாகச் சொன்னார், ‘‘என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குப் போனால் எந்தப் பாதுகாவலரும், மற்றவர்களும் இல்லை.’’

அன்னை மணியம்மையார் அவர்கள், ‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரும் பதற்றப்படாதீர்கள்; இதை எதிர்கொள்வோம்’’ என்று அறிவுரை சொல்லி, கூட்டத்தை முடித்தார்கள்.

கூட்டம் முடித்து இரவு வந்தோம். நடுச்சாலையில் உணவருந்துவது எங்களுக்கு வழக்கமானது. வேனை நிறுத்திவிட்டு, அன்னை மணியம்மையார் அவர்கள் உணவு பரிமாறினார்கள். அதுதான் அன்றைய கடைசி உணவு. இட்லி சாப்பிட்டுவிட்டு இங்கே சென்னைக்கு வந்தோம்.

பெரியார் திடல் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்!

‘திடலில்’ அன்னையார் அவர்களை விட்டுவிட்டு நான் வீட்டிற்குப் போவது வழக்கம். நாங்கள் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே காத்திருந்தது. என்ன அந்தக் காட்சி என்றால், இன்றைக்கு எப்படித் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டம் என்று சொன்ன உடனே பெரியார் திடலைச் சுற்றி கொடிகள் மிகப்பெரிய அளவிற்கு அணிவகுத்திருக்கிறதோ, அதுபோல கொடிகளுக்குப் பதிலாக அவ்வளவும் காக்கிச் சட்டையினர், உள்துறை அதிகாரிகள்!

காந்தி இர்வின் சாலை பாலத்திலிருந்து, இந்தத் திடல் முழுவதுமே! உள்ளே நுழைந்தால், ஏதோ தேடப்படக்கூடிய கைதியைப் பிடிப்பதற்கு ஆயத்தமாக இருப்பது மாதிரி துப்பாக்கி, லத்தியை வைத்துக் கொண்டு, காவல்துறையினர் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். அம்மா அவர்களை, அவர்களுடைய அறையில் விட்டுவிட்டு, ‘‘அம்மா, நிலைமையைப் பார்த்தீர்களா? வருகிறோம்’’ என்று சொன்னோம். அதுவரையில் அங்கே காத்திருந்தார்கள் காவல் அதிகாரிகள்.

‘விடுதலை’ ஆசிரியர் என்ற முறையில், உள்ளே வந்து அமர்ந்த உடனே, ஒரு தலைமை அதிகாரி வந்து ஆங்கிலத்திலே என்னிடம் சொன்னார், ‘‘We have come for the unpleasant job’’ என்று! அதாவது, ‘‘நாங்கள் விரும்பத்தகாத ஒரு பணியைச் செய்கிறோம்’’ என்றார். பழைய ஆட்சியில், யார் என்று தெரியாத புதிய அதிகாரிகள் ஆறு பேர் அங்கே சுற்றித் திரிந்தார்கள். பெரியார் திடலின் சுற்றுச் சுவர் வரை இருந்தார்கள்.

எங்களைக் கைது செய்து, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்!

அன்றைக்கு இரவு 2 மணிக்கு எங்களைக் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது, சிறைச்சாலையில் என்ன நடந்தது? என்பதையெல்லாம் நாங்கள் சொல்வதை விட, ஓர் அறிக்கையே தலைசிறந்த நீதிபதியினால் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் ‘ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயில் கமிஷன் அறிக்கை.’

ஓராண்டுக்குப் பிறகுதான் வெளிச்சத்தைப் பார்த்தோம், வெளி உலகத்தைப் பார்த்தோம்!

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியான ஜஸ்டிஸ் ஷா என்பவர் கொடுத்த அறிக்கை பொதுவானது. ஆனால், எங்கேயும் இல்லாத ஒரு கொடுமை சென்னை  சிறைச்சாலையிலே அரங்கேற்றப்பட்டது. எல்லோரையும் மிரு கத்தனமாக அடித்தார்கள், கொடுமையாக நடத்தினார்கள், கீழ்த்தரமாக நடத்தினார்கள், வன்மத்தோடு நடத்தினார்கள். ஓராண்டுக்குப் பிறகுதான் வெளிச்சத்தைப் பார்த்தோம், வெளி உலகத்தைப் பார்த்தோம்.

அன்றைக்கு நாங்கள் நினைக்கவில்லை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படி ஒரு கூட்டம் வரும் என்றும், உங்களுக்கு முன்பு பேசும் நிலை வரும் என்றும்!

பதவி கிடைத்துவிட்டது என்ற காரணத்தினாலே தலைதுள்ளி ஆடுகிறார்கள் சிலர்!

உண்மை என்னவென்றே தெரியாமல், பதவி கிடைத்துவிட்டது என்ற காரணத்தினாலே தலைதுள்ளி ஆடக்கூடிய சிலருக்குப் புத்தி கற்பிக்கக்கூடிய அள விற்கு உண்மைகளைத் தோலுரித்துக் காட்டுகின்ற கூட்டமாக இந்தக் கூட்டம் இருக்கிறது.

இன்னும் கேட்டால், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் பற்றிப் பேசுபவர்களுக்கு… எங்களுக்காவது வயதிருக்கிறது; ஆனால், இப்போது பேசக்கூடிய சிலர் அப்போது இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தி ருப்பார்களா என்று தெரியாது.

வரலாற்றை, வயதானவர்கள்தான் பேச வேண்டும் என்ற அவசியமில்லை; இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தவர் கூட இன்றைக்குப் பேசலாம், அதில் தவறும் இல்லை. ஆனால் பக்குவமாகப் பேச வேண்டும்.

கொள்கைக்காக ஆட்சிக்கு வந்தவர்கள்!

இன்றைக்குக் கூட இந்தக் கூட்டத்திற்கு ‘நெருப்பாற்றில் நீந்தினோம்’ என்று போட்டிருக்கிறார்கள். நெருப்பாற்றிலே நீந்தினோம் என்பது மட்டுமல்ல, இனியும் நீந்தினாலும் எங்களை அசைக்க முடியாது! ஒரு ஸ்டாலினோ, திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது இந்த உணர்வை வைத்தி ருப்பவர்களோ, நாங்கள் எல்லாம் வெறும் பதவிக்காக வும், ஆட்சிக்காகவும் இல்லை; கொள்கைக்காக, கொள்கையைச் செயல்படுத்துவதற்காக ஆட்சிக்கு வந்தவர்களே தவிர, வேறில்லை.

இந்த இயக்கம்
மெழுகு அல்ல; இரும்பு!

இதோ தாய்மார்கள் பாதியளவிற்கு வந்தி ருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் இன்னும் உங்க ளுக்கு மூன்றில் ஒரு பங்கு கிடைக்கவில்லை; ஆனால், இங்குதான் 50 சதவிகிதத்திற்கு மேல் நீங்கள் ஆக்கிரமித்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட தாய்மார்களாகிய உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்த இயக்கம் மெழுகு அல்ல. மெழுகு என்றால் உருகும்; ஆனால், இது இரும்பு! இரும்பில் நெருப்பைப் போட்டால் பக்குவமாகிறது என்று அர்த்தம். ஓங்கிச் சம்மட்டியில் அடித்தால் இன்னும் அதற்குரிய கருவி தயாராகிறது என்று அர்த்தம்.

 ‘‘யுத்த காலத்தில்தான் உண்மைகள் பலியாகும்!’’

எத்தனைச் சம்மட்டி அடிகள் வந்தாலும் தாங்கலாம். ஆனால் பொய்யுரைகள், அதுவும் திட்டமிட்ட பொய்யுரைகள், உள்நோக்கத்தோடு சொல்லப்படும் பொய்யுரைகள் என்றால் அதை எவரும் ஏற்கக்கூடாது. எனக்கெல்லாம் ரொம்ப வருத்தம் என்னவென்றால், இங்கே, இந்தத் தலைப்பில் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. ஏனென்றால் தகுதியுள்ளவர்களுக்குப் பதில் சொல்லலாம்; தகுதியில்லாதவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லக்கூடிய அளவிற்கு இந்த ஜனநாயகம் கொண்டுவந்துவிட்டதே என்று நினைக்கும்போது வெட்கப்படுகிறோம், வேதனை அடைகிறோம்.

ஆனாலும், பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் உண்மைகள் களப்பலியாகக் கூடாது. ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு: ‘‘In times of war, the first casualty is truth’’ என்று பெயர். அதாவது ‘‘யுத்த காலத்தில்தான் உண்மைகள் தான் முதலில் பலியாகும்’’ என்று அர்த்தம். இது யுத்த காலம் அல்ல; இது சத்த காலம்! இன்னும் கொஞ்ச நாள் வந்தால் இது ‘செத்த காலம்’ ஆகும்.

பெரியார் திடல், கதவுகள் அன்றைக்கும் திறந்தன; இன்றைக்கும் திறக்கிறது, என்றைக்கும் திறக்கும்!

யோசித்துப் பார்த்தால், பெரியார் திடல்தான் இதைப் பேசுவதற்கு சரியான இடம். வேறெங்கே போனாலும் இவ்வளவு சுதந்திரம் வராது. எங்கெங்கோ தேடிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், பெரியார் திடல் எப்போதும் தயாராக இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இதன் கதவுகள் அன்றைக்கும் திறந்தன; இன்றைக்கும் திறக்கிறது, என்றைக்கும் திறக்கும்! இது வெறும் அமைச்சர்களுக்காக மட்டும் திறந்துவிடக்கூடியது அல்ல; போராளிகளுக்காகத் திறந்துவிடக்கூடிய ஒரு பாசறை. ஆகவேதான், இரண்டு நாள்களில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

நாடாளுமன்றத்தையே கலக்கக்கூடிய
ஒரு மாபெரும் இளைஞன்!

எனக்கு இன்றைக்கு ஒரு நாள்தான் ரயிலில் போவதற்காக ஓய்வு கொடுத்திருந்தார்கள். அந்த ஓய்வையும் இந்த மாமனிதர் பறித்தார். என்னுடைய சகோதரர், நாடாளுமன்றத்தையே கலக்கக்கூடிய ஒரு மாபெரும் இளைஞன், நாங்கள் எல்லாம் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் திருச்சி சிவா அவர்கள். எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சிறைச்சாலை என்றால் அதைச் சிந்தனைச்சாலையாக மாற்றுவோம் என்று சொல்லக்கூடிய எங்கள் தியாகு அவர்கள்… இப்படிப் பலரைப் பார்க்கும்போது, இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது எனக்கு 93 முடிந்து 94 ஆகக்கூடிய கட்டம், போகும்போது 24.

‘‘மானமிகு’’ என்றைக்கும் இருக்கும்;
‘‘மாண்புமிகு’’ வரும், போகும்!

அப்படிப்பட்ட ஓர் உணர்வைக் காட்டும்போது, இந்த ஆட்சி இல்லாவிட்டால் என்ன? ஆட்சி என்பது வரும் போகும். கலைஞர் அதை நன்றாகச் சொன்னார். ‘‘தாய்க் கழகத்தின் தலைவர், நம்முடைய சகோதரர் வீரமணி அவர்கள் சொன்னார், ‘‘மானமிகு’’ என்றைக்கும் இருக்கும். ‘‘மாண்புமிகு’’ வரும், போகும் என்றார்’’ என்று எடுத்துக் காட்டினார்.

இன்றைக்கு இவருக்குப் போகும் (திருச்சி சிவா வைச் சுட்டிக்காட்டி), நாளைக்கு எவருக்கோ போகும். ‘‘மாண்புமிகு’’ என்பது நிலையானது அல்ல. ‘‘மானமிகு’’ என்பதற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா? ‘உரிமை மிகு’ என்று அர்த்தம், ‘கொள்கை மிகு’ என்று அர்த்தம், ‘போராட்டம் மிகு’ என்று அர்த்தம், ‘அன்பு மிகு’ என்று அர்த்தம்!

கீரி, பாம்பு சண்டை:
உதாரணம் சொன்ன கலைஞர்!

பெரியார் திடல் எப்படிப் பொருத்தம் என்று சொன்னால், கலைஞர் இங்கே வருவார். கலைஞர் வரும்போது அவருக்கு ஆரியத்தின் எதிர்ப்பு வந்தவு டனே ஒருமுறை சொன்னார்: ‘‘நான் ஆட்சியிலே இருக்கும்போதும், கட்சியிலே இருக்கும்போதும் தொந்தரவு கொடுத்து, எப்போதெல்லாம் பாம்புகள் கடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் அந்த விஷத்தோடுதான் இங்கே வருகிறேன்’’ என்று.

அதற்கு ஒரு கதை சொன்னார். “பாம்பும், கீரியும் சண்டை போடும். அந்தக் கீரியைப் பாம்பு கடித்தாலும், கீரி பாம்பைக் கொன்றுவிட்டு, ஒரு மூலிகையின் மேல் புரளும். அப்படிப் புரண்டால், அந்த வலியெல்லாம் போய்விடும். மறுபடியும் அந்தக் கீரிப்பிள்ளைக்குப் போராடக்கூடிய சக்தி வரும். அந்த மிகப்பெரிய மூலிகை எனக்கு எங்கே கிடைக்கிறது என்றால், அது தந்தை பெரியார் நினைவிடத்திலே, பெரியார் திடலிலே கிடைக்கும்’’ என்று சொல்வார்.

இரும்பு மனிதராகவும் இருப்பார்,
கரும்பு மனிதராகவும் இருப்பார்!

அதுபோலவே, நம்முடைய இன்றைய ஒப்பற்றத் தலைவர் இரும்பு மனிதராகவும் இருப்பார், கரும்பு மனிதராகவும் இருப்பார். கரும்புக்குத் தேவையானவர்களுக்குக் கரும்பாக, இரும்புக்குத் தேவையானவர்களுக்கு இரும்பாக இருப்பார். இவருக்குப் பெயர்தான் ஸ்டாலின், மறந்துவிடாதீர்கள்!

இன்றைக்கு அவரைப் பார்த்து ஏதோ ஊதித் தள்ளி விடுவதைப் போல நீங்கள் பேசுகிறீர்கள். கொட்டடிச் சிறையிலே அடித்தவுடனே, ரத்தம் ஒழுக ஒழுக… இரவு ஒரு மணி அல்லது இரண்டு மணி இருக்கும், மணி தெரியாது. காரணம் எங்களுக்கு எதுவும் தெரியாது. மங்கலான விளக்கு வெளிச்சத்தில், படுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சிறிய 8 அடி கொட்டடி, 6 பேருக்கு மேலே வரிசையாக இருக்கிறோம். அனைவருக்கும் சேர்ந்து ஒரு மண்பானை.

வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன் தோழர்களே!

அங்கே 8 பேர் இருக்கும்போது… வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன் தோழர்களே, அறியாதவர்கள் எல்லாம் ஏதோ விலை போனவர்கள் போல பேசுகி றீர்களே, அவர்களுக்கு நாங்கள் சொல்லுகிறோம். இரண்டு நாள்கள் சிறுநீர் கழிக்கவேயில்லை. காரணம் என்ன தெரியுமா? இன்னொருவருக்கு முன்னால் நாம் எப்படிச் சிறுநீர் கழிக்க முடியும்? மிருகமாக இருந்தால் கழிக்கலாம், மனிதனாயிற்றே!

வேறு வழியில்லாமல் அந்தப் பானையில் போய் சிறுநீர் கழிக்க வேண்டும். 6 பேரில், 5 பேர் நாங்கள் வெளிப் பக்கமாகத் திரும்பிக்கொள்வோம். அறைக்குள்ளே 24 மணி நேரமும் பூட்டி வைத்திருப்பார்கள், வெளியே விடமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, உள்ளே வந்து அடிப்பார்கள், ஒருமையில் பேசுவார்கள், கொச்சையான வார்த்தைகளால் திட்டினார்கள். அதையெல்லாம் இந்த அவையிலே சொல்ல நான் விரும்பவில்லை. ‘இஸ்மாயில் கமிஷன் அறிக்கை’ அதைப் பதிவு செய்திருக்கிறது. இஸ்மாயில், என்ன கட்சிக்காரரா? தலைசிறந்த நீதிபதி அவர்.

ஒரு நாள், அடிவாங்கிய களைப்பினாலே நாங்கள் இயல்பாகத் தூங்கிவிட்டோம். வரிசையாகப் படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவரைப் பிடித்து உள்ளே தள்ளினார்கள். கால் இடறி என் மேலேதான் வந்து விழுந்தார். அவர் ஓர் இளைஞர். அன்றைக்கு 22 வயது இருக்கும். நான், கொஞ்சம் அதிர்ந்துபோய், ‘‘யார்?’’ என்று கேட்டேன். ‘‘நான் ஸ்டாலின் அண்ணே, ஸ்டாலின் அண்ணே’’ என்றார்.

நாங்கள் மனிதநேயம் உள்ளவர்கள், சுயமரியாதைக்காரர்கள்!

2, 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்ட ஓர் இளைஞர். அரசியலில் நாமெல்லாம் கொஞ்சம் அனுபவம் உள்ளவர்கள்; புதிய இளைஞர் தயாராகிறாரே, இவர் மனநிலை எப்படி இருக்கும்? இதுமாதிரி ஒரு கசப்பான அனுபவத்தைப் பார்க்கிறாரே என்று நினைத்த நேரத்திலே, அப்போது நாங்கள் மனம் சங்கடப்பட்டோம். ஏனென்றால் நாங்கள் மனிதநேயம் உள்ளவர்கள், சுயமரியாதைக்காரர்கள். அடுத்தவருடைய துன்பத்திலே இன்பம் காணக்கூடியவர்கள் அல்ல; We are not sadists!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *