பிரிட்டிஷாரால்தான் கேவலப்படுத்தப்பட்டனரா தேவதாசிகள்? ‘தேவநாயகி’ கருத்தரங்கம் – ஒரு பார்வை

6 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வழக்குரைஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

 

கடந்த 2026 செப்டம்பர் 19 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற தேவதாசிகள் பற்றிய ‘தேவநாயகி’ என்ற ஆய்வரங்கிற்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நாயகி என்ற அமைப்பை நடத்தும் எட்டுப் பெண்களின் முயற்சியால் தேர்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி. அவர்களுடைய உழைப்பும் திறமையும் வியப்பிற்குரியது.

ஆய்வரங்கில் உரையாற்றிய பேச்சாளர்களில் சிலர் (குறிப்பாக எழுத்தாளர் தோழர் அ. வெண்ணிலா )தேவதாசி முறையை ஒழித்ததே தவறு என்ற பார்வையில் பேசினார்கள்.

எழுத்தாளர்அ. வெண்ணிலா அவர்களின் உரை முழுவதும் அந்தப் பார்வையில்தான் அமைந்திருந்தது. அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அதே கருத்தை கொஞ்சம் முன்னும் பின்னுமாக சுய முரண்பாடுகளுடன் பேசினார். இந்தியாவில் சங்ககாலம் முதல் நடைமுறையில் இருந்த ஒழுக்கத்தில் குறுக்கிட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் பிரிட்டிஷ்சதி பற்றியும், மன்னர்களால் மணம் செய்து கொள்ளப்பட்ட இரண்டு தேவதாசிகளைப் பற்றியும் பேசினார். அதனால்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்றாலும் பழையன கழிதல் என்ற முறையில் அதை புதுப்பிக்க வேண்டியதில்லை என்றும் கூறினார். பிறப்பு சார்ந்த தொழில் எல்லாவற்றிலும் குழந்தைகள் கொஞ்சம் வன்முறையோடுதான் பழக்கப்படுத்தப்படுவார்கள், ஆசாரி வீட்டுக் குழந்தைக்கும் அதுதான் நடக்கும் என்றார். ஆசாரித் தொழில் பழகும் சிரமமும் வன்முறையும், தேவதாசி வீட்டுப் பெண் குழந்தைக்குப் பழக்கப்படும் வன்முறையும் ஒன்றுதானா என்ற கேள்வியை அவரிடம் யாரும் கேட்டுப் பார்க்கலாம்.

அதிர்ச்சி அளித்தது

அ. வெண்ணிலா அவர்கள் தன் உரையில், ‘‘1500 ஆண்டுகள் சிறப்புடன் இருந்த அமைப்பை அழித்துவிட்டோம் என்று தொடங்கி, தேவதாசிகள் மிக உயர்ந்த உரிமை வாழ்க்கை நடத்தியதாகவும், கோவில்களில் அவர்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டதாகவும் நிறைய செய்திகளைக் கூறினார். “ நமது நாடு, நமது பண்பாடு, நமது மதம் ஆகியவை பற்றித் தெரியாத பிரிட்டிஷ்காரர்களால்தான் தேவதாசிப் பெண்கள் மீது இழிவான முத்திரை விழுந்தது’’  என்று அவர் பேசியது அதிர்ச்சி அளித்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராக பெங்களூரு நாகரத்னம் மாவின் தலைமையிலான தேவதாசிகள் சங்கம் நடத்திய போராட்டம் மற்றும் அவர்கள் கொடுத்த முறையீட்டு மனுவைப் பற்றியும் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

அந்த பெங்களூரு நாகரத்னம்மாவின் ‘வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் பேசிய மியூசிக் அகாடமி யின் இயக்குநர்களில் ஒருவரான சிறீராம் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார். அவர் உரையின் தொடக்கத்திலேயே “ நாகரத்தினம்மா மிகப் பெரிய ஆளுமை வாய்ந்த பெண்மணி. ஆனால் அவர் தேவதாசிகள் அனைவரும் தன்னைப்போலவே உரிமை யுடன் இருந்ததாக நினைத்துக் கொண்டார். அதனால் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தின் தேவையை அவர் உணரவே இல்லை” என்று கூறியது அ. வெண்ணிலாவின் உரைக்குப் பதிலாக இருந்தது.

சிறீராம் பேசியதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் சாந்தினிபீ அவர்கள் (கல்வெட்டுகளில் தேவதாசிகள் என்ற ஆய்வு நூலை எழுதியவர்) நாகரத்னம்மாவின் வாழ்க்கையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது அதே காலத்தில் பெங்களூருவில் வாழ்ந்த பாவப்பட்ட சீதம்மாவின் வாழ்வையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சீதம்மாவின் துயரக்கதையைக் கூறினார். மன்னரால் நிய மிக்கப்பட்ட தேவதாசிக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை தன்னைத்தானே விற்றுக்கொண்ட தேவதாசிக்குக் கிடைத்திருக்குமா என்ற கேட்டார்.

பத்திரிகையாளர் கோலப்பன் அவர்கள் தேவ தாசிகள் பற்றி எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், சமூகத்தில் நடைமுறையில் இருந்த தேவதாசிகள்மீதான வசைமொழிகளைப் பற்றியும் பேசினார்.

வறுமையில் வீழ்ந்தனர்

தொடக்க உரையாக, ‘கோயிலின் கலைமுகம்’ என்ற தலைப்பில் பேசிய மருத்துவர் லஷ்மி பால கிருஷ்ணன் அவர்கள் (ஆனந்தவல்லி என்ற நாவலை எழுதியவர்) தேவதாசிகளின் கோயில் பணி களையும், தேவதாசி களுக்குள் நடந்த உயர்வு தாழ்வு சண்டைகளையும், அவர்கள் செய்த வேலை நிறுத்தம் பற்றியும் பேசினார்.

லஷ்மி பாலகிருஷ்ணன், கோலப்பன், சாந்தினிபீ ஆகியோர் தேவதாசிகளுக்கு மரியாதையும் இருந்தது, உடலியல் சுரண்டலும் இருந்தது. எனவே அந்த சட்டம் தேவைப்பட்டது என்றாலும் அந்தப் பெண்களின் மாற்று வாழ்க்கைக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டதால் தேவதாசிகளாக வாழ்ந்த பலர் வறுமையில் வீழ்ந்தார்கள் என்கிற பார்வையில் பேசினார்கள்.  முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான ராஜேந்திரன் அவர்கள் தாசிகள் பற்றிய செய்திகள் எந்தெந்தக் காலங்களில் கல்வெட்டுகளில் கிடைத்தன என்கிற செய்திகளை ஆவணங்களில் இருந்து அந்தந்த ஊர்களைப் பற்றிய செய்திகளுடன் எடுத்துக் காட்டினார்.

“சலாம் சப்தம்” ஏன் ஆடுகிறாய்?

நடனக்கலைஞரான ஸ்வர்ணமால்யா நல்ல தயாரிப்புடன் வந்திருந்தார். அவருக்கு முன்னால் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய குழப்பமான உரையால் தனது தலைப்பை நேரடியாக அணுகமுடியாமல் தவித்தார். இப்பிரச்சனை பற்றிய தனது கருத்தும் பார்வையும் மாற்றத்திற்குள்ளாகி வருகின்றன என்பதையும் வெளிப்படையாக்க் கூறினார். தேவதாசிகள் கடவுள்களைப் பற்றிமட்டும் பாடவில்லை. பெர்சிய இஸ்லாமியக் கலைகளின் தாக்கம், ஆங்கிலேயர் இசை என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், இன்று பரதநாட்டிய நிகழ்ச்சி நிரலில் ஆடப்படும் சப்தம் என்ற வகைப்பாட்டில் “சலாம் சப்தம்” என்ற ஒரு வகையை அவர்கள் உருவாக்கி ஆடினார்கள் என்றும், ஆனால் இன்று அந்த சப்தம் ஆடப்படுவதில்லை என்பதோடு ஏன் இதையெல்லாம் ஆடுகிறாய் என்ற கேள்விகள் தனக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். வரலாறு இன்று பாடப்புத்தகங்களில் எப்படி திரிக்கப்படுகிறது என்பதையும் அந்த வெறுப்பு அரசியல் இசை நடனத் துறையிலும் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகக் கூறினார்.

வரலாறினை மறைக்கக்கூடாது

சாருலதாமணி என்ற இந்தக் கலையை தேவதாசிகளிடம் இருந்துதான் கற்றுக்கொண்டோம் என்ற உண்மையை மறைக்கத்தான் விரும்புகிறார்கள் என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை எடுப்பவர்கள் அவரது வரலாறினை மறைக்காமல் எடுக்கவேண்டும் என்றும் கூறினார். பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய குற்றச்சாட்டும் அவர் உரையில் இருந்தது.

ஸ்வர்ணமால்யாவின் கருத்தை மெய்ப்படுத்தும் விதமாக 90 வயதான பத்மசிறீ விராலிமலை முத்துக் கண்ணம்மாள் அவர்களால் உருவாக்கப்பட்ட சலாம் மற்றும் சல்யூட் எல்லாம் இணைந்த நோட்டுஸ்வரத்தை அவரது பேரன் மணிவண்ணன், நட்டுவனார் சியாமளா, நடனக்கலைஞர் நர்த்தனா ஆகியோர் ஆடியது ஆரவாரமாக இருந்தது.

இப்படிப் பலவகைப் பார்வைகளும் இருந்தாலும் , ‘தேவதாசிகள் வாழ்க்கை முற்று முழுதாகக் கோயிலும் கலையுமாகத்தான் இருந்தது ; அந்தப் பெண்களுக்குத் தங்கள் உடல்மீது முழு உரிமை இருந்தது; அப்படி மரியாதையும் உரிமையுமாக வாழ்ந்த தேவதாசிகளை பிரிட்டிஷ்காரன்தான் தவறாக ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்திவிட்டான்!!!, ஆரிய சமாஜம் உள்ளிட்ட இந்திய சீர்திருத்தவாதிகள் பிரிட்டிஷ்காரன் பார்வையை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்த சட்டத்தின் மூலம் அப் பெண்கள் வாழ்வை அழித்துவிட்டார்கள் ‘ என்ற கருத்துதான் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் பதிவுச் செய்தியாக இருந்தது .

“தாசிகளின் மோசவலை” நூல் எங்கே?

அந்த தேவதாசிகள் சமூகத்தில் பிறக்காத ஆய்வாளர் களெல்லாம் கண்டு அறிந்த இந்த உண்மையை, அந்தச் சமூகத்தில் பிறந்து தேவதாசிமுறையை எதிர்த்துப் போராடிய மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் அறியாமல் இருந்துவிட்டார்களா ? என்ற கேள்விக்கு விடைசொல்ல ஒரு பேச்சாளரைக்கூட அழைக்காமல் நடக்கும் கூட்டம் எப்படி ஒரு நேர்மை யான ஆய்வரங்கமாக இருக்க முடியும என்ற கேள்வி எழுந்தது.

தேவதாசி முறையைத் தடுக்கக் கூடாது என்று போராடிய பெங்களூரு நாகரத்னம்மாவின் ‘வாழ்வும் பணியும்’ ஒரு தலைப்பாகப் பேசப்பட்டது போல, “தாசிகளின் மோசவலை” என்ற நூலை எழுதிய மூவலூர் ராமாமிர்தம், அவர்களின் வாழ்வும் பணியும் ( தோழர் ஜீவசுந்தரி எழுதிய ஆய்வு நூல்) பற்றிப் பேச ஒரு அமர்வு வேண்டுமல்லவா? தேவதாசி ஒழிப்பு சட்டத்தைக் கொண்டுவந்த டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் வாழ்வும் பணியும் ஒரு தலைப்பாகப் பேசப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

முழுநாள் நிகழ்ச்சியையும் நேரில் சென்று அரங்கில் இருந்து கண்டு கேட்டு முடித்தபோது இந்தக் கேள்விகளும் என்னுடன் புறப்பட்டு வந்துவிட்டன நன்றி உரையைக் கேட்காமல்!!!

(உண்மை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், செப்டம்பர் 26 சனிக்கிழமையன்று மாலை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ‘போன்றத்தக்கதா தேவதாசி முறை?’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *