தேனி, செப். 24- செப்டம்பர் மாதம் முதியோர் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததால் 500-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வட்டாட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடி மக்களுக்கு வழக்கமாக மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் அப்பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. 10ஆம் தேதிக்குள் வர வேண்டிய உதவித்தொகை, சுமார் 20 நாட்கள் கடந்தும் இன்னும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த 500-க்கும் மேற்பட்ட முதியோர் நேற்று முன்தினம் (22.9.2026) பெரியகுளம் வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்க சென்றபோது முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்து வருவதாக முதியோர் குற்றம் சாட்டினர்.
நேரம் கடந்து செல்ல கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத் தினால், வட்டாட்சியர் அலுவலர்கள் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகைத் தந்த தென்கரை காவல் துறையினர் முதியவர்களை வரிசைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வெயிலிலும் நீண்ட நேரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் கூறுகையில் “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த உதவித்தொகையைப் பெற்று வருகிறோம். எந்தக் காரணமும் சொல்லாமல் திடீரென நிறுத்தி விட்டார்கள். நடக்கக் கூட முடியாமல், கைதுணையாக ஆட்களை கூட்டிக்கொண்டு பலர் வந்திருக்கிறார்கள். பலர் பேருந்தில் ஏற சிரமப்பட்டு இங்கு வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அலட்சியமே பதிலாக கிடைக்கிறது.
இந்த உதவித் தொகையை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். வாக்களித்ததற்கு இதுதான் அரசு தரும் பரிசு நன்றிக்கடனா?” என கண்ணீர்மல்க வேதனையுடன் தெரிவித் தனர். இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலர்கள் தரப்பில் இருந்து எந்தவித விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
