சென்னை, ஜூலை 2 பூவிருந்தவல்லி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வந்த வீடுகள் மற்றும் கடைகளை வருவாய்த்துறையினர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இடித்து அகற்றியுள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
50 ஆண்டுகால குடியிருப்புகள் – நீதிமன்ற உத்தரவால் அகற்றம்
பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர் பிரதான சாலைப் பகுதியில் வீடுகள், தனியார் பள்ளி, கடைகள், நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சாலை, மின்சாரம், குடிநீர், ரேஷன் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடியிருப்பாளர்கள் முறையாக வீட்டு வரியும் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் ‘குட்டை புறம்போக்கு’ நிலத்தில் இருப்பதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 20 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிக்கை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெண்கள், குழந்தைகள் கதறல்
பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உதயம் தலைமையில் வருவாய்த்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டபோது, அங்கு வசித்து வந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
“வீட்டில் உள்ள பொருட்களைக் கூட எடுப்பதற்கு அவகாசம் தராமல், பொருட்கள் உள்ளே இருக்கும்போதே இடித்து தள்ளுகின்றனர். ஒரே நாளில் நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்” என்று பொதுமக்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டினர்.
வீடுகள் இடிக்கப்படுவதைக் கண்டு கையில் குழந்தைகளுடன் பெண்கள் கதறி அழுதனர். பள்ளி மாணவிகள் தங்களது புத்தகப் பைகளையும், நோட்டுகளையும் கண்ணீரோடு இடிபாடுகளுக்கு இடையே இருந்து அள்ளி வந்த காட்சி காண்போரை நெகிழச் செய்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் இடிப்புப் பணி நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடர்ந்தது. குடியிருப்பு வாசிகள் பூவிருந்தவல்லி – குமணன்சாவடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
“இதற்காகவா ஓட்டு போட்டோம்?”
பாதிக்கப்பட்ட பெண்கள் குப்பை மேட்டில் தங்களது வீட்டுப் பொருட்களைக் குவித்து வைத்துக்கொண்டு வேதனையுடன் தெரிவித்ததாவது:
“குட்டை புறம்போக்கு என்று வீடுகளை இடிக்கும் அதிகாரிகள், அதே குட்டை புறம்போக்கில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்காக இந்த வழியாக பொதுப்பாதை அமைத்துக் கொடுத்துள்ளனர். வசதி படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை; ஏழைகளின் வீடுகள் மட்டும்தான் தெரிகிறதா?”
அரசு மீதான அதிருப்தி
“மாற்றம் வேண்டும் என்று நாங்கள் குடும்பத்தோடு விஜய்க்கு ஓட்டு போட்டோம். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் எங்களை குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டார்கள். இந்த மாற்றத்தையா நாங்கள் கேட்டோம்? மழை பெய்யும் இந்தச் சூழலில் கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் எங்கே செல்வது என்று தெரியவில்லை.”
தங்களுக்கு உடனடியாக மாற்று இடமும், மறுவாழ்வுக்கான ஏற்பாடு களையும் அரசு செய்து தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
