அங்கே ரொட்டி – இங்கே முட்டை! கருஞ்சட்டை

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

ஒருபுறம் நாட்டின் பிரதமர் மோடி பன்னாட்டு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சிரித்துப் பேசி கைதட்டிக் கொண்டிருக்கிறார். மறுபுறம்  உள் நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளிப் பிள்ளைகள் சத்துணவு கூட இல்லாமல் தண்ணீரில் நனைத்த ரொட்டியையும், கழிவுப் பொரியையும் தின்று ‘வாழ்’நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

12 ஆண்டுகால தொடர் ஆட்சியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ என்ற முழக்கம் ஒருபக்கம் ஒலிக்க, பாஜக ஆளும் மாநிலத்தில் கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமை பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு காணொலி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

பள்ளிச் சிறுவனுக்குச் சத்தான மதிய உணவு வழங்குவதற்குப் பதிலாக, வெறுமனே உலர்ந்த ரொட்டி மட்டுமே வழங்கப்படுகிறது.

அந்தச் சிறுவன் தனது பசியைப் போக்கிக்கொள்ள வேறு வழியின்றி, வீட்டிலிருந்து தனியாக எடுத்துவந்த ஒரு சிறிய வெங்காயத்தைக் கடித்துக் கொண்டும், தட்டில் தண்ணீரை ஊற்றி அந்த ரொட்டியை அதில்   நனைத்துச் சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.

சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் பள்ளி உணவில் அநீதி இழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது.

அங்கு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் மதிய உணவிற்கான தொகையை ரொக்கமாகவே கொடுத்து விடுகின்றனர். மால்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சமைப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியை வைத்து மாணவர்களுக்கு முறையான சத்தான உணவை வழங்காமல், தலைமை ஆசிரியர் தனது சொந்த லாபத்திற்காக அதிர்ச்சிகரமான காரியத்தைச் செய்துள்ளார்.

தனது உறவினரின் பொரி ஆலையிலிருந்து தூக்கி எறியப்பட்ட கழிவுப் பொரிகளை மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து, அதைத் தண்ணீரில் நனைத்து மாணவர்களுக்கு உணவாகப் படைத்து வருகிறார்.

உலக மேடைகளில் இந்தியாவின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதில் ஆர்வம் காட்டும் தலைவர்கள், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கடைக்கோடி வரையில் உள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளின் தட்டில் என்ன உணவு பரிமாறப்படுகிறது என்பதை அறிந்ததுண்டா?

வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்து மகிழும் தலைவர், சொந்த நாட்டுப் பிள்ளைகள் தட்டில் தண்ணீரை ஊற்றி ரொட்டியை நனைத்துச் சாப்பிடும் அவலத்தை எப்போது போக்கப் போகிறார்?

அரசியல் லாபங்களையும் விளம்பரங்களையும் தாண்டி, நாட்டின் அடிப்படைத் தேவையான கல்வி மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பிஞ்சுப் பருவத்தில் சத்துணவு கிடைக்காத பிள்ளைகளின் எதிர்காலம் எத்தகைய விபரீதத்தில் அவர்களைக் கொண்டு போய் சேர்க்கும்?

பலகீனமான பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தி, எப்படி முன்னேற முடியும்? ‘‘அய்ந்தில் வளையாதது, அய்ம்பதில் வளையுமா?’’ என்ற சொலவடையைச் சொன்னால் மட்டும் போதுமா?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளலாமே! நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது,1920ஆம் ஆண்டிலேயே முன் மாதிரியாக சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியில் அது பரவலாக்கப் பட்டது. 1956 ஜூலை 17 அன்று எட்டயபுரத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்து வரும் திராவிட இயக்க ஆட்சியில் கிட்டதட்ட 70 ஆண்டு  காலமாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாகப் பரிணமித்துள்ளது. சமூகநீதிக்கான  சரித்திர நாயகர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மதிய உணவோடு, காலை உணவுத் திட்டமும் செயலாக்கப்பட்டது.

சங்கிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாநிலங்களில் கல்விக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகளின் நிலை கழிவிரக்கம் கொண்டதாகக் காணப்படும் அவலத்தையும், திராவிட இயக்கச் சித்தாந்தம் பரவியுள்ள தமிழ்நாட்டில் சத்துணவோடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாட்டுக்குத் தேவை திராவிட சித்தாந்தமா? பார்ப்பனிய காவி சித்தாந்தமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *