தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒரு கொள்கையைப் பின்பற்றினால், அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதற்கு எவ்வளவு தொல்லைகள் வந்தாலும் அதனை ஏற்று இடையறாது அந்தக் கொள்கையை

மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குத் துன்பங்களை, தொல்லைகளை அனுபவிக்க நாம் பயப்படக்கூடாது!

 

Contents

திருநெல்வேலி, செப்.21 ‘ஒரு கொள்கையைப் பின்பற்றி னால், அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதற்கு எவ்வளவு தொல்லைகள் வந்தாலும் அதனை ஏற்று இடையறாது அந்தக் கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குத் துன்பங்களை, தொல்லைகளை அனுபவிக்க நாம் பயப்படக்கூடாது’ என்ற பாடத்தை தந்தை பெரியார் சொன்னார் என்பதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு”

கடந்த 19.08.2026 அன்று, திருநெல்வேலியில் நடைபெற்ற, “எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு” எனும் தலைப்பில், வாகையடி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்தத் திருநெல்வேலி மாநகரத்தில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு திறந்தவெளி மாநாடு என்று அறிவிக்கப்பட்டு, பல தடைகளைக் கடந்து நடை பெறக்கூடிய; இந்த அருமையான சுயமரியாதைச் சுட ரொளிகளை நினைவூட்டக்கூடிய  தந்தை பெரியார் அவர்களுடைய   ‘எதிர்நீச்சல் பயணம் எப்படிப்பட்டது? 80 ஆண்டுகளுக்கு முன்னால்!’ என்ற தலைப்பிலே அமைக்கப்பட்டிருக்ககூடிய இந்தத் திறந்தவெளி மாநாட்டினுடைய பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய மாவட்டத் தலைவர் அருமைத் தோழர் இராஜேந்திரன் அவர்களே, மாவட்டச் செயலாளர் வேல்முருகன் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் அவர்களே!, கழகக் கொடியேற்றிய கழகத்தினுடைய மாவட்டக் காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் காசி அவர்களே, மாநாட்டைத் திறந்து வைத்த மாவட்டக் காப்பாளர் தோழர் டேவிட் செல்லத்துரை அவர்களே, தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து சிறப்பாக உரையாற்றிய மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் அவர்களே, தி.மு.க. மாநில வர்த்தக அணிச் செயலாளர் மாலை ராஜா அவர்களே, பகுத்தறிவாளர் கழகத்தின் சீரிய எழுத்தாளர், அன்பிற்குரிய அருமை சகோதரர் முல்லைவேந்தன் அவர்களே, மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி அவர்களே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்டக் காப்பாளர் அய்யா வேலாயுதம் அவர்களே, பெரியார் வீரவிளையாட்டு கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களே, குமரி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் அவர்களே, செயலாளர் செயல்வீரர் வெற்றிவேந்தன் அவர்களே, மாநில ஒருங்கிணைப்பாளரும், இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கு முழு முதற்காரணமாக இருக்கக்கூடிய அருமைத்தோழர் உரத்தநாடு குணசேகரன் அவர்களே, எனக்கு முன்பு உரையாற்றிய, அருமைத் தோழர் பெரியார் செல்வன் அவர்களே, மாமன்ற உறுப்பினர் உலகநாதன் அவர்களே, மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் நெல்லை முத்தையா அவர்களே,
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முருகானந்தம் அவர்களே!

இம்மாநாட்டிற்கு ஒரு தனிப்பெருமை!

அதுபோல இந்தக் குடும்பத்தில் இன்னும் நம் மனதில் இருக்கக்கூடிய சுயமரியாதைச் சுடரொளிகள் – இவர்களையெல்லாம் நினைவூட்டி வீரவணக்கம் செலுத்தக்கூடிய இந்த அற்புதமான தந்தை பெரியாரின் எதிர்நீச்சல் பயணத்தில், 80 ஆண்டுகால வரலாறு என்று இருக்கக்கூடிய சிறப்பான மாநாட்டுக்கு இந்தக் குடும்பத்தில் இருந்து யார் யார் பாடுபட்டார்களோ, அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய வாரிசுகள் இங்கே வந்திருப்பதுதான் இதற்கொரு தனிப்பெருமை!

அய்யா பிரம்மநாயகம்

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் இந்த மாநாட்டு அரங்கத்துக்கே பெயர் சூட்டி மகிழ்கிறோம். அவர்தான் முதலில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்து, அப்போதுதான் எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அறிமுகம் ஆனவர்கள். அவருடைய இல்லத்தில் நாங்கள் தங்கியிருக்கிறோம். அவரது உள்ளம் தாராளமான உள்ளம்! அதுமட்டுமல்ல, அவருடைய உணவு விடுதிதான் எங்களுக்கெல்லாம் சத்திரம் போன்று கழகத் தோழர்களுக்கு பயன்பட்ட ஒன்று. அய்யா தந்தை பெரியார் அவர்கள், மனமுவந்து அவர்களைப் பாராட்டுவது மட்டுமல்ல, மதிக்கத்தகுந்தவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட அய்யா பிரம்மநாயகம் அவர்கள்! நாங்கள் ஜாதியை விட்டுவிட்டுத்தான் சொல்வோம். ஆனால், எல்லாருக்கும் தெரியனும் என்றால் பிரம்மநாயகம் பிள்ளை என்றால்தான் அவ ரைத் தெரியும். மிகமுக்கியமாக, குமாரவிலாஸ் ஓட்டல் தெரியும். குமாரவிலாஸ் உணவு விடுதியை மாதிரி தரமான உணவுவிடுதி ஒன்றை அந்தக்காலத்தில் பார்த்திருக்க முடியாது.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்

அந்தக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளை இங்கே இருக்கிறார். மருமகள் இருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். அதுபோலவே வள்ளியூர் நட்சத்திரம் என்றுதான் கூப்பிடுவார்கள். அப்பேர்ப்பட்ட வள்ளியூர் நட்சத்திரம் எதற்கும் துணிந்து, எல்லாவற்றையும் செய்வார். பழைய தோழர்கள் ஏராளம் உண்டு, வள்ளியூரில். இராமலிங்கம் போன்றவர்களின் பெரிய பட்டியல் இருக்கின்றது. நேரத்தின் நெருக்கடியினாலே அவ்வளவு பெயரையும் சொல்ல முடியாது. இன்றைக்கு அவருடைய பேரப்பிள்ளைகள் எல்லாம் இங்கே வந்திருக்கிறாரகள். வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம். இது ஒரு ஆலம்! ஆலம்! இந்தக் ெகாள்கை இருக்கிறதே எந்தக்கொம்பனாலும் அசைத்துப் பார்த்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு கொள்கை. சாதாரணமாக இது நீரூற்றி வளர்ந்தது அல்ல. இரத்தம் சிந்தி வளர்ந்த ஒரு இயக்கம் இந்த இயக்கம்! அடித்து அல்ல, அடிபட்டு இரத்தம் சிந்திய இயக்கம் இந்த இயக்கம். அடக்கு முறைகளை ஏற்று வந்த இயக்கம். எந்த கைமாறும் கருதாமல் – இந்த இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இதில் சேர்ந்து ஏதாவது மந்திரிகளாக ஆகியிருப்பார்களா? இந்த இயக்கத்தில் சேர்ந்து ஏதாவது சம்பாதித்திருப்பார்களா? அவர்கள் சம்பாதித்தது எல்லாம் புகழை சம்பாதித்து இருக்கிறார்கள்! பெருமையை சம்பாதித்திருக்கிறார்கள். மானமிகு என்ற அந்த சொல் இருக்கின்றதே. அது ஒருமுறை வந்தால் மறுபடியும் அது போகாது.

‘‘மாண்புமிகு வரும், போகும்; ஆனால், மானமிகுதான் என்றைக்கும் இருக்கக்கூடியது’’ என்று கலைஞர் மிகத் தெளிவாகச் சொன்னார்.  அப்படிப்பட்டவர்களை நினைவூட்டுவதற்காகத்தான் இந்த திறந்தவெளி மாநாடு! இது யாருக்கும் தொல்லை கொடுப்பதற்காக அல்ல, யாரையும் வைவதற்காக அல்ல. யார் மீதும் வெறுப்பை உண்டாக்குவதற்காக அல்ல. வெறுப்பை உண்டாக்குபவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி! நாங்கள், மனித சமூகம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள்.

‘‘தொண்டு செய்து பழுத்த பழம்!

தூயதாடி மார்பில் விழும்!

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

மனக்குகையில் சிறுத்தை எழும்!

அவர்தான் பெரியார் பார்!’’

என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.

தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை  உலகுதொழும்!

பெரியாரின் சிந்தனைகள் உலகளாவிய அளவுக்கு எட்டியிருக்கிறது என்பதற்கு அடையாளமாக, மண்டைச் சுரப்பை – அது, சொல்லி வைத்து வெளியே வருகிற விசயம் அல்ல, சுரக்கும்! சுரந்துகொண்டே இருக்கும்! அந்தச்சுரப்புதான் மிக முக்கியம். குளம் நிற்கும், ஆறு ஓடும். ஆனால், ஊற்று இருக்கிறது பாருங்கள், அது சுரந்துகொண்டே இருக்கும். அதுமாதிரி தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை  உலகுதொழும் என்று சொன்னார்கள். தொழும் என்றால் கும்பிடறதுன்னு அர்த்தம் இல்லை. தொழும் என்றால் பின்பற்றுதல் என்று ஒரு பொருள் உள்ளது. ஆகவே, உலகம் அதைப் பின்பற்றும் என்ற பொருளிலே இன்றைக்கு சிறப்பாக அடைந்திருக்கிறோம்.

எங்களைப் போன்ற
எளிய பெரியார் தொண்டனின் கடமை!

இந்த மாநாட்டினுடைய நோக்கம், பல பேர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். எப்போதும் எங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பட்டாளம் இருக்கிறது. அது சிறுகூட்டம். அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. வழியில் எத்தனையோ கல்லு, முள்ளு வந்தால் கூட ஒதுக்கி அப்படியே தள்ளிவிட்டுப் பயணங்கள் தடைபடாமல் போய்க்கொண்டே இருக்கிற இயக்கம், இந்த இயக்கம்! அப்படிப்பட்ட ஒரு சூழலிலே ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த நெல்லைக்கு தந்தை பெரியாரோ, அவருடைய வாழ்நாள் மாணவனாக; தொண்டனாக இருக்கிற என்னைப் போன்றவர்களோ இங்கே வருவது, உங்களைச் சந்திப்பது என்பது முதல் முறை அல்ல. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். எனவே, இப்போது வந்திருக்கிறவர்களுக்கு; இளைய தலைமுறைக்கு இது தெரியாது. அதன் காரணமாகத்தான் என்னவோ என்று நினைத்து காவல்துறை அதிகாரிகளுக்குக் கூட முழு தகவல்கள் போயிருக்க முடியாது. ஆகவேதான், ‘‘அவர்கள் வந்தால் என்னாகுமோ’’ என்று இவர்கள் கொஞ்சம் அச்சப்பட்டிருக்கலாம்; யோசித்து இருக்கலாம். இந்தக் கூட்டம் நடக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற தவறான முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் சேர்த்து விளக்க வேண்டியது எங்களைப் போன்ற எளிய பெரியார் தொண்டனின் கடமை!

தயவு செய்து நினைத்துப் பாருங்கள், தந்தை பெரியாருக்கு இன்றைக்கு உலகளவில் எவ்வளவு பெருமை இருக்கிறது. அவருடைய பெருமையை யுனெஸ்கோ மாமன்றம் ‘தொலை நோக்காளர்’ என்று சொன்னது. ஏன், இதே ஆர்.எஸ்.எஸ். உள்பட அமைந்த அரசாங்கம் தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டிருக்கிறது. அந்த அஞ்சல் தலையிலே,‘பெரியார் ஒரு இந்தியாவின் தேசியத் தலைவர்’ என்று எழுதியிருக்கிறார்கள். பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அறிவு மட்டம். சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள். பைத்தியங்களுக்கு நாங்கள் பதில் சொல்லி பழக்க மில்லை. வைத்தியம்தான் அவர்களுக்குத் தேவையே தவிர, வேறில்லை என்று விட்டிருக்கிறோம். ஆகவே, அப்படிப்பட்ட சிறப்பான ஒரு நிலையிலே ஒன்றை உங்களுக்குச் சொல்லுகிறோம்.

கண்ணுக்குத் தெரிந்த பெரியார் தொண்டர்களும் உண்டு; கண்ணுக்குத் தெரியாத ஆதரவாளர்களும் உண்டு!

எந்தெந்த பகுதிகளில் எல்லாம், 80 ஆண்டுகளுக்கு முன்னால் கடுமையான எதிர்ப்பு இருந்ததோ, அது படிப்படியாக இந்தக் கொள்கையைப் புரிந்துகொண்ட காரணத்தால்; இந்தக் கொள்கையினுடைய தேவையை அவர்கள் அறிந்து கொண்ட காரணத்தால், எதிர்த்த நிலைமை மாறியது. இந்தக் கொள்கை எப்படி ஆலமரமாகப் படர்ந்து இருக்கிறது? விழுதுகளாக அதைத் தாங்கக்கூடியவர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரிந்த பெரியார் தொண்டர்களும் உண்டு. கண்ணுக்குத் தெரியாத ஆதரவாளர்களும் உண்டு என்று சொன்னால், ஏதோ ரகசியப் படையென்று நீங்கள் நினைக்காதீர்கள். கருப்புச் சட்டை போட்டவர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தவர்கள். கருப்புச் சட்டை அணியாமல், இந்தக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் எல்லா இயக்கங்களிலும், கட்சிகளிலும் இருப்பார்கள்; அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.

‘‘நீங்கள் ரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா? தலைமறைவு இயக்கம் நடத்துகிறீர்களா?’’

சில ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா விலிருந்து ஒரு பத்திரிகையாளர் அம்மையார் வந்து, என்னைப் பேட்டி  எடுத்தார்.

‘‘What is membership of your organisation?’’ என்று அந்த அம்மையார் கேட்டார். உங்கள் இயக்கத்திலேயே எவ்வளவு பேர் சேர்ந்திருக்கி றார்கள்? என்று கேட்டார். நான் ஆங்கிலத்தில் சொன்னேன். ‘‘எங்கள் இயக்கத்தில் இரண்டு வகை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள்’’ (Visible members and Invisible members) என்று அந்த அம்மையாரிடம் சொன்ன வுடனே, அவர் அதிர்ந்துபோய் கையிலிருந்த பேனாவை ‘டக்கென்று’ கீழே போட்டுவிட்டார். ‘‘What? Are you running a underground Movement?’’ ‘‘நீங்கள் ரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா? தலைமறைவு இயக்கம் நடத்துகிறீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘அப்படி அல்ல’’ என்று சொல்லிவிட்டு, அதாவது, கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் என்றால் நேரிடையாக கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு இயக்கத்தில் இருப்பார்கள். ஆனால், எல்லா இயக்கங்க ளிலும் பெரியார் கொள்கை உடையவர்கள் இருப்பார்கள். அவர்கள் (தனது இடதுபுறம் அமர்ந்திருக்கும் மாலை ராஜாவைக் காட்டிப் பேசுகிறார்) மாலை ராஜாக்களாக இருப்பார்கள்; காலை ராஜாக்களாக இருப்பார்கள்; மதிய ராஜாக்களாகவும் இருப்பார்கள்; என்றும் ராஜாக்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த உருவத்தில் இருந்தாலும், உருவம் முக்கியம் அல்ல, ‘பெரியார் இல்லாவிட்டால், நாம் இந்த அளவுக்கு வந்திருப்போமா?’ என்ற
நன்றி உணர்ச்சி பரவலாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை.

 மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு…

ஆகவேதான், அவருடைய வாழ்க்கைப் பயணம் எப்படி எதிர்நீச்சலாக இருந்ததென்று மக்களுக்கு விளங்கவேண்டும். அதுமட்டுமல்ல, இன்றைய தலைமுறை இளைஞர்களை ஜென்–சி என்று சொல்லு கிறோம் அல்லவா? அவர்களுக்கு விளங்க வேண்டும். ‘ஒரு கொள்கையைப் பின்பற்றினால், அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதற்கு எவ்வளவு தொல்லைகள் வந்தாலும் அதனை ஏற்று இடையறாது அந்தக் கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குத் துன்பங்களை, தொல்லைகளை அனுபவிக்க நாம் பயப்படக்கூடாது’ என்ற பாடத்தை தந்தை பெரியார் சொன்னார். ஒரு லட்சியம் – அதை அடைய வேண்டுமென்று நினைக்கிறோம்.
ஜாதி ஒழிப்பு லட்சியம். மனித சமத்துவம் மிக முக்கியம்.

‘அனைவருக்கும் அனைத்தும்!’

எல்லோருக்கும் எல்லாம் – ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி என்பது மிக முக்கியம். அந்த சமூகநீதியை எல்லா மக்களும் இன்னமும் பெறவில்லை. இன்னமும் ஆண்டான் அடிமை ஒரு பக்கத்திலே. மேல்ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரன் இருக்கிறான். ஆகஸ்ட் 15 இல்தான் இந்தியாவின் 80 ஆம் சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறோம். இந்த 80 ஆவது சுதந்திர நாளில் இன்னமும் மனுதர்மப்படி பிராமணன் இருக்கிறான், சூத்திரன் இருக்கிறான். இதைச் சட்டமும் அங்கீகரித்திருக்கிறது. மேல் ஜாதி, கீழ் ஜாதி – தொடக்கூடிய ஜாதி, தொடக்கூடாத ஜாதி என்றெல்லாம் இருக்கிறது. இந்தக்கொடுமை இன்னமும் மாறவில்லையே? அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் பதவிக்குப் போகிற வர்கள் அல்ல. நாங்கள் வேறு எதையும் உங்களிடம் கேட்க வரவில்லை. எல்லோரும் படிக்க வேண்டும். மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் படிப்பு என்று சொன்னால், காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, மிதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினுடைய உணர்வுகளைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கொள்கைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதுதான் எங்களின் வேலை. ஆகவேதான், இந்த கொள்கையைச் சொல்லு வதற்குத்தான் நாங்கள் நெல்லைக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்.

பெரியாரின் எதிர்நீச்சல் பயணம் பற்றிய பழைய வரலாறு இன்றைக்குப் பலருக்கும் தெரியாது. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையிலேதான் இந்த செய்திகளைப் பரப்ப வந்தி ருக்கிறோம். இரண்டு மூன்று செய்திகளை சொல்லி மற்ற செய்திகளுக்கு நான் போகிறேன்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *