பெரியார் நடை தஞ்சையில் நடைபெற்றது. 93 வயதிலும் உற்சாகம் குன்றாமல் எழுச்சி நடை போட்ட தமிழர் தலைவர் ஆசிரியர்!
19.9.2026 அன்று காலை 6 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தஞ்சை புதுப்பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நடை தொடங்குகிறது. ஆசிரியர் தலைமையில் தொடங்கும் நிகழ்வில் ஊரில் இருந்துகொண்டு கலந்துகொள்ளாமல் போவதா என்று அதிலே கலந்துகொள்ளத் தயாராகிவிட்டேன். ஆசிரியரோடு நடைபயணம் என்பதால் ஆர்வ மிகுதியில் 3:40 மணிக்கே முழிப்புத் தட்டிவிட்டது. 5 மணிக்கு பேராசியர் எழில் அவர்களை அழைத்து தோழர் ரெடி என்றேன். அவரும் தயாராகி 5:30 மணிக்கு வந்துவிட்டார். 10 நிமிடத்தில் புதுப்பேருந்து நிலையம் வந்துவிட்டோம்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் 6 மணிக்கு வந்துவிட்டார். 6:30 மணிக்கு நடை தொடங்கும் என்றனர். ஆசிரியர் 6:20 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். ஆசிரியர் இறங்கி வந்ததும் பெரியார் சிலை முன் முழக்கமிட்டோம். மாணவர்களைப் பார்த்தவுடன் அவருக்கு உற்சாகம். நடை தொடங்கியது.
நடை என்று தான் சொன்னார்கள். நானும் நம்பி வந்தேன். ஆனால் ஆசிரியர் நடந்த வேகம் மாரத்தான் ஓட்டத்துக்கு இணையாக இருந்தது. நானும் பேரா. எழிலும் நம்ம வேகத்தில் போனால் பின் தங்கிவிடுவோம். ஆசிரியரோடு அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்துப் போனால் ஒருவழியாக முடித்துவிடலாம் என்று வேகமாக நடந்தோம். ஆனால் ஆசிரியர் நடந்த 2.5 கிலோமீட்டர் தூரத்தில் எங்களால் அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 93 வயதில் அதிகாலையில் 2.5 கிலோமீட்டர் தூரம் நடையும் இப்படி ஒரு வேகமுமா? ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். இதைவிட ஆச்சரியம் அவர் 5:30 மணியளவில் தான் ரயில் தஞ்சை வந்தடைந்தார். வாழும் ஆச்சரியம் தான் ஆசிரியர்.
93 வயது ஆசிரியருக்கு 29 வயது என்னால் ஈடு கொடுக்க முடியாதது கூட பரவாயில்லை. 15 வயது 16 வயதான கராத்தே வீரர்களால் கூட அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. அந்த இளைஞர்கள் மெதுவாகத்தான் நடந்து சென்றார்கள். தோழர் எழில் கூட தனது குழந்தைகள் எங்கே என்று பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவன் 9ஆம் வகுப்பு, இன்னொருவன் 5ஆம் வகுப்பு. ‘முன்னே இருப்பார்கள் தோழர்’ என்றேன். ‘இல்லை ஆசிரியர் வேகத்துக்கு முடியாது. பசங்க பின்னாடி தான் வருவாங்க’ என்றார் சிரித்தபடி. அந்தப்பசங்களுக்கு ஊரில் உள்ள எல்லாத் தோழர்களும் பழக்கம். அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
நான் நடையை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் வந்துவிட்டேன்.
புதிய அரசியல் சூழலால் எனக்கு ஏற்பட்ட சோர்வு அப்போது தான் மண்டைக்கு உறைத்தது. “சே, இந்தத் 93 வயதில் அரசியலாகவும் சோர்ந்துபோகாமல் உடலாலும் சோர்ந்துபோகாமல் உற்சாகம் பீறிட ஒருவர் கண்ணுக்கு முன்னால் ஓட்டமும் நடையுமாக வாழும்போது, உனக்கென்னடா சோர்வு! இனி ஓடு” என்று மனம் புதுத்தெம்பு பெற்றது.
பெரியார் நடை தமிழ்நாடெங்கும் தொடரட்டும்! தமிழ்நாடு தந்தை பெரியார் வழியில் தலை நிமிரட்டும்!
சுயமரியாதை வாழ்க! சமத்துவம் மலர்க!
– இந்திரகுமார் தேரடி,
ஊடகவியலாளர்.
