சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நெருப்பு மழை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

இன்னும் ஆ…யிரம் மிசாக்கள் வந்தாலும்
நெருப்பாற்றில் நீந்தி திராவிடர் இயக்கம் வெற்றி பெறும்!
‘ஸ்டாலின்’ என்றால் இரும்பு மனிதர்! திராவிடர் இயக்கம் என்பது எஃகுக்கோட்டை! மோதினால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்!

ஆசிரியர் உரை

சென்னை, செப் 20 இன்னும் ஆ…யிரம் மிசாக்கள் வந்தாலும் நெருப்பாற்றில் நீந்தி திராவிடர் இயக்கம் வெற்றி பெறும்! ‘ஸ்டாலின்’ என்றால் இரும்பு மனிதர்! திராவிடர் இயக்கம் என்பது எஃகுக்கோட்டை! மோதினால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘நெருப்பாற்றில் நீந்திய காலம்” – கருத்தரங்கம்!

பெரியார் திடலில், ‘‘நெருப்பாற்றில் நீந்திய காலம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நெருக்கடி காலத்தில் சென்னை மத்திய சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து, தன்னையே வரலாற்று சாட்சியமாக முன்னிறுத்தி, அவதூறு செய்பவர்கள்  நாணும்படியாக தரவுகளுடன் விளக்கிவிட்டு, ‘‘இன்னும் 1000 மிசாக்கள் வந்தாலும், நெருப்பாற்றில் நீந்தி திராவிடர் இயக்கம் வெற்றி பெறும்’’ என்றும், ‘‘ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர் என்று பொருள்’’ என்றும், ‘‘திராவிடர் இயக்கம் என்றால் எஃகு கோட்டை’’ என்றும், ‘‘இதில் மோதுகிறவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்’’ என்றும், மக்களின் பெருத்த ஆரவாரத்திற்கு இடையில் ஒரு பிரகடனம் போல அறிவித்தார்.

பங்கேற்றோர்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில், சென்னை பெரியார் திடலில், கடந்த 18.9.2026  அன்று, மாலை 6 மணிக்கு, ‘‘நெருப்பாற்றில் நீந்திய காலம்’’ எனும் தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சென்னை பெருநகராட்சியின் மேயர் பிரியா, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா  ஆகியோர், நெருக்கடி காலம் குறித்தான அவதூறுகளைக் கண்டிக்கும் வகையில் தங்களது நினைவுகளை வரலாற்றுத் தரவுகளுடன் பகிர்ந்து கொண்டனர். எழும்பூர் தொகுதி தி.மு.க. தெற்கு பகுதிச் செயலாளர் வி.சுதாகர் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர் பாபு முன்னிலை ஏற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, கே.எஸ்.ரவிச்சந்திரன், தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, தி.மு.க. மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சரிதா ராஜேஷ்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நாதன், திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், கிராமப் பிரச்சார குழுவின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை யாற்றினார்.

கழகத் தலைவர் உரை

அவர் தமது உரையின் தொடக்கத்தில், நெருக்கடி காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, அன்னை மணியம்மையாருடன் தான் திண்டிவனம் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்ததாகவும், ஒரு துண்டுச்சீட்டு மூலம் அன்னையாருக்கும் தனக்கும் அத்தகவல் சொல்லப்பட்டதாகவும், தோழர்களுக்கு அன்னை மணியம்மையார் உரிய அறிவுரைகளை வழங்கிவிட்டு, சென்னை திரும்பியதாகவும், காத்தி ருந்த காவல் துறையினர் தன்னை கைது செய்ததாக வும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஷா கமிசன், மு.மு,இஸ்மாயில் கமிசன் ஆகியவற்றுக்கான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, ‘‘உண்மை எதையும் தெரிந்துகொள்ளாமல் பதவி கிடைத்துவிட்டது என்பதற்காக சிலர் துள்ளிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையைத் தோலுரித்துக் காட்டும்படியாக இந்தக் கூட்டம் உள்ளது” என்று உரத்த குரலிலும், அழுத்தம் திருத்தமாகவும் பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

கொள்கைக் கருவிகள் தயாராகும்!

மேலும் அவர், “திராவிடர் இயக்கம் பதவிக்காக வரவில்லை. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக வந்தது” என்றும், “நாங்கள் மெழுகு அல்ல, இரும்பு. அந்த இரும்பை நெருப்பில் இட்டால், அது இன்ன மும் பதமாகும். அதுமட்டுமல்ல, அதை சம்மட்டி யால் அடித்தால், கொள்கைக் கருவிகள் தயாராகும்” என்றும் உவமை நயத்துடன் சொல்லி, மு.க.ஸ்டாலின் பற்றி பேசுகிறவர்களுக்குத்தான் இழிவு எனும் பொருளில் பேசியதும், எழுந்த ஆரவாரத்தால் இராதா மன்றமே நிறைந்துவிட்டது. மேலும் அவர், “தகுதி உள்ளவர்களுக்கு பதில் சொல்லலாம். இல்லாதவர்க ளுக்கு தேவையில்லைதான் என்றாலும், சொல்லித்தான் ஆகவேண்டும்” என்று கூறிவிட்டு, “யுத்த காலங்களில் முதலில் களபலியாவது உண்மைதான். இது யுத்த காலமல்ல, சத்த காலம்? பின்னர் அது செத்த காலமும் ஆகும்” என்று முக்காலத்திற்கும் பொருந்தும்படியாக அரசியல் கலந்து சொன்னதும், எதிர்பாராத இந்த கவித்துத்துவத்திற்கு வியந்த மக்கள் உணர்ச்சியும், ரசனையும் ஆட்கொள்ள, கைதட்டி ஆரவாரித்தனர்.

மானமிகு என்றால், உரிமைமிகு! போராட்டமிகு! சுயமரியாதைமிகு! அன்புமிகு! என்று பொருள்படும்!

தொடர்ந்து, “மாண்புமிகு என்பது இன்றைக்கு வரும். நாளைக்குப் போய்விடும். நாங்கள் மானமிகுவாளர்கள். என்றைக்கும் போகாது. மானமிகு என்றால், உரிமைமிகு! போராட்டமிகு! சுயமரியாதைமிகு! அன்புமிகு! என்று பொருள்படும்” என்று மானமிகுவுக்கு பல்வேறு பொருள்களைக் கூறியவுடன், திக்குமுக்காடிப்போன மக்கள் கைகளை வலிக்க வலிக்கத் தட்டினர். தொடர்ந்து, பெரியார் திடல் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் முகமாக, கலைஞர் மேடைகளில், ’ஆரிய நஞ்சு பட்டு தன் உடல் பாதிக்கப்பட்டிருக்கும் போதெல்லாம், எப்படி கீரியும், பாம்பும் சண்டையிட்ட பின்னர் கீரி, தன் உடலில் இருக்கும் நஞ்சை தீர்த்துக்கொள்ள ஒரு மூலிகையில் புரண்டெழுமோ, அதுபோல, எனக்கு மூலிகை பெரியார் திடல்தான்’ என்று, அடிக்கடிச் சொல்வதை எடுத்தாண்டுவிட்டு, ‘‘அப்படிப்பட்ட இனமானப் போராளிகளின் பாசறைதான் பெரியார் திடல்” என்றதும் மக்களின் ஆரவாரமும், கைதட்டலும் உச்சத்தை எட்டியது. அதன்பிறகு, சென்னைச் சிறையில் எட்டடி கொட்டடியில் தங்களுக்கு நடைபெற்ற கொடுமைகளை விவரித்தார்.

பதவியால் அளக்கப்பட வேண்டியவர் அல்ல; கொள்கையால் அளக்கப்பட வேண்டியவர்!

அதன் தொடர்ச்சியாக, “மு.க.ஸ்டாலின் பதவியால் அளக்கப்பட வேண்டியவர் அல்ல. கொள்கையால் அளக்கப்பட வேண்டியவர்” என்றதும் அரங்கமே அதை அங்கீகரிக்கும் விதமாக பலத்த கையொலிகளை பதிலாகத் தந்தது. மேலும் அவர், திராவிட மாடல் நாயகன் இந்தாண்டு விடுதலை மலரில், ‘சென்னை மத்திய சிறையில் என் உயிர் காத்தவர் ஆசிரியர்! இன்றும் காத்து வருகிறார்!’ என்று எழுதியிருப்பதை பலத்த கைதட்டல்களுக்கிடையே படித்துக்காட்டினார். மேலும் அவர், பா.ஜ.க., த.வெ.க. இரண்டு கட்சிக ளுக்கும் இடையில் இருக்கும் மிகமுக்கியமான ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “பா.ஜ.க. புராணங்களையே வரலாறாக மாற்றுகிறது. ஆனால், த.வெ.க.வோ, வரலாற்றையே புராணங்களாக மாறுகிறது” என்று இதுவரை யாரும் கணிக்காத ஆழமான ஒரு கருத்தை எடுத்துவைத்தார். மக்கள் தலைகளையாட்டி அதை ஏற்றனர்.

94 வயதை நெருங்கப் போகிற நானே சாட்சி!

மேலும் அவர், உண்மையை என்னவென்றே அறி யாத சிலரைச் சுட்டிக்காட்ட, “சினிமாவில்தான் டூப் போடுவார்கள். அரசியலிலும் டூப் வந்தாலும் வரும்” என்று, பலத்த சிரிப்புக்கிடையே சொல்லிவிட்டு, ‘‘இஸ்மாயில் கமிசன் என்றே ஒன்று இல்லை; மிசா என்றே ஒன்று இல்லை என்றும்கூட சொல்வார்கள்” என்றதும் வெடிச்சிரிப்பும், கைதட்டல்களும் எழுந்து அடங்கின. இதுவும் போதாதென, “எம்.எம்.இஸ்மாயில் கமிசன் அறிக்கையில் 50 ஆம் பக்கத்தில், ஸ்டாலின் அரசியல் கைதியாகத்தான் சிறையில் இருந்தார் என்பதை படித்துக்காட்டிவிட்டு, “94 வயதை நெருங்கப் போகிற நானே சாட்சியாக இருந்திருக்கிறேன். இதுபோதாதா உங்களுக்கு?” என்று படர்க்கையில் கேள்வி கேட்டு நிறுத்தியதும், புரிந்துகொண்ட மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர், கழகத் தலைவருக்கு பின்னாலிருந்து துண்டுச்சீட்டு நீட்டப்பட்டதும், வாங்கிப் படித்துவிட்டு,‘‘தஞ்சைக்கு செல்லவேண்டும். ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்பதை நினைவூட்டுக்கிறார்கள். இன்னும் ஒரு நாள் இதைப் பற்றி விரிவாகப் பேசலாம். நிறைவாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் ஆ…யிரம் மிசாக்கள் வந்தாலும், நெருப்பாற்றில் நீந்தி திராவிடர் இயக்கம் வெற்றி பெறும்! ‘ஸ்டாலின்’ என்றால் இரும்பு மனிதர்! திராவிடர் இயக்கம் என்பது எஃகுக்கோட்டை! மோதினால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்!” என்று மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாக்கி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவுசெய்தார். மக்கள் எழுந்து நின்று கையொலி செய்து கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர்.

மிகக்குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த இந்நிகழ்ச்சியில், தி.மு.க., திராவிடர் கழகம், தமிழ்தேசியக் கட்சித் தோழர்கள் மற்றும் பொது மக்கள் என அரங்கம் நிறைந்து, பால்கனியிலும் மக்கள் அமர்ந்து கண்டுகளித்தனர் என்பது குறிப்பி டத்தக்கது. கழகத் தலைவர் பேசப் பேச, அதற்கு எதிரொலியாக எழுந்த மக்களின் ஆரவாரம் என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஆட்சியின் அவலத்தை, மக்களின் உணர்வுகளின் மூலம் பிரதி பலிப்பதைப் போலிருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் இக்கொடுமைகள் நடந்திருந்தாலும், தானே சாட்சியாக இருந்துமே, உண்மைகளை பச்சையாக பொய்யாக்குகின்ற கொடுமைகளைப் பொசுக்குகின்ற வேகத்துடன், கழகத் தலைவர் உரை அமைந்திருந்ததால் பேசுகின்ற ஒவ்வொரு சொற்றொடரும் கைதட்டல் பெற்றுக்கொண்டிருந்தது. இரவு சரியாக 10 மணிக்குள் தனது உரையை நிறைவு செய்துவிட்டார். தொடர்ந்து, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தஞ்சைக்குப் புறப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *