ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்; அதன்படி உதவித் தொகை கிடைக்கவேண்டும்! தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த அண்ணல் அம்பேத்கர்
அயலகக் கல்வி உதவித் திட்டம் – எந்தக் காரணத்தை முன்னிட்டும் தடைபடக் கூடாது!

தஞ்சை, செப்.19  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின்படி, கிடைக்கவேண்டிய கல்வி உதவித் தொகை, மலேசியாவில் பயிலும் பாரதிதாசன் என்ற மாணவருக்குக் கிட்டாததுபற்றி தஞ்சையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சம்பந்தப்பட்ட மாணவனுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என்று சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளபடி, அந்த உதவித் தொகை கிடைக்கவேண்டும் என்று கூறினார்.

செய்தியாளர்களிடையே

தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (19.9.2026) காலை தஞ்சையில், மினி மாரத்தானைத் தொடங்கி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘தொண்டு செய்து பழுத்த பழம், தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக்குகையில் சிறுத்தை எழும், அவர்தாம் பெரியார், பார்’’ என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள், எதிர்நீச்சலில் வென்ற ஒரு மாபெரும் தலைவர். அதுமட்டுமல்ல, இளைஞர்கள், மாணவர்கள் எல்லோருமே சிறந்த சுய சிந்தனையாளர்களாக வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். உடல்நலம், உள்ள நலம் ஆகிய இரண்டு நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான், பெரியார் நமக்கு முன்னாலே அடையாளப்படுத்தப்படுகிறார்.

பெரியாரின் சிந்தனை வளம் முழுமையானது. அதேபோல பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்து தமக்கு வலிகள் இருந்தாலும், வலிமையோடு வழிகாட்டினார். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்வு என்று சொல்லும்போது உடலுக்கு மட்டும் நோயல்ல, உடல் மட்டும் எதிர்ப்புச் சக்தியை தாங்குவது அல்ல; மனமும், உள்ளமும் கூட எதிர்ப்புச் சக்திகளை எல்லாம் தாங்கி, வென்று காட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வயது இடைவெளி இல்லாமல் இந்த பெரியார் ஓட்டம், பெரியார் நடை!

எனவேதான், பெரியாரைப் பின்பற்றி நாம் நடக்கிறோம்! பெரியாரைப் பின்பற்றி நடந்தால், எல்லா வகையிலும் இறுதி வெற்றி நமக்கே! என்று கூறி வாய்ப்பளித்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அயலக கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மாணவர் அவதி!

செய்தியாளர்: அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் என்பவர் அவதிப்படுகிறாரே, அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: குறிப்பிட்ட மாணவரை என்ன காரணத்தினாலோ அவதிப்பட வைக்கிறார்கள். அதற்கு அதிகாரிகளோ அல்லது மற்றவர்களோ, மாணவனான பாரதிதாசனுக்கு இழைக்கப்பட்ட ஒரு கொடுமையைப்பற்றி கவனம் செலுத்துவார்கள் என்று என்று எதிர்பார்க்கின்றேன்.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தைச் சிறப்பாக, ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது தொடங்கினார்.

புதிதாக ஆட்சி தமிழ்நாட்டில் வந்தவுடன், அந்தத் திட்டத்தில் ஏதேதோ குற்றச்சாட்டைச் சொன்னார்கள். பொதுவாக, அதிகாரிகள் ஒரு நிலை எடுத்துவிட்டால், அதற்குக் காரண காரியங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

எப்படி இருந்தாலும், தமிழ்நாடு சமூக நீதித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சொல்லுகிறார், ‘‘உடனடியாக நாங்கள் உதவித் தொகையை அனுப்புவோம்’’ என்று.

தேவையில்லாமல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. வெளிநாட்டில், அதுவும் மலேசிய நாட்டில் படிக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருடைய படிப்பு, இடையூறு இல்லாமல் தொடர வேண்டும்.

அந்தக் கல்வி உதவித் திட்டம் தொடருவதன்மூலமாக, உலகம் முழுவதும் நம்முடைய தமிழ்நாட்டின் பெருமையும், தமிழ்நாட்டின் ஆட்சிப் பெருமையும் தெளிவாகப் புரியும்.

ஆட்சிகள் மாறலாம்; ஆனால், கொள்கைகள் மாறக்கூடாது, திட்டங்கள் மாறக்கூடாது.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *