சென்ற ஆகஸ்ட் மாதத்தில் (22.8.2026 அன்று) எனது சுற்றுப் பயணத்தில் சிவகங்கை கூட்டத்திற்கு சென்றேன்.
அப்போது அன்போடு வரவேற்றவர்களில் பல நண்பர்கள், கழகத்தவர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பலரும் அடங்குவர்.
முன்பு ஒரு காலத்தில், பெரியார், அண்ணா சிவகங்கை வருகை தந்தபோது, எதிர்ப்பைக் காட்டும் வகையில், பழைய செருப்புத் தோரணங்களை கட்டினர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை ஊர்வலமாக அழைத்து வந்தபோது, தோரணங்களைக் கட்டி அவர்களை ‘‘பெருமைப்படுத்தும்’’ விதமாக எதிர்ப்பைக் காட்ட முனைந்தவிடத்திலேயே அவரது தொண்டனையும் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
காரைக்குடியிலிருந்து வந்திருந்த கழகப் பொறுப்பாளர்களில், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சாமி திராவிடமணி அவர்கள் என்னிடத்தில் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை அளித்தார் (22.8.2026).
டாக்டர் வி. குமரேசன் அவர்கள் ஆங்கிலத்தில் எளிய முறையில் எவரும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், ‘‘The Sleep; unlocking healing & Longevity’’ என்ற தலைப்பில் சிறப்பாக எழுதிய தூக்கத்தின் முக்கியத்தை, நல்ல வண்ணம் மருத்துவ ரீதியாக, பல அறிவுறுத்தல்களை ஆய்வுப் பூர்வமாக, சாதாரண மருத்துவரல்லா மனிதர்களும் – அவர்கள் படித்த பட்டதாரிகளானாலும்கூட, இவ்வளவு அரிய, அறிய வேண்டிய செய்திகளை அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ள நூலை ஆழ்ந்து படித்தேன்! – வியந்தேன்! – மகிழ்ந்தேன்!
பல பேர்கள் – படித்தவர்களானாலும்கூட 8 மணி நேரத் தூக்கத்தின் முக்கியத்தைஉணர்ந்தவர்கள் அல்லர் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
நாள் ஒன்றின் தூக்கத்தை எவ்வளவு குறைக்கின்றனர்! ‘இரவுப் பறவை’யாக பலர் உள்ள நிலையில் இச்செய்திகளும், மருத்துவ ஆய்வுக் கருத்துகளும் படிப்பதற்காக மட்டுமல்ல; நம் நல்வாழ்வுக்கான, பாதுகாப்புக்கான ‘இலவச மருத்துவ அறிவுரைகள்’.
வருமுன்னர் காப்பதற்கும், ஒரு வாழ்க்கைக்கான காப்பீட்டுக் கருத்துரையாகும் இந்நூல்!
காரைக்குடி மாநகரம் அருகில் உள்ள எளிய பிரபலமான ஒரு கிராமத்தில் (‘அம்பிராணி’) விவசாய குடும்பத்திலிருந்து வந்து புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் படித்து (MBBS) பிறகு கடும் உழைப்பு, அறிவுத்தேடல் காரணமாய் அர்மேனியாவிலும், பிறகு அமெரிக்காவிலும் மருத்துவப் பட்டயங்களைப் படித்து, காரைக்குடியில் ‘குளோபல் மிஷன் ஆஸ்பிட்டல்’ என்பதை நிறுவி, ஓர் அறக்கட்டளையும் அதன் மூலம் நடத்தி வரும், உழைப்பில் உயர்ந்த டாக்டர் இவர்.
தான் கற்றதை, பெற்றதை மற்ற மனித குலத்திற்கு அளிக்கும் சமூகப் பொறுப்புணர்ச்சியின் உந்துதலாக சிறந்த மருத்துவ தொண்டறத்தினை செய்துவருவதோடு, தூக்கம் நம் ஆயுள் விருத்திற்கும், உடல் நலப் பாதுகாப்பிற்கும் முக்கியத் தேவை என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.
திராவிடர் கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பெரியார் நாட்காட்டியில் அறிவு மொழிகளுடன் ‘நல்ல நேரம்’ என்றும் போடப்பட்டுள்ளது (நல்ல நேரம் – ‘24 மணி நேரமும்’ என்று).
சிலர் ேகட்பார்கள் ‘‘என்ன சார் தூங்குவதுகூட நல்ல நேரமா?’’ என்று கிண்டலாக!
அவர்களுக்குச் சரியான பதில்… இந்நூல்!
ஆம், அது மிக நல்ல நேரம்தான் – அப்படித் தூங்காதவர்கள் – தூக்கத்தினைக் குறைத்துக் கொள்வதால் தங்கள் நல வாழ்வை மட்டுமல்ல; ஆயுளையும் குறைத்தவர்கள் – ‘‘மருத்துவக் குற்றவாளிகள்’’ ஆவார்கள் என்பதை இந்த மருத்துவ நூல் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக பல்வேறு முக்கிய மருத்துவ, அறிவியல் நிபுணர்களின் ஆய்வுகளை சான்றாகக் காட்டி – நல்ல நேரத்தை நாட்டு நலப்பணியைத் தொண்டறமாக்கி ‘‘யாம் பெற்ற அறிவு, அனைவரும் அறியட்டும்’’ என்று அறிவை விரிவு செய்து அனைவருக்கும் வழங்கியுள்ளார்.
அவர் பெற்ற பல விருதுகள் அவருக்கான ஊக்க மாத்திரைகள் – மனிதர்கள் தூக்க மாத்திரைகளைத் தேடாமல், ஆயுளை நீட்டும் அரிய வழிமுறை வழிகாட்டி நூலை எழுதியுள்ள அவருக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!
தமிழிலும் இதை மொழிபெயர்த்து பரப்ப வேண்டிய படைப்பு தேவை! ‘செயத்தக்க செய் யாமையானும் கெடும்’ என்பதால் இதைச் சுட்டிக் காட்டி, பாராட்டும், வாழ்த்தும்!
