வியப்பு தரும் வெள்ளரிக்காய் மகத்துவம்! (1)

3 Min Read

நம் ஊர்களில் எளிமையாகக் கிடைப்பது வெள்ளரிப் பிஞ்சு.

நமது கிராமங்களிலும், சாலையோரங்களில் வீட்டுத் தோட்டத்திலும், வயல்வெளிகளிலும் சாகுபடி செய்யப்படும் வெள்ளரிப் பிஞ்சுகள், வெள்ளரிக்காய்கள் கோடைக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்ற பக்க உணவாக  நமக்கெல்லாம் கிடைத்த அரியதோர் சிறந்த துணை உணவு ஆகும்!

வெள்ளரிப் பிஞ்சு விவசாயத்தை விரிவாக நடத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, பயன் அடைந்த விவசாயம் படித்த பல நண்பர்களும் நமக்குண்டு!

இப்போதெல்லாம் – வெப்பச் சலனம் ‘எல் நினோ – சூப்பர் எல்நினோ’ என்ற கடும் வெப்பம், குறைந்த மழை, பருவம் தவறிப் பெய்து, ஏற்படும் பெரு வெள்ளம் போன்ற பருவங்களையே பாழாக்கிவிட்ட ஓர் இயற்கைச் சூழல், உலக மக்களை – குறிப்பாக அய்ரோப்பாவின் பல நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டுள்ளது.

நம்மில் மிகப் பலர் இந்த அவதியை நாளும் அறுவடைச் செய்து கொண்டிருந்தாலும் அதற்குரிய நீண்ட காலத் தீர்வைப்பற்றி பாதிப்புக்குள்ளான நம் மக்கள் பொறுப்பை உணர்ந்து, தடுப்பு நடவடிக்கைகளை – மனிதகுலம் சிந்தித்து செயலாற்றுவதன்மூலம் கடமையாற்றுபவராக  இல்லாமல், ஏனோ இன்னமும் செயலில் செய்யாமல்,  வெறும் திண்ணை வேதாந்தம் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம்! இது ஒருபுறம்.

கடும் வெப்பச்  சலனம், தூய காற்றும் – குளிர் காற்றினையும் நாம் பெற முடியாத நிலையில், தனியாத தாகம் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாத நிலையில், ஓர் எளிய துணை உணவு – ‘தீனி’ வெள்ளரிக்காய் என்னும் விடியல்!

பெரிய பெரிய அய்ந்து நட்சத்திர ஓட்டல்களில் அதைத் துண்டு துண்டாக அரிந்து, மிளகுத்தூள், உப்பு அல்லது ‘வினிகர்’ என்ற புளிப்புச் சுவையூட்டும் வகையில் கலந்து அல்லது எலுமிச்சைச் சாறு பிழித்து, அதனைச் சற்று அழகாக ஒரு தட்டில் வைத்து, இரு நூறு, முன்னூறு அதற்கே (கட்டணம்) விலை வைக்கப்படுகிறது!

மாணவப் பருவத்தில் வெள்ளரிப்பிஞ்சை வாயில் வைத்த கடித்துக் கொண்டே  விரைந்து நடந்து சென்ற அனுபவம் உங்களில் பலருக்கு நினைவுக்கு வருகிறதல்லவா?

அதுபற்றி அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான டப்ட்ஸ் (Tufts University)  மருத்துவத் துறையில்  உள்ளவரும் – ஊட்டச்சத்து நிபுணருமான அம்மையார் ‘கிம்பர்லி டாங்  (Kimberly Dong) என்பவர் தழை ஊட்டச்சத்து உணவுப் பட்டியலில் முதல் இடத்தினை இதற்கு அளிக்காவிடினும்கூட, ‘‘வெள்ளரிப்பிஞ்சு, காய் களைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் துணை புரியக் கூடியது’’ என்கிறார். ‘‘பழ வகைகள், காய்கறிகளுக்குரிய ஊட்டச்சத்துகளுக்கு அடுத்தபடியானது’’ என்கிறார்.

அதிக வெப்பச் சூழல் மக்களை வாட்டி வதைக்கும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெகுவாகக் குறையவே செய்யும். அதனால் உடலில் Dehydration ஏற்பட்டு உடலில் அரிப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது; நாக்கு வறட்சி ஒரு பக்கம்; செரிமானத்தையும் இந்தநிலை பாதிக்கவே செய்யக் கூடும்.

இந்த வெள்ளரிக்காய், வெள்ளரிப் பிஞ்சு துண்டுகளை தயிரில் கலந்து அல்லது வெறுமனேகூட சாப்பிடுங்கள். நீர்ச் சத்துக் குறைவதைத் தடுக்க உடலுக்கு உறுதுணையாக இருப்பதுடன், எடை அதிகரிக்காமல் உடற்குரிய சத்துகளைத் தரவும் பெரும் அளவுக்கு உதவி செய்யும்!

ஆனால் சாலையோரம் தூசுபடிந்திருந்தாலோ அல்லது வேறு எப்படியோயிருந்தாலும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, அதன்பின் நறுக்கிச் சாப்பிடுவது முக்கியம்.

எனக்கேகூட ஒரு கசப்பான அனுபவம் உண்டு. வெள்ளரிப் பிஞ்சுகளை – பகலில் இராமேசுவரத்திருந்து திருத்தணி வரை சென்ற பிரச்சாரப் பயணத்தில் வழியில் மானாமதுரைக்கு முந்தைய ஓர் ஊரில்   தாகத்தில் கழுவாமல் கடித்துச் சாப்பிட்ட பிறகு, வயிற்றில் பொறுமலும் – வயிற்றுப்போக்கும் நாள் முழுவதும் வாட்டி எடுத்ததை என்னுடன் பயணம் செய்த தோழர்கள் நன்கு அறிவார்கள்.

வெள்ளரிப்பிஞ்சு – கலோரிகளையும் நமது உடலுக்குத் தருகிறது.

தோலை உரிக்காத வெள்ளரிக்காய்கள் 300 கிராம் எடையுள்ளது. ஒரு கப் தண்ணீருடன் 45 கலோரிகளை நம் உடலுக்குத் தருகிறது என்கிறார் இது பற்றி ஆய்வு செய்த அந்த ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் (கிம்பர்லி டாங்) அம்மையார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *