“தேசிய நூல் – பகவத்கீதையா? திருக்குறளா?” நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆய்வுரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜாதியைக் காப்பாற்றி வைத்திருப்பதில்
மனுதர்மத்தை விட பகவத்கீதை ஒருபடி மேலாக இருக்கிறது

 

சென்னை, செப். 16- தேவ நேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “ஜாதியை ஆணியடித்து வைத்திருப்பதைப் போல் காப்பாற்றி வைத்திருப்ப தில், மநுதர்மத்தை விட, பகவத் கீதை தான் ஒரு படி மேலாக உள்ளது” என்று, சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

கவிச்சிங்கம் கண்மதியனின். மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 14.09.2026 திங்கட்கிழமை அன்று, மாலை 6 மணிக்கு, அண்ணா சாலையில் உள்ள, தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நீதியரசர் சு.இராஜேஸ்வரன் உரையாற்றினார். வா.மு.சே. திருவள்ளுவர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் செய லவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், முனைவர் க.அன்பழகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, புலவர் வெற்றியழகன், பாவ லர் பா.வீரமணி ஆகியோர் முன் னிலை வகித்து சிறப்பித்தனர். பொறியாளர் முனைவர் த.கு,திவாகரன், தோழர் இளவரச அமிழ்தன் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பித்தனர். கணை யாழி வாழ்த்து மடலை வா.மு.சே.திருவள்ளுவர் வாசித்தார்.

நிகழ்வில், “தேசிய நூல் – பகவத் கீதையா? திருக் குறளா?” எனும் நூலை, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, மாண்பமை நீதியரசர் சு.இராஜேசுவரன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, “உலகப் பொது நூல் திருக்குறள் (இயல்புரை) ஒரு வரி ஓவியம்” நூலை, செவாலியர், டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டார். அதேபோல், ”உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) ஒருவரி உரை ஓவியம்” (தமிழ் + ஆங்கிலம்)  நூலை, மேனாள் இணைத் துணை வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (பல்கலைக் கழகம்), தஞ்சாவூர், சுவாமிநாதன் தேவதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், கவிச்சிங்கம் கண்மதியன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, கண்மதியன் அவர்களுக்கு, வ.மு.சே.திருவள்ளுவர் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டது. மகுடம் சூட்டப்பட்டு, மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முன்னதாக, டி.கே.சி.கலைவாணன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். தொடக்கத்தில் குடியாத்தம் குமணன் பகுத்தறிவுப் பாடல் களையும், டி.கே.சி.கலைவாணன் தமிழிசைப் பாடல்களையும் பாடினர். கவிச்சிங்கம் கண்மதியன் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.10,000/- கழகத் தலைவரிடம் அளித்தார். நிறைவாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான் வெளியிட்ட நூலை ஆய்வு செய்து உரையாற்றினார்.

அவர் தமது உரையை, “முத்தமிழ் போல், முப் பாலைப் போல் சிறப்பான மூன்று நூல்கள் இங்கே வெளி யிடப்பட்டுள்ளன” என்று பலத்த கைதட்டல்களுடன் தொடங்கினார். தொடர்ந்து, “நவில்தொறும் நூல்நயம் போன்ற பல நூல்களை அவர் வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துவிட்டு, “சிங்கத்திற்கு இங்கே முடிசூட்டுவிழா நடத்தியிருக்கிறோம்” என்று முடிப்பதற்குள் வெடிச்சிரிப்பு எழுந்தது. “அதுகூட பரவா யில்லை. சிங்கத்துக்கு இது வரை யாரும் கணையாழி போட்டதில்லை” என்றதும், வெடிச்சிரிப்புத் தொடர்ந்தது. அடுத்து, கண்மதியனின் தந்தையார் சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ்., பற்றியும், இன் றைக்கு சர்ச்சைக்குரிய விசயமாக பலராலும் பேசப் பட்டுக்கொண்டிருக்கும், நெருக்கடிநிலையைப் பற்றி ஒரு அரிய தகவலைக் குறிப்பிட்டார். அதாவது, நெருக்கடி நிலை முடிந்து, பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், காஞ்சிபுரத்திற்கு சங்கராச்சாரியாரைப் பார்ப் பதற்கு வருகை தரவிருந்ததையும், திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் முன் னெடுக்கப்பட்டதையும் நினைவூட்டி, அப்போது காஞ்சி புரம் ஆட்சியராக இருந்த கண்மதியன் அவர்களின் தந்தை சுப்பிரமணியம், துணிச்சலாக தமிழ்நாடு அரசுக்கு சட்டஒழுங்கு பிரச்சினையைச் சுட்டிக்காட்டி, பிரதமரை வேறு வழியாக அழைத்துச் செல்லவேண்டும் என்று பரிந்துரைக்கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டி, பாரம்பரியமாக கண்மதியன் சுயமரியாதைக்காரராக இருப்பதை சுட்டிக்காட்டி, அவரைப் பெருமைப்படுத்தினார். அத்துடன், இந்திரா காந்தி அவர்கள் கைம்பெண் என்ற காரணத்தால், சங்கராச்சாரியார் அவரை, கிணற்றுக்கு அப்பால் இருந்து பார்த்த மனுதர்மக் கொடுமையையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மேலும் அவர், புத்தகம் பற்றி பேசும் போது, ”ஆய்வுரை என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும்” என்பதை சுட்டிக்காட்டிவிட்டு, “அப்படித்தான், “தேசிய நூல் – பகவத்கீதையா? திருக் குறளா?” என்ற புத்தகம் இருக்கிறது என்பதைச் சொல்லி, தன்னுடைய சட்டையைத் தொட்டுக்காட்டி, “சட்டையின் நிறத்தைப் பார்க்காதீர்கள். எங்கள் கருத்தின் திறத்தைப் பாருங்கள்” என்று, தாங்கள் ஓர்ந்து கண்ணோடாமல் எழுதியிருப்பதை ஆழமான பொருளுடன் எடுத்துரைத்தார்.

மேலும் அவர், கீதையின் மறுபக்கம் நூலைப் பற்றியும், அதில் சொல்லப்பட்டுள்ள ”சுதர்மம்” பற்றியும், அதற்கான பொருளை விளக்க, மகா பாரதப் போரில் இரண்டு படைகளும் மோதிக்கொள்ளும் நேரத்தில், அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணன் காதோடு காதாக 700 சுலோகங்களைச் சொன்ன பித்தலாட்டத்தின் மய்யக்கருத்தை விளக்கி, சுதர்மம் என்பது, ஜாதி தர்மம் குலைந்துவிடாமல் காப்பாற்றுவதுதான் என்பதை விளக்கினார். அத்துடன் அதை இன்னமும் ஆணியடித்தது போல் சுட்டிக்காட்ட, “ஜாதியைக் காப்பாற்றி வைத்திருப்பதில் மநுதர்மத்தை விட பகவத்கீதைதான் ஒருபடி மேலாக இருக்கிறது” என்பதை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, “திருக்குறள் தேசிய நூலாக வருவதற்கு எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கிறது. காரணம், அதில் ஜாதி,மத பேதமற்ற எல்லா மக்களுக்குமான நூலாக உள்ளது” என்று சான்றளித்தார். நிறைவாக, “இப்படிப்பட்ட நூல்களைத் தந்ததற்கு கவிச்சிங்கம் கண்மதியன் அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்” என்றும், “சிங்கம் சிங்கமாகவே தொடர்ந்து கர்ஜிக்கட்டும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறி தமது உரையை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து, கவிச்சிங்கம் கண்மதியன் ஏற்புரையை நன்றியுரையாக அமைத்து உரையாற்றினார். இறுதியாக, முனைவர் இளமாறன் முறைப்படி நன்றியுரை நல்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், பூவை தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன், வழக்குரைஞர் தளபதிபாண்டியன், தங்கமணி, அரும்பாக்கம் தாமோதரன், விடுதலைநகர் ஜெயராமன், ஆவடி முருகேசன் மற்றும் ஏராளமான தமிழ்ப்பெருங்குடி மக்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *