பெங்களூரு, செப்.13- பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழ்நாடு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) தெரி வித்தார்.
கருநாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவு நீர் காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலப்பதாக, தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், கருநாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) பெங்களூரு வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், ராமலிங்க (ரெட்டி) செய்தியாளர் களிடம் கூறியதாவது:
பெங்களூரு மாநகரில் உள்ள கால் வாய்கள் வாயிலாக தினசரி 2,825 எம்எல்டி கழிவு நீர் வெளியேறுகிறது. இதில், 1,364.5 எம்எல்டி கழிவு நீர், 37 சுத்திகரிப்பு மய்யங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.
பின்னர், சுத்திகரிக்கப்பட்ட நீர் கோலார், சிக்கப்பள்ளாப்பூர், துமக்கூரு ஆகிய அண்டை மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சுத்திகரிக்க நடவடிக்கை
மீதமுள்ள 47 சதவீத சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர் ரிஷபாவதி ஆற்றில் கலந்து கனகபுரா அருகேயுள்ள சங்கமத்தில் காவிரி ஆற்றில் கலந்து தமிழ்நாட்டிற்கு செல்கிறது. அதேபோல், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழ்நாட்டிற்கு செல்கிறது.
தமிழ்நாட்டிற்கு செல்லும் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 43 சுத்திகரிப்பு மய்யங்களை புதிதாக உருவாக்க இருக்கிறோம். அதன்மூலம், 1,174 எம்எல்டி நீரை சுத்திகரிக்க இயலும். பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள தர நிர்ணய அளவுடன் இந்த சுத்திகரிப்பு மையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ராமலிங்கம் (ரெட்டி) தெரிவித்தார். காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கர்நாடக அரசு கழிவு நீரை கலந்து வருவதாக தமிழக அரசும், விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், கருநாடக அமைச்சரே அதனை ஒப்புக் கொள்ளும் வகையில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
