மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாங்கள் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வருவது –
வியாபாரத்திற்காக அல்ல;

மதுரை, செப்.11   ‘‘நாங்கள் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வருவது, வியாபாரத்திற்காக அல்ல. இவை ஆதாரத்திற்காக என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’  80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!

்கடந்த 21.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

என்னுடைய வயதை எப்போதும்
சொல்ல வேண்டிய அவசியமில்லை!

இதே மதுரையிலே மாநாடு– கருப்புச் சட்டைப்படை மாநாடு. வைகை ஆற்றங்கரை யோரம் அந்த மாநாடு நடைபெறுகின்ற நேரத்திலே  கோடைக்காலம்; மே மாதம்,  1946.  இன்றைக்கு உங்கள் முன்னால் பேசுகிற ஒரு பெரியார் தொண்டன், வாழ்நாள் பெரியார் மாணவனாகிய எனக்கு, அன்றைக்கு வயது 13. ஆகவேதான், என்னுடைய வயதை எப்போதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தோழர்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நான் அதை மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறவன். ஆனால், அவர்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பரவாயில்லை, அதனால் ஒன்று மில்லை. எத்தனை முறை சொன்னாலும், நான் எனது வயது எண்ணைத் திருப்பிப் போட்டு வேலை செய்யக்கூடியவன்தான்.

‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த செய்திகள்
‘தங்கள் பார்வைக்கு!’

அந்த வகையில் வருகிற போது நண்பர்களே, 1946 கருஞ்சட்டைப் படை மாநாட்டைப் பற்றி, மதுரை தோழர்களைப் பாராட்ட வேண்டும்.  வேறு யாரும் செய்யாத ஒரு புதுமையைச் செய்வார்கள், மதுரை திராவிடர் கழகத் தோழர்கள். மாநாட்டு அழைப்பு என்பதை,  மற்ற மாநாட்டு அழைப்பிதழைப் போன்று தூக்கிப் போட்டுவிட முடியாது. இந்த அழைப்பிதழில், ஒரு வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக ‘குடிஅரசு’ ஏட்டில் மாநாடுபற்றியத் தகவல்கள்.  செய்தியாளர் நண்பர்களும் இதை நன்றாகக் கவனிக்கவேண்டும். இந்த வரலாறு உங்களுக்கு எங்கே புரட்டினாலும் கிடைக்காது. ஏனென்றால், வரலாற்றை இன்றைக்கு உயர் ஜாதிக்காரர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களும் அலட்சியப்படுத்துவார்கள். இது ஒரு சமூகப் புரட்சி வரலாற்றில், ஒரு சிறந்த மைல்கல். ‘A Landmark’  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையிலே, கருப்புச் சட்டைப்படை மாநாடு – மதுரையில் 11.5.1946  நடைபெற்ற முதலாவது மாகாண கருப்புச் சட்டை மாநாடு குறித்து, ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த செய்திகள் ‘தங்கள் பார்வைக்கு’ என்று எழுதி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் படிப்பதற்கு நேரமில்லை. ஏனென்றால், மற்ற செய்திகளைச் சொல்லவேண்டும்;  நீட் தேர்வைப் பற்றியும், அதனு டைய கொடுமைகள் பற்றியும் அதேபோல, நாம் அரும்பாடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய இட ஒதுக்கீடு பற்றியும் பல செய்திகள்! ‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல்’ மிகச் சுலபமாக இன்றைய ஆர்எஸ்எஸ் அரசு, மோடி அரசு, பிஜேபி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால், அவசர அவசரமாக நாடாளுமன்றத்திலே புதிய ஒரு கற்பனையை உருவாக்கி, உயர்ஜாதிக்காரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்.

இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, அது ‘‘பசித்த வனுக்குச் சோறு தேவை; பசியேப்பக்காரனுக்கு விருந்து தேவை. புளியேப்பக்காரனுக்கு மருந்து தேவை.’’ இதை நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவேதான், மிக முக்கியமாக மருந்து கொடுக்க வேண்டியவருக்கு, விருந்து கொடுத்து கொண்டிருக்கக்கூடிய வாய்ப்புதான் EWS என்று சொல்லக்கூடிய ஒன்று.

பார்ப்பனப் பிள்ளைகளுக்கு எல்லாம், நம்முடைய கருவூலத்திலிருந்து
வாரி வாரிக் கொடுத்தார்கள்!

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்  என்றால், நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் சம்பாதிக்கின்றவர், ஏழைகள். யாருடைய கணக்கில்? ஆர்எஸ்எஸ் கணக்கில். யாருடைய கணக்கில்? மோடி அரசாங்கத்தினுடைய கணக்கில்? அதைச் சொல்லி இங்கே இருக்கிற பார்ப்பனப் பிள்ளைகளுக்கு எல்லாம், நம்முடைய கருவூலத்தில் இருந்து வாரி வாரிக் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, அவர்கள் வேறு வகையில் உயர்ந்து வருகிறார்கள். ஆனால், நம்மாள் 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போகிறார்களே, அவர்களுக்கு மாற்று சேலை கிடையாது. மற்ற வசதிகள் கிடையாது. அதைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும். இவை அத்தனையும் சொல்லவிருக்கிறேன். இவ்வளவு குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதற்காகத்தான்,  புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கின்றோம். தோழர்களே,  தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளுடைய அந்தப்  புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். தோழர்களும் கொண்டு வருவார்கள்; தயவுசெய்து நீங்கள் அவற்றை வாங்க வேண்டும்; படிக்க வேண்டும்; பரப்ப வேண்டும்.

நீட் தேர்வுக் கொடுமையினால் மாணவச் சிங்கங்களை நாம் இழந்துள்ளோம்!

ஏனென்றால் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், பல மணி நேரம் ஆகும். ஆனால், இன்றைக்கு சொல்லக்கூடிய பழைய வரலாறு உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, அது முதல் பகுதி வரலாறு – அதைச் சொல்வது இரண்டாவதாக இருக்க வேண்டும் என்றுதான் முதலாவதாக இட ஒதுக்கீடு, நீட் தேர்வுபற்றிச் சொல்கிறேன். இதிலே இரண்டு புத்தகங்கள் மிக முக்கியமானதாகும். நீட் தேர்வு, நாளைக்குக்  தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் தொடங்கவிருக்கிறது. உங்களுக்குத் தெரியும், எத்தனை தோழர்களை,  எத்தனை மாணவச் சிங்கங்களை நாம்  இழந்துள்ளோம் என்று. டாக்டர் ஆக வேண்டும் என்ற விழைவு கொண்டிருந்தவர்கள் எல்லாம், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன்? இந்த நீட் தேர்வுடைய கொடுமை. இந்த நீட் தேர்வு என்பது, சட்ட விரோதமானமானதாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அவர்கள் பயிற்சி தேர்வு நடத்துவது, மாநில அரசாங்கத்தினுடைய உரிமை. இன்னுங்கேட்டால், மாநில அரசாங்கம் மட்டு மல்ல, பல்கலைக் கழகத்திற்கு மட்டுமே உரிமை, அரசியலமைப்புச் சட்டப்படி.

 ‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி!’’

இதோ இந்தப் புத்தகத்தில் விளக்கம் இருக்கிறது. ‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி’’ என்ற இந்தப் புத்தகத்தை பார்த்தீர்களேயானால், இங்கே வழக்குரைஞர்கள் பலர் இருப்பார்கள்; ஆனால், அவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு செய்தி; பல நீதிபதிகள், ஆய்வாளர்கள் எல்லாம் எடுத்துச் சொன்ன பிற்பாடு வரக்கூடிய ஒரு செய்தி பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இருக்கிற அதிகாரம் தேர்வு நடத்துவது. ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ் அரசு, அதற்கு முன்னால் இருந்த அரசுகள் திட்டமிட்டே அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்வு முகமை என்று ஒன்றை உருவாக்கிக் கொண்டு வந்தார்கள். அது ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பதை உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்டி ருக்கிறது. அதனால்தான் டில்லியிலே அவ்வளவு பெரிய போராட்ட நிலை. ஒன்றிய கல்வி அமைச்சரை மாற்றினால் மட்டும் போதாது. மாணவர்களை, அவர்கள் திசை திருப்பினார்கள். ஒரு கல்வி அமைச்சர் போனால் என்ன? அதே இடத்தில், அதே கட்சிக்காரர் கல்வி அமைச்சராக வருவார்.  நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். அதைப் புரிந்தவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள், நாம்தான் முதலில் சொன்னோம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான். அந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் அதற்குத் துணையாக இருந்தார்கள்.

பாடம் சொல்லிக் கொடுக்கிற
அறிவு ஆசான் தந்தை பெரியார்!

தென்னிந்தியாவிலே முதலில் புரியவில்லை. சமூக நீதிப் புரியவில்லை. இப்போது புரிந்து கொண்டி ருக்கிறார்கள். வடக்கேயும் புரிந்து கொண்டார்கள்; அதனுடைய விளைவுதான் டில்லியிலே மாணவர்களின் கிளர்ச்சி. எப்போதுமே பெரியார் துவக்குவார், மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால், பாடம் சொல்லிக் கொடுக்கிற அறிவு ஆசான் – இந்த இயக்கம்.  மண்டல் கமிஷன் கூட அப்படித்தான். இட ஒதுக்கீடு என்றாலே அப்படித்தான்.

தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு செல்லாது என்று சொன்ன பிறகு ஏற்பட்ட தீர்ப்பும், அதற்காக நடந்த போராட்டமும் தான் இந்தியாவுக்கே இட ஒதுக்கீட்டைக் கொடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திறக்க வைத்த, இடம்பெற வைத்த ஒரு வழி. அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வியாபாரத்திற்காக அல்ல – ஆதாரத்திற்காக!

ஆகவே, ‘‘நீட் தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி’’ என்ற  புத்தகம்; அதுபோல ‘‘நீட்தேர்வு அவலங்கள் உயிரிழப்பு – உரிமைப்பறிப்பு – ஊழல்’’ என்ற புத்தகம்,  ‘‘நீட் நுழைவுத் தேர்வு கூடாது, ஏன்?’’  என்ற புத்தகம்.  அதைவிட EWS என்று சொல்லக்கூடிய ‘‘உயர் ஜாதியினருக்குப் பொருளாதார ரீதியிலான 10 சதவீத இட ஒதுக்கீடு கூடாது –ஏன்?’’ இந்தியாவிலேயே அந்தச் சட்டம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும்,  ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்,  தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிதான் அதை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக இருந்தது. அதை நாங்கள் பாராட்டினோம். அதே போன்று இன்றைய ஆட்சியும் அதில் உறுதியாக இருக்க வேண்டும், இருக்கும் என்று நம்புகிறோம்.  மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது என்கிறோம்.  ஏன், என்ன காரணம்? என்பதைப்பற்றி உங்களுக்கு விளக்க வேண்டும் என்றால்,  ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும். ஆகவே, நேரம் அதிகமாகிவிடும். எனவே, நாங்கள் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வருவது, வியாபாரத்திற்காக அல்ல. இவை ஆதாரத்திற்காக என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *