சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்கு சேவை செய்யவேண்டும் அய்.அய்.டி. மண்டியில்  வைக்கப்பட்டிருந்த பதாகையால் சர்ச்சை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிம்லா, செப்.7  இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அய்.அய்.டி. மண்டி வளாகத்தில், வர்ணாசிரம தர்மம் மற்றும் ஜாதிப் படிநிலையை நியாயப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, நிறுவனத்தின் கூட்டரங்கிற்கு வெளியே “பகவத் கீதை – காலத்தால் அழியாத ஞானம்” என்ற தலைப்பில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டது. அந்தச் சுவரொட்டியில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தன:

பார்ப்பனர்கள்: கடவுளின் செய்தியைப் பரப்புபவர்கள். க்ஷத்திரியர்கள்: சமூகத் தையும் ஆன்மிகத்தையும் பாதுகாப் பவர்கள். வைசியர்கள்: பொருளாதாரத்தை இயக்குபவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவுபவர்கள். சூத்திரர்கள்: பார்ப்பனர் களுக்கு சேவைச் செய்ய வேண்டியவர்கள்!

மேலும், இந்த நான்கு பிரிவுகளும் இயற்கையாகவும், அவரவர் பணிகளுக்கு ஏற்பவும் உருவாக்கப்பட்டவை என்றும், சமூக விதிமுறைகளை மீறி ஒரு வர்ணத்தின் வேலையை மற்றொருவர் செய்வது சமூகத்தில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் என்றும் பகவத் கீதையின் சுலோகத்தைக் குறிப்பிட்டு அதில் எழுதப்பட்டிருந்தது.

மாணவர்கள் அமைப்பிற்கும் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை:

மாணவர் விடுதி வளாகத்தில் இத்தகைய கருத்துகள் இடம்பெற்ற சுவரொட்டி ஒட்டப்பட்டது சமூக வலைதளங்களிலும் வளாக உறுப்பினர்களிடையேயும் கடுமை யான எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 6 அன்று அய்.அய்.டி. மண்டி இயக் குநர் லட்சுமிதர் பெஹரா வளாக உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “வளாகத்தில் ஒட்டப்பட்ட இந்தச் சுவரொட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த நிகழ்விற்கும் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக நான் எப்போதும் குரல் கொடுத்துள்ளேன். வளாகத்தின் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படாத வகையில் இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர், “சில மாணவர்கள் கீதையைத் தங்களுக்குத் தோன்றியவாறு தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இது மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், பட்டியலின மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பெஹரா அவர்கள் தொடர்ச்சியாகப் பகவத் கீதை வகுப்புகளை நடத்தி வருபவர் என்பதோடு, ‘இஸ்கான்’ அமைப்புடனும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்கான் அமைப்பினர் இன்றும் தொடர்ச்சியாக கீதையில் உள்ள ஜாதிப்பாகுபாட்டை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்ணப் பாகுபாடுகளும், அவற்றுக்கான வேலைகளும், ஒடுக்குமுறைகளும் பகவத் சீதையில் உண்மையில் சொல்லப் பட்டுள்ளவை தானே. அதை மறுப்பாரா அய்.அய்.டி. இயக்குநர்?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *