புதுடில்லி, செப்.7- தலைநகர் டில்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. பல அடுக்குமாடி கட்டடங்கள் விடுதிகளாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. டில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர்.
அந்த வகையில், அங்குள்ள நானக்புரா குருத்வாரா அருகே 5 மாடி கட்டடம் ஒன்று மாணவர் விடுதியாக இயங்கி வந்தது. இதில் 15-க்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. இவற்றில் கேரளம், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த கட்டடத்தின் அடித்தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்த கனமழையால், கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று (6.9.2026) பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் விரைந்து வந்து, உள்ளூர்வாசிகளுடன் இணைந்து மீட்புப்பணிகளை தொடங்கினர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட அவசர கால படைகளும் வரவழைக்கப்பட்டன.
அவர்கள் முதலில் 9 பேரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் பலியானர்கள். மீதமுள்ள 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ப
