லக்னோ, செப்.7– உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு முறை முதலமைச்சராக இருந்த யோகி, மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், பாஜக அமைச்சர்கள் யோகி மீது கடுப்பில் உள்ளனர்.
இதற்கு காரணம் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தான். இந்த அதி காரிகள் முதலமைச்சர் யோகி சொல் வதைத்தான் கேட்கின்றனர்; துறை அமைச்சர்களைக் கண்டுகொள்வதே இல்லை என அமைச்சர்கள் கோபத் தில் உள்ளனர்.
துணை முதலமைச்சர் பிரி ஜேஷ் பதக் மருத்துவத் துறையின் அமைச்சராக உள்ளார். இவருக்குத் தெரியாமல் பல மருத்துவர்களை இடமாற்றம் செய்துள்ளார் இந்தத் துறையின் மூத்த அதிகாரி. இது குறித்து அந்த அதிகாரிக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார் பதக். ஆனால், அந்த மூத்த அதி காரியோ கடிதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.
துணை முதலமைச்சர் மட்டு மல்லாமல், பல அமைச்சர்களும் இப்படித் தங்களுடைய துறையின் செயலர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளனர். அண்மையில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், “என் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை; அவர்களை மாற்றுங்கள்” என முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகளா, அமைச்சர்களா யாருக்கு ஆதரவு அளிப்பது என குழப்பத்தில் உள்ளார் யோகி.
இன்னொரு பக்கம் இந்த அமைச்சர்கள் எழுதிய கடிதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உத்தரப் பிரதேச அரசியலில் பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டி ருக்கின்றன.
